Homeசெய்திகள்அரசியல்அதிகரிக்கும் பாஜக துருப்பு சீட்டுகள்..! அதிமுகவின் பகடைக் காய்கள்..!

அதிகரிக்கும் பாஜக துருப்பு சீட்டுகள்..! அதிமுகவின் பகடைக் காய்கள்..!

-

- Advertisement -

ஜெயலலிதா மரணப்படுக்கையில் இருக்கும் போதே முதன் முதலாக அதிமுகவில் இருந்து உருவிய துருப்புச் சீட்டு ஒ.பி.எஸ். அடுத்தாக துரோகி பன்னீரை ஜெயலலிதா சமாதியில் தியான நாடகம் நடிக்க வைத்து, குருமூர்த்தி இயக்கிய திரைப்படம் அட்டர் பிளாப்!

சசிகலாவை சிறையில் தூக்கிப் போட்டு, டி.டி.வி தினகரனுக்கு திகில் கொடுத்து…தொடர்ந்து ரெய்டுகள் நடத்தி, அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களை பட்டியலிட்டு, பங்கும் பெற்றுக் கொண்டு, ” சரி, சுதந்திரமாக நடமாட அனுமதிக்கிறோம். ஆனால், அடிமைப் பத்திரம் எழுதி தந்தால் போதுமானது” என மைனர் டி.டி.வியையும், மாமி சசிகலாவையும் சைலண்ட் சிலீப்பர் செல்லாக்கி எப்போது வேண்டுமானாலும் ஏவக் கூடிய துருப்புச் சீட்டாக்கிக் கொண்டனர்.

அடுத்து, வேலுமணியை தூக்கி வேண்டுமளவு தாங்கிப் பிடித்து உடன் இருந்தே உடுக்கை அடிக்கும் துருப்புச் சீட்டாக்கி வைத்துள்ளனர்.

அவரும் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் அண்ணாமலை இரண்டாமிடத்திற்கு வர வரவழைத்து சொந்தக் கட்சியை மூன்றாமிடத்திற்கு தள்ளி, தன் விசுவாசத்தை வெளிப்படுத்தியதோடு, தன் குடும்ப விழாவில், ’பாஜக தலைவர்களே தன் பங்காளிகள்’ என பகிரங்கப்படுத்திவிட்டார்.

மயிலாடுதுறை இளைஞர்கள் படுகொலை: கடும் நடவடிக்கை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தற்போது அதிமுக கோட்டையில் இருந்து செங்கோட்டையன் என்ற செங்கல்லை உருவி, அவரது துரோகச் செயலால், கொந்தளித்துக் கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க – மக்கள் வரிப் பணத்தில் – ஒய் பிரிவு காவல் அரண் தந்துள்ளனர்!

40 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருக்கும் ஒருவர் தன்னை – தன் கட்சியினரிடம் இருந்தே தற்காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலையில் இருக்கிறார். ஆனால், அவரை முன்னிறுத்தி தான் அதிமுகவை பிளக்கும் அஸ்திரத்தை ஏவுகிறது பாஜக தலைமை!

இப்படி அதிமுகவில் துரோகிகளை உருவாக்கி – அவர்களையே துருப்புச் சீட்டாகவும் மாற்றி, கையில் வைத்துக் கொண்டு, ”திமுகவை என்ற எதிரியை வீழ்த்த அதிமுக ஒன்றுபட வேண்டும்” என உபதேசிக்கிறது பாஜக தலைமை!

’’துரோகிகள் கட்சிக்குள் வருவது கட்சியை பலப்படுத்துமா? பலவீனமாக்குமா?’’ – என்பதற்கு பாமரத் தொண்டன் கூட பளீர் பதில் தருவான். ”திமுக எங்கள் அரசியல் எதிரி – ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் எதிர்க்க பழகிய எதிரி. என்றைக்கும் எதிரியைப் பார்த்து நாங்கள் அஞ்சியதில்லை. நீ பாடம் நடத்தாதே பதரே, விலகிச் செல்’’ என்பான்.

எதிரியை விடவும், துரோகியே மிகவும் ஆபத்தானவன்!திமுக என்றென்றும் அதிமுகவின் எதிரி! ஆனால், பாஜகவோ உடனிருந்தே ஒட்டி உறவாடி சிறுகச் சிறுக கொன்றொழிக்கும் துரோகி ! அடங்க மறுக்கும் அதிமுகவை அடிபணிய வைக்க சகலவித சாமதான பேத தண்ட முன்னெடுப்புகளை செய்கிறது பாஜக. உன்னை வாழ வைப்பதற்கே இந்த மருந்து என்று சொல்லி பாய்சனை படிப்படியாக குடிக்கச் சொல்லி நிர்பந்திக்கிறது பாஜக!

அதாவது, உன்னை ஒரேயடியாக அடித்துக் கொல்லமாட்டேன். சிறுகச் சிறுக சாவதற்கு உன்னைத் தயார் படுத்துகிறேன்..’’ என்கிறது பாஜக தலைமை! இனி என்னாகுமோ, அதிமுகவின் எதிர்காலம்..? பாஜகவை பகிரங்கமாக எதிர்த்து போர்க் கோலம் பூணும் படைக்கு தலைமை தாங்க ஒரே ஒரு வீரன் கூட இல்லையே அதிமுக தலைவர்களில்! மடியில் கனம் இருந்தால்…, பயணப்படும் வழியெல்லாம் பதற்றமும், பயமும் இருந்தே தீரும்!

ஜெகபர் அலி  இறப்புக்கு நீதி வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி

சம்பாதித்ததும், அனுபவித்ததும் போதும் . அந்த பாவத்திற்கு பரிகாரம் தேட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தாவிட்டால் கட்சி அழிவது நிச்சயம்! மடியில் இருப்பதை எல்லாம் துறக்க துணிந்துவிட்டால் – இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று எதிர்க்கத் துணிந்துவிட்டால்..- என்ன செய்வான் அவன்? உன் பலவீனம் மட்டும் தானே அவனது பலம்!

”என்னை அழித்தாலும் கட்சியை அழிக்கவிடமாட்டேன்’’ என்ற ஒரு ஒற்றைக் குரலேனும் வெளிப்பட்டால் –அந்த தலைவனுக்குப் பின்னால் அணிவகுக்க லட்சோப லட்சம் தொண்டர்கள் தயார் ஆவார்களே..! இது நடக்குமா? இல்லை, கட்சி நடைபிணமாகி நாறுமா? பார்ப்போம்.

MUST READ