தமிழ்நாடு எனும் வாழை தோட்டத்திற்குள் குரங்குகள் கூட்டம் அமைச்சரவையில் இருக்கின்றது, அந்த கூட்டத்திற்குள் நாளை புதிய குரங்கு நுழைய இருக்கின்றது என தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் கே. பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய கேபி ராமலிங்கம், “உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவதை கடைகோடி திமுக தொண்டன் வரை ஏற்றுக்கொண்டார்கள் என்றால், தாங்களும் ஏற்றுக்கொள்ள தயார். மு.க. ஸ்டாலினை இப்படி தான் கருணாநிதி அவர்கள் கொண்டு வந்தார். அவரை இப்போது திமுகவி்னர் ஏற்றுக்கொள்ளவில்லையா, ஏற்றுக்கொள்வது வேறு, சகித்து கொள்வது வேறு, இருக்கின்ற அமைச்சரவை சரியாக செயல்படவில்லையா, செயல்படாத காரணத்தினால் தான் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கபடுகிறாரா? அப்படியானால் ஸ்டாலின் தலமையிலான அமைச்சரவை செயல்படாத அமைச்சரவை என பொருள் ஆகாதா?

புயலே வரவில்லை பெரிய பாதிப்பு இல்லை, காற்றின் வேகம் சில இடங்களில் சிறு சிறு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது, புயல் தொடர்பாக தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை பாராட்டுகின்றேன், புயலே தங்களால் நின்றது என்றாலும் அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், அரண்மனைக்கு எதிராக எதிர்மனை போடக்கூடாது. தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகள், ஒரு நாடாளுமன்ற தொகுதியில் பாஜக எப்படி வெற்றி பெறுவது என திட்டமிடபட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. வருகின்ற ஜனவரி 2ம் தேதி தருமபுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநிலத்தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார், அதற்கான கூட்ட ஏற்பாடுகள் நடந்து வருகிறது” எனக் கூறினார்.