spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

-

- Advertisement -

இமையம்

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!வரலாற்றில் 20ஆம் நூற்றாண்டு பல விதங்களில் முக்கியமானது. ரஷ்யப் புரட்சி (1917) நடக்கிறது. சீனப் புரட்சி (1949) நடக்கிறது. மார்க்ஸும், எங்கல்ஸும், லெனினும், மாவோவும் உலகம் முழுவதும் கவனம் பெறுகிறார்கள். மார்க்சியம் உலக அளவில் புதிய சிந்தனைப் போக்கை உருவாக்குகிறது.1921ல் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வருகிறது. வரலாற்றில் புதிய மாற்றமாக இடஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு, பெண் கல்வி என்பதை நீதிக்கட்சி சாத்தியமாக்குகிறது. கல்வியும் வேலைவாய்ப்பும் சமூகத் தகுதியும் ஒரு பிரிவினருக்கு மட்டும்தான் என்ற நம்பிக்கையும் கருத்தாக்கமும் சட்டத்தின்மூலம் மாற்றப்படுகிறது. அச்சு இயந்திரத்தின் பரவலாக்கம், ஆங்கிலக் கல்வியின் பரவலாக்கம், அச்சிடப்பட்ட நூல்களை, பத்திரிகைகளை யார் வேண்டுமானாலும், எந்த இடத்திலிருந்துகொண்டும் படிக்கலாம் என்ற நிலை உருவாகிறது. சுதந்திரப் போராட்டமும் சமூகத்தில் மன எழுச்சியை உண்டாக்குகிறது. சமூகப் பற்றை உருவாக்குகிறது.

சமூகத்தின் கடைநிலை மக்களின் குரலை அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர் வெளிப்படுத்துகிறார்கள். பெரியார் காங்கிரஸிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, பத்திரிகைகளை நடத்த ஆரம்பிக்கிறார். பெரியாரின் பேச்சாலும் எழுத்தாலும் ஈர்க்கப்பட்டு, புதிய வாசகர்கள் உருவாகிறார்கள். எழுத்தாளர்களும் உருவாகிறார்கள். பல பத்திரிகைகளும் தொடங்கி நடத்தப்படுகின்றன. தி.மு.க. எழுத்தாளர்கள் எழுதுவதையும் பத்திரிகை நடத்துவதையும் ஒரு இயக்கச் செயல்பாடாகவே கருதினர். அதில் வெற்றியும் பெற்றனர். சமூகச் சூழலும் அதற்கு ஒத்திசைவாக இருந்தது. எழுத்தின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை நிகழ்த்த முடியும்.

we-r-hiring

அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும், கதைகளில் எழுதிய விஷயங்களைச் சட்டமாக்கி நடைமுறைப்படுத்த முடியும் என்று நிரூபித்தவர்கள், உலகில் தி.மு.க. எழுத்தாளர்கள் மட்டும்தான். அண்ணாவும் கலைஞரும் அதை சாத்தியப்படுத்தினார்கள். காலம் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உருவாக்கித்தந்தது.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த தி.மு.க.வினர் தங்களுடைய கருத்துப் பிரச்சாரத்தைக் கட்டுரை வடிவில் தருவதைக் காட்டிலும் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், திரைக்கதை, வசனத்தின்மூலம் சமூகத்தில் புதிய எழுச்சியை ஏற்படுத்தினர்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

மார்க்சியத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு, சுதந்திரப் போராட்டத்தையும் ஏற்றுக்கொண்டு, பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, புராண இதிகாசக் கட்டுக்கதைகளின் சமூகத்தாக்கத்தைப் புரிந்துகொண்டு, ஆண்டான் அடிமை முறை ஒழிப்பு, சமநீதி, சமூக நீதி கோட்பாட்டின் அடிப்படையில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தை முன்னிறுத்தி, தி.மு.க. எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் உள்ளடக்கம், கட்டமைப்பு, மொழிப் பயன்பாடு, கருத்துப் பிரச்சாரம் எப்படி வெற்றிபெற்றது என்பதையும், சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றத்தையும் பார்க்க வேண்டும்.

சமூக அவலங்களே சிறுகதைகளாக

தி.மு.க. எழுத்தாளர்களில் முதன்மையானவரும் மற்றவர்கள் எழுதுவதற்குப் பெரும் ஆற்றலாக இருந்தவருமான அறிஞர் அண்ணாவின் முதல் நெடுங்கதை ‘கோமளத்தின் கோபம்’. மொத்தமாக 108 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அண்ணாவின் சிறுகதைகளில் அதிகம் பேசப்பட்டது ‘செவ்வாழை’ பண்ணையார் வீட்டில் வேலை செய்யும் ஒரு வேலையாளின் மகனுடைய ஆசையைப் பற்றியது. ‘கருப்பண்ண சாமி யோசிக்கிறார்’,’பேய் ஓடிப்போச்சு’, ‘சொல்வதை எழுதேண்டா!’ ‘சொர்க்கத்தில் நரகம்’, ‘ரொட்டித் துண்டு’ போன்ற கதைகள் என்றும் போற்றப்படவேண்டியவை. இக்கதைகளில்தான் இலக்கிய அழகு கூடிவந்திருக்கிறது.

‘கருப்பண்ணசாமி யோசிக்கிறார் ‘ கதையில், சாமி ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்படுகிறது. அதனால் ஊர்வலம் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. சாமி சிலை நடுத்தெருவில் இறக்கிவைக்கப்படுகிறது. சாமிக்குக் காவலாக ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்படுகிறார். மொத்த உலகத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாக நம்பப்படுகின்ற ஈஸ்வரன், இப்போது ஒரு போலீஸ்காரரின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார், பார்வதியும்தான். காவலரின் கட்டுப்பாட்டிலிருந்து ஈஸ்வரனால், பார்வதியால் வெளியேற முடியாத நிலை. கடவுள் பெரியவரா, காவலர் பெரியவரா? அதிகாரம் யாரிடம் இருக்கிறது? நகைச்சுவை உணர்வு மேலோங்கிய கதை, எத்தனை முறை

படித்தாலும் அலுப்பைத் தராத, புதிய வெளிச்சத்தைத் தருகிற கதை. ‘ பேய் ஓடிப்போச்சு’ கதை, ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட இனத்தும் பெண்களை மட்டுமே பேய் பிடித்துக்கொள்கிறது. ‘எதனால்? என்ற கேள்வியை முன்வைத்து எழுதப்பட்டிருக்கிறது. ‘கருப்பண்ணசாமி யோசிக்கிறார்’ கதையில் இறை நம்பிக்கை என்பது எப்படி இருக்கிறது என்பதையும் ‘ பேய் ஓடிப்போச்சு’ கதையில் மூடநம்பிக்கைகள் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக வேர் ஊன்றியிருக்கிறது என்பதையும் எழுதிக்காட்டியிருக்கிறார் அண்ணா. சமூகத்தில் இருக்கிற அழுக்குகளை, இழிவுகளை எல்லாம் சிறுகதைகளாக எழுதினார். சமூக எதார்த்தம் என்னவோ அதுதான் அவருடைய சிறுகதைகளின் மையம், மக்களை அறியாமையிலிருந்து விடுவிப்பது என்பதுதான் அண்ணாவின் சிறுகதைகளின் நோக்கமாக இருக்கிறது. தேவர்களின், தேவதைகளின் கதையை எழுதாதவர் அண்ணா.

‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழ முடியாதவர்கள்’, ‘சங்கிலிச்சாமி’, தப்பிவிட்டார்கள்’ என்று பதினைந்து சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள கலைஞர், மொத்தமாக 76 சிறுகதைகளை எழுதியிருக்கிறார். ‘கண்ணடக்கம்’ அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. ‘கிழவன் கனவு’ (1945) கலைஞர் எழுதிய முதல் சிறுகதை. சங்கிலிச் சாமி, ‘ஒரிஜினலில் உள்ளபடி’, ‘நடுத்தெரு நாராயணி’, ‘குப்பைத் தொட்டி’ போன்ற கதைகள் என்றென்றும் படிக்கத்தக்கவை. போலிச் சாமியார்கள் எப்படி உருவாகிறார்கள், மக்களால் ஏன் கொண்டாடப்படுகிறார்கள். ஆன்மிகம், தெய்வ பக்தி என்பது ஏன் வியாபாரப் பொருளாக மாற்றப்படுகிறது என்பதைச் சொல்கிறது. ‘ஒரிஜினலில் உள்ளபடி’ கதை பாஞ்சாலி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

அச்சுக் கோப்பவன் ஒரு சொல்லை மாற்றி கம்போஸ் செய்வதால் ஏற்படும் விபரீகத்தைப் பற்றிய கதை ராமநாத செட்டியார், காமநாத செட்டியாராகிவிடுகிறார். கதையைப் தொட்டி’ கதை, படிக்கும்போது யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. குப்பைத் தொட்டியே பேசுவதுபோல் எழுதப்பட்டிருக்கிறது. குப்பைத் தொட்டி -சமூகத்தின் அனைத்து அவலங்களையும் பேசுகிறது. நல்ல உருவகக் கதை. கலைஞருடைய சிறுகதைகளில், விவரிப்புகளைக் காட்டிலும் அதிகக் கவனம் பெறுவது அவருடைய கவித்துவமான வசனங்கள்தான். திரைக்கதை வசனங்களுக்காகக் கொண்டாடப்பட்ட ஒரே எழுத்தாளர்.

‘குப்பைத் தொட்டி ‘ கதையில் முடிந்துபோன கல்யாணப் பத்திரிகைகள், நீத்தார் இறுதிச் சடங்குப் பத்திரிகைகள் மஞ்சள் நீராட்டு விழா, புதுமனை புதுவிழா அழைப்பிதழ்கள் என்று பலவற்றையும் கொண்டுவந்து குப்பையாகக் கொட்டுகிறார்கள். ஒரு பழைய புத்தகமும் குப்பையாக வந்து கிடக்கிறது. அந்தப் புத்தகத்தில் கடவுள்களின் காதல் லீலைகள், முனிவர்களின் காம லீலைகள், ஆண்டாளின் காதல் கதை வரை அச்சிடப்பட்டிருக்கிறது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையைக் கொண்டுவந்து ஒரு பெண் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுப் போகிறாள். சமூகத்தில் தேவையில்லை எனக் கருதுவது எல்லாம் எங்கே போகும்? கலைஞருக்குக் கதை எழுதுவதைவிடவும், சமூகத்தை விமர்சனம் செய்வதுதான் முக்கியமானதாக இருக்கிறது. ‘நடுத்தெரு நாராயணி’ கதையில், ‘தீபாவளி தமிழரின் திருநாளல்ல, தமிழரின் இறந்த நாளைக் கொண்டாடும் ஆரியப் பண்டிகை’ என்று ஒரு வரி வரும் தமிழர் பண்பாட்டுச் சிறப்பைப் பேசுவதே கலைஞருடைய சிறுகதைகளின் முக்கிய நோக்கமாகும். ‘பிரேத விசாரணை’ கதை ஆலய நுழைவுப் போராட்டம் பற்றிப் பேசுகிறது.

‘உடைந்த ஆசை’ இராம. அரங்கண்ணலின் சிறுகதைத் தொகுப்பு ‘உலகம் யாருக்கு’, ‘ஒரு அணா’, ‘கணக்குத் தீர்ந்தது’, ‘காதல் கீதம்’, ‘ஏழை’ ஆகிய சிறுகதைகள் முக்கியமானவை. சமூகத்தில் சிலர் வசதி படைத்தவர்களாகவும், பெரும்பான்மையோர் பரம ஏழைகளாகவும் இருப்பது ஏன் என்ற கேள்வியை ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு விதமாக எழுப்புகிறது. ஒரு அணாகூட இல்லாத ஒரு கம்போஸரைப் பற்றிய கதைதான் ‘ஒரு அணா’ வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் யாருக்கானவை என்பதை விளக்குகிறது ‘ஏழை’ இராம. அரங்கண்ணலின் சிறுகதைகள், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அதனால் மனிதர்கள் சந்திக்கும் இழிவுகளையும் பேசுகிறது. இவருடைய கதைகள் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சிக்கின்றன

தாலி என்னும் அடிமைச் சங்கிலி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் ‘இருண்ட வாழ்வு’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘இருண்ட வாழ்வு’, ‘மதுரை மீனாட்சி’, ‘லைலா மஜ்னு’, ‘நிரபராதி’, ‘தாலி’, ‘ராஜத்தின் திருமணம்’ போன்ற கதைகள் வாசகர் கவனத்தை ஈர்க்கக்கூடியவை. ‘தாலி’ கதையில், தமிழ்ச் சமூகத்தில் தாலி முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதையும், அது தரும் மதிப்பு என்ன, தமிழர் பண்பாட்டில் தாலி கட்டும் சடங்கு எப்போது வந்தது, பெண்ணுக்கு அது அடிமைச் சங்கிலியாக ஏன் மாறுகிறது என்பதையும் தெளிவாகச் சொல்கிறது. பண்ணையார் வீட்டில் வேலை செய்கிற வேலைக்காரியை, பண்ணையார் படுக்கைக்கு அழைக்க, வேலைக்காரி பண்ணையாரின் கன்னத்தில் அறைந்துவிடுகிறாள். அதனால், அவளுக்குத் திருட்டுப்பட்டம் கட்டப்பட்டு, ஊரைவிட்டு துரத்தியடிக்கப்படுகிறாள் யார் குற்றவாளி என்று கேட்கிறது, ‘நிரபராதி’. ஏ.வி.பி. ஆசைத்தம்பி, சிறுகதைகளில் பலவிதமான புதுமுயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றிப் பேசுகிறது, ‘இராஜத்தின் திருமணம்’ கதை.  கோயிலுக்குப் போனால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையைப் பற்றியது. திருச்செந்தூர் முருகன் கதை’. நோயாளிகள் மருத்துவமனைக்குப் போவார்களா, நோய் தீர கோயிலுக்குப் போவார்களா? என்றும் பொருந்தக்கூடிய கதை.

‘சஞ்சீவி சாலை’, ‘அதிர்ச்சி’, ‘அவள் குழந்தை’, ‘நச்சுப் பொய்கை’ போன்ற சிறந்த கதைகளை எழுதியவர் இளமைப்பித்தன், ‘சஞ்சிவி சாலை’, தரமான எழுத்தாளர்களுக்குக் கிடைக்காத பணம், கௌரவம் எப்படித் தரமற்ற எழுத்தாளர்களுக்குக் கிடைக்கிறது என்ற கேள்வியை வாசகர் முன் வைக்கிறது. இன்றும் பொருந்தக்கூடிய கதை, ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியை வகுத்துள்ள சமூகக் கட்டமைப்பை விமர்சிக்கிறது ‘நச்சுப் பொய்கை’. ‘அவதாரம்’ கௌதம் புத்தரைப் பற்றியது. மக்களை அறியாமையிலிருந்து விடுவிக்க விரும்பிய புத்தனை மக்கள் மதத் தலைவராக ஏன், எதனால் மாற்றினார்கள்? புத்தர் தோற்றுப்போன இடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. நேர்த்தியாக எழுதப்பட்ட கதை. ‘சொர்க்க லோகம்’, ‘நரக லோகம்’, ‘தேவ லோகம்’ என்று யாராவது சொன்னால், அவை எங்கே இருக்கின்றன, எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது என்று கேட்கிற தி.மு.க. எழுத்தாளர்களின் வரிசையில் இளமைப்பித்தனும் இருக்கிறார்.

இரா.இளஞ்சேரன் எழுதியுள்ள ‘இறைவனும் நானே’, ‘வண்ணப்புறாக்கள்’, ‘கோணல்’, ‘பவானி தங்கம்’, ‘சம்பந்தர் செத்த கதை’ போன்ற கதைகளைப் படிக்கும்போது, எழுத்தாளரின்மீது மதிப்பு கூடுகிறது. சம்பந்தர் செத்த கதை’ நம் நாட்டில் மதங்களுக்குள் ஏற்பட்ட போட்டி, அதனால் ஏற்பட்ட கொலைகள், சைவம் சிறந்ததா, வைணவம் சிறந்ததா? என்ற கேள்வியை எழுப்பி, மனிதமே சிறந்தது என்று கூறுகிறார், இளஞ்சேரன். மதம் மனிதர்களைப் பக்குவப்படுத்துவதற்குப் பதிலாக வெறியர்களாக, காட்டுமிராண்டிகளாக மாற்றுகிறது. இன்று உலகில் நடக்கும் அனைத்துக் கலவரங்களுக்கும் மதமே காரணமாக இருக்கிறது. ‘பவானி தங்கம்’ கதை நம்பூதிரிகளின் மேலாதிக்கம் பற்றியும் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மேலாதிக்கம் பற்றியும் பேசுகிறது. சுதந்திர மனமும் சிந்தனையும் கொண்ட ஒரு மனிதன் என்ன முடிவெடுப்பான் என்ற கேள்வியோடு முடிகிறது கதை. இளஞ்சேரனின் கதைகளில் சமூகத்துக்கெதிரான கோபம் வெளிப்படையாகவே தெரிகிறது. இறுக்கமான சாதி, சமயம், சடங்குகளுக்கு எதிரான குரலை வலுவாக எழுப்புகிறது, இளஞ்சேரனின் சிறுகதைகள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

பெண்ணிய அரசியல்

‘அந்தப் புன்னகை’, ‘சிவந்த கன்னம்’, ‘இரு கைதிகளின் கதை’, ‘குந்தமன் துறவு, ‘பேசா மடந்தை, ‘நன்றி கெட்டவர்கள்’ போன்ற அற்புதமான சிறுகதைகளை எழுதியவர், கே.ஜி.இராதா மணாளன். ‘குந்தமன் துறவு’, கௌதம புத்தரின் துறவு வாழ்க்கையைப் பேசுகிறது. புத்தனைப் பெரிய பொக்கிஷமாகக் கருதிய அதே மக்கள், காலப்போக்கில் எதனால அவரை மறந்துபோனார்கள்? கே. ஜி. இராதா மணாளன் மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதற்கு இந்த ஒரு கதையே போதும். கதையை எழுதிய பாங்கும், மொழியைப் பயன்படுத்திய விதமும் ஆச்சரியப்பட வைக்கிறது. ‘பேசா மடந்தை’ கதை நம்முடைய நாட்டிலிருக்கும் பெண்களுடைய அவல வாழவைப பற்றி பேசுகிறது. சாதியும் மதமும் பெண்களை எந்தெந்த வகையில் வஞ்சிக்கிறது என்பதை எழுதியிருக்கிறார். ‘குந்தமன் துறவு’ கதையில் தத்துவமாகப் பேசிய எழுத்தாளர், ‘பேசா மடந்தை ‘ கதையில், பெண்ணிய அரசியலை உாிமையை, சுயமரியாதையைப் பேசுகிறார். ‘அந்தப் புன்னகை கதையில், திப்பு சுல்தானின் அரண்மனையில் ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அரண்மனை என்றாலே சூதும் நயவஞ்சகமும், பொறாமையும், அதிகாரத்திற்கான வேட்கையும் நிறைந்த இடம்தானே. இரண்டு கைதிகளின் கதையும் முக்கியமான ஒன்றுதான். இரண்டு திருடர்களின் உறவு எப்படிப் போய் முடியும் என்பதைச் சொல்கிறது. நல்லவனுக்கு நல்லவனுடைய நட்பு. திருடனுக்குத் திருடனுடைய நட்பு கதையும் முடிவும் இதுதான். எதையுமே புனிதப்படுத்தாத எழுத்து.

பாரதிதாசன், அண்ணா, கலைஞரைத் தொடர்ந்து சாகித்ய அகாடெமியால் ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் நூல் வெளியிடப்பட்ட எழுத்தாளர்தான் டி.கே.சீனிவாசன். ‘ஊர்ந்தது உயர்ந்தால்’, ‘மலர்ச்சியும் வளர்ச்சியும்’ ஆகிய நெடுங்கதைகளையும், ‘உலக அரங்கில்’, ‘கடவுளால் ஆகாதது’, ‘குறள் கொடுத்த குரல்’, ‘எல்லைக்கு அப்பால்’, ‘கொள்கையும் ஓட்டமும்ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். ‘காவி உடையும், தாடி மயிரும் மக்களுக்குத் தருவதென்ன?’, ‘வேதம் மட்டுமே கல்வி அல்ல; அதற்கும் அப்பால் இருக்கிறது அறிவு’, ‘தினமதினம் கோடிக்கணக்கில் மக்கள் காண வந்தும் காட்சி கொடுக்காத கடவுள் மையப்படுத்தியும் கடவுளை மையப்படுத்தியும் நடக்கிற அக்கிரமங்களைப் எதற்கு’ என்ற வரிகள் ‘எல்லைக்கு அப்பால்’ கதையில் வருகிறது. கோயிலை பற்றி பேசுகிறது. மடமையிலிருந்து, மூடநம்பிக்கையிலிருந்து அறிவியல் சிந்தனைக்குக் கதாநாயகன் சந்திரன் எப்படி வருகிறான் என்பதைக கதை விளக்குகிறது.

‘கடவுளால் ஆகாதது’ கதையில், பெரியார் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். தமிழ்நாட்டு நவீன தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை, சமூகப் போராளிகளைக் கதாபாத்திரங்களாக மாற்றுவதில்லை. அப்படி எழுதினால், தங்களுடைய கதைக்கு இலக்கியத் தகுதி கிடைக்காது என்று நம்புகிறார்கள். இதுவும் ஒரு மூடநம்பிக்கைதான்.

எழுத்தாளர்களுக்கே மூடநம்பிக்கை இருந்தால் என்ன செய்வது? ‘பக்தி’ கதையில், “வேத, சாஸ்திர, புராணங்கள் கவிராயரின் கை ஆயுதங்களாயின. விடுதலை, திராவிடநாடு, போர்வாள், கொஞ்சம் சொந்த புத்தி இவைதான் தங்கப்பனுக்குக் கிடைத்த ஆயுதங்களும் அஸ்திரங்களும்” என்று எழுதியிருக்கிறார். இந்த வரிகளிலிருந்து டி.கே.சீனிவாசனின் சிறுகதைகளின் தன்மை என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். இப்படி எழுதுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.’குறள் கொடுத்த குரல்’ கதை, திருக்குறளின் மேன்மையைக் கதையாகவும் விவாதமாகவும் வாழ்வியலாகவும் பேசுகிறது. தன்னுடைய அரசியல் கொள்கையை ஒளிவுமறைவின்றி சிறுகதைகளாக எழுதியிருக்கிறார், டி.கே.சீனிவாசன். அடுத்த ஜென்மம், மறுஜென்மம், ஏழேழு பிறவிகள், சடங்குகள், சம்பிரதாயங்களின் மீதுள்ள நம்பிக்கைகளுக்கு எதிராக எழுதிய தி.மு.க. எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கிறார் டி கே.சீனிவாசன்.

தில்லை மறைமுதல்வனின் ‘நீறுபூத்த நெருப்பு’, ‘வெற்றியிலும் தோல்வி பெரிது’, ‘காலை நிலவு’, ‘பொறியில் சிக்கிய எலிகள்’ போன்ற கதைகள் வாசகர் மனத்தில் என்றும் நிலைத்து நிற்கும். ‘வெற்றியிலும் தோல்வி பெரிது’ கதை ஒன்றுக்காகவே தில்லை மறைமுதல்வன் போற்றப்படுவார். இராவணனைக் கொன்ற பிறகு சீதையிடம் வருகிறான் ராமன். அசோக வனத்தில் நடைபெறுகிறது இருவருக்குமான உரையாடல்:

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

“இந்த இலங்கைப் படையெடுப்பு உன்னை மீட்பதற்காக அல்ல. எனக்காக, என் பெயருக்கு வந்த மாசைத் துடைப்பதற்காக” என்று ராமன் சொன்னதும் சீதை நிலைகுலைந்துபோகிறாள். ‘தீயில் இறங்கி நிரூபிக்க வேண்டும்’ என்று கட்டாயப்படுத்தியபோதும், மீண்டும் வனத்திற்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோதும் -ராமன் சொன்னதை ஏற்றுதான் நடக்கிறாள். சீதை காவிய நாயகியாக உருவாக்கப்பட்டவள். அவளுடைய வார்த்தைகள் மட்டுமல்ல, அவளுடைய நடவடிக்கைகளும் வரையறுக்கப்பட்டதுதான். ராஜ வாழ்க்கையும் அரண்மனை வாழ்க்கையும் கதை, காவியங்களில்கூட வரையறுக்கப்பட்டதுதான். அதே நேரத்தில் ராமனிடம் சீதை, ‘இராவணனிடம் பெற்ற வெற்றியைவிட இப்போது நீங்கள் பெற்ற தோல்வி மகத்தானது” என்று சொல்கிறாள். கதையில் இந்த உரையாடல் இயல்பாக இருக்கிறது. நடத்தையில் இராவணன் மகத்தானவனா, ராமன் மகத்தானவனா என்ற கேள்வி எழுகிறது. யார் மேம்பட்டவன் என்பதை வாசகர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும். தில்லை

மறைமுதல்வனுடைய ஒவ்வொரு கதையும் படித்து ரசிப்பதற்கு ஏற்றது என்பதைவிடவும் கற்பதற்கு ஏற்றது. ‘பொறியில் சிக்கிய எலிகள்’ ஏழைப் பெண்களின் வாழ்க்கை நெருக்கடியைப் பேசும் கதை. காலம்தோறும் ஏழைப் பெண்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் சமூகத்தால் நடத்தை கெட்டவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்களுடைய நிலை என்ன?

சிறுகதை மன்னன் என்று போற்றப்பட்டவர் எஸ். எஸ். தென்னரசு அவர் எழுதிய சிறுகதைகளில், ‘முத்தாயி’, ‘விவாகரத்து’, ‘வெள்ளையன் கட்டிய மறவன் கோயில்’, ‘பூனை தொங்கிய புளிய மரம்’ போன்ற கதைகள் கவனத்தை ஈர்ப்பவை. ஒரு பெண், அதிலும் அழகாக இருக்கக்கூடிய பெண் – சமூகத்தில் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் எவ்வளவு? முத்தாயி துணிச்சல் மிக்கவளாகவும் நேர்மையான குணம் கொண்டவளாகவும் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள். இந்தப் பண்பு தமிழ்ப் பெண்களுக்கே உரியது என்று தென்னரசு சொல்கிறார். வைதீக முறையைக் கிண்டலடிப்பதில் வல்லவராக இருக்கிறார். “ஆடவர் கொண்டை போட்டிருப்பார்கள். அது வைதிகக் கொண்டை அல்ல” என்று முத்தாயி கதையில் வருகிறது. ‘பூனை தொங்கிய புளியமரம்’ கதையில் கிராமப்புறங்களில் ‘பேய்’ பற்றிய கதைகள், நம்பிக்கைகள் எவ்வளவு இருக்கின்றன என்பதைச் சொல்கிறது. ‘விவாகரத்து’ கதை தமிழ்நாட்டில் அறுத்துக்கட்டும் முறையைப் பற்றி பேசுகிறது. ‘குயிலின் குரல்’ ஒரு எழுத்தாளனைப் பற்றியது. பொதுச் சமூகத்தில் விற்பனையாகக்கூடிய எழுத்தாளர்கள் யார், விற்பனையாகாத எழுத்தாளர்கள் யார்? சமூக அக்கறையோடு எழுதுகிற எழுத்தாளர்களை ஏன் மக்கள் காலந்தோறும் புறக்கணிக்கிறார்கள்? புதிரான கேள்விகள்தான். ஆபாச எழுத்தாளர்கள், சமூக அக்கறையற்ற எழுத்தாளர்கள்தான் கொண்டாடப்படுகிறார்கள். முன்பு மட்டுமல்ல, இன்றும் இதுதான் சமூக எதார்த்தம். பிறப்பால் அவமானப்படுத்தப்பட்டவர்களை, ஒதுக்கிவைக்கப்பட்டவர்களை இலக்கிய வரலாற்றில் முதன்முதலாகக் கதாபாத்திரங்களாக வைத்துக் கதை எழுதியவர்கள் தி.மு.க. எழுத்தாளர்கள்தான். அதில் எஸ்.எஸ்.தென்னரசுக்கும் பங்கு இருக்கிறது.

லட்சியப் பாத்திரங்கள்

முரசொலி மாறனை எல்லோருக்கும் ஒரு அரசியல்வாதியாகத்தான் தெரியும். பொதுத் தளத்தில் அவர் அப்படித்தான் அறியப்பட்டிருக்கிறார். அவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பது பலரும் அறியாத ஒன்று. ‘வால்நட்சத்திரம்’, ‘செத்தும் கொடுத்தவன்’, ‘காட்டாறு’, ‘காட்டுப்பூனை’, ‘இலட்சியப் படம்’, ‘அன்பின் அருவி’, ‘காகிதப் படகு’ போன்ற கதைகள் முரசொலி மாறனை மிகச் சிறந்த சிறுகதை ஆசிரியர் என்று நிரூபிக்கின்றன. ‘வால்நட்சத்திரம்’ ஒரு எழுத்தாளனைப் பற்றிய கதை. லட்சிய நோக்கோடு எழுதுகிற எழுத்தாளர்களின் வாழ்க்கைத் தரம் எப்படி இருக்கிறது, ஆபாசக் குப்பைகளை எழுதுகிறவர்களின்.

வாழ்க்கைத் தரம் எப்படியிருக்கிறது என்பதைச் சொல்வதுதான் செத்தும் கொடுத்தான்’ ஒரு பிரபலமான நடிகரைப் பற்றியது. நடிகரின் நண்பர், நடிகர் இறந்த பிறகு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை ரகசியங்களை எழுதி, வியாபாரப் பண்டமாக்கிப் பணம் சம்பாதிக்கிறார். இதற்கான வழிமுறையைச் சொன்னவர், சம்பந்தப்பட்ட நடிகர்தான். தமிழ்ச் சமூகம் சினிமா நடிகர்களின்மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் மீது தீயை வைக்கும் கதை ‘தாமரையின் உறவு’ நிறைவேறாத காதல் கதையாக இருந்தாலும், லட்சியம் பேசுகிறது. தி.மு.க. எழுத்தாளர்களின் நோக்கமே ‘லட்சிய’ கதாபாத்திரங்களை உருவாக்கிக் காட்டுவதுதான். அவர்களுடைய லட்சியங்கள்தான், அவர்கள் எழுதிய கதைகளுக்கான இலக்கிய அழகு, மதிப்பு, பெருமை, சினிமா தயாரிப்பாளர், நடிகர், நடிகைகளின் நிலை பற்றி முரசொலி மாறன் தெளிவாகவும் அழகாகவும் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலையாகச் செயல்படுகின்ற சினிமாத் துறை சார்ந்து எவ்வளவு கதைகள் எழுதப்பட்டிருக்கும் ? இத்துறை சார்ந்து விமர்சனக் கண்ணோட்டத்துடன் நிறைய எழுதப்பட வேண்டும் என்பதை முரசொலி மாறனின் கதைகள் நமக்குச் சொல்லித்தருகின்றன.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

‘எச்சில் கனி’, ‘காதல் கதை’, ‘இன்னும் ஒன்று’, ‘ஞானப் பிறப்பு’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதியவர், ப.புகழேந்தி. இவருடைய கதைகளில் ‘கடிதம்’, ‘அபரஞ்சி’, ‘உறவு, ‘அர்த்தம்’, ‘மகனும் மங்கையும்’, ‘புயல் நிவாரண நன்கொடை’, ‘ஒரு காதல் கதை’ ஆகியவை மிகவும் முக்கியமானவை. ‘அறியாமை ஒழிக, பகுத்தறிவு வளர்க, சாதிப் பிரிவினை ஒழிக’ என்ற முழக்கத்தோடுதான் மகனும் மங்கையும் கதை மக ஆரம்பிக்கிறது, ‘வீதிக்கொரு சாமியும், சாமிக்கொரு பூசாரியும் வேண்டாம் என்றுதான் சொல்கிறோம்’ என்று ஓர் இடத்திலும், ‘சாதி இல்லை என்று சொல்லும் யாராவது தாழ்ந்த சாதியாரிடம் பெண் கட்டியிருக்கிறார்களா?’ என்று ஓர் இடத்திலும் வருகிறது. இந்த வரிகள் ப.புகழேந்தியின் கதைகளைப் புரிந்துகொள்ள உதவும். இவருடைய கதைகள் நேரடியாகப் பேசும் இயல்பைக் கொண்டிருக்கின்றன. ‘புயல் நிவாரண நன்கொடை’ கதையில், சிறிய தொகையைக் கொடுத்துவிட்டு, பெரிய தொகையைக் கொடுத்ததுபோல் பேப்பரில் எழுதிவைக்கும் நபரைப் பற்றி பேசுகிறது. ப.புகழேந்தியை ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளர் என்று தயக்கமின்றி சொல்லலாம். பிறப்பின் பெயரால், கடவுளின், மதத்தின், சாதியின் பெயரால் ஒலித்த அதிகாரக் குரல்களுக்கு எதிரான குரல்தான் தி.மு.க. எழுத்தாளர்களின் குரல். அதில் ப.புகழேந்தியின் குரலும் சேர்ந்திருக்கிறது.

திருச்சி செல்வேந்திரனைப் பேச்சாளர், கட்டுரையாளர் என்றுதான் பலரும் அறிந்திருக்கிறார்கள். அவருடைய சிறுகதைகளைப் படித்த பிறகுதான், அவர் மிகச் சிறந்த சிறுகதையாசிரியர் என்பது தெரிந்தது. ‘அவளைத் தேடி’, ‘சீதா ரகசியம்’, ‘இராமனுக்கே சீதையென்று வாழ்ந்தாள்’, ‘கோட்சேவுக்குக் காந்தியார் கோயில் கட்டுகிறார்’, ‘ஊருக்குள் ஒரு உலகம்’ போன்ற கதைகள் செல்வேந்திரனின் எழுத்து வன்மைக்குச் சான்றாக இருக்கின்றன சீதா ரகசியம்’, ‘இராமனுக்கே சீதையென்று வாழ்ந்தாள்’. இரண்டு கதைகளும் இராமாயணக் கதையைப் பகடி செய்யும் விதமாக எழுதப்பட்டுள்ளன. இராமனுடைய நடத்தை கேள்விக்குட்படுத்தப்படுகிறது.

இந்த இரண்டு கதைகளும் தர்க்கரீதியாக விவாதித்து, வாசகனுக்குத் தெளிவை ஏற்படுத்துகின்றன. ‘கோட்சேவுக்குக் காந்தியார் கோயில் கட்டுகிறார்! கதை முற்றிலும் அரசியலை மையப்படுத்தியது. கோட்சே கொன்றிருக்கவிட்டால் காந்தியின் நிலை என்னவாகியிருக்கும்? பரிதாபம்தான். காங்கிரஸ்காரர்களைவிடவும் காந்திக்கு நன்மை செய்தவர் கோட்சேதான் காந்தி பெயர் இருக்கும்வரை கோட்சே பெயரும் இருக்கும். நல்ல முரண். சொர்க்கத்துக்குப் போன காந்தி, மீண்டும் பூமிக்கு வந்து, தான் உருவாக்கிய மதிப்பீடுகள் எப்படிச் சீரழிந்து கிடக்கின்றன என்பதைப் பார்த்து மனம் நொந்த நிலையைப் பற்றி செல்வேந்திரன் எழுதியிருக்கிறார். கதையில் வரும் ஒரு வரி மிகவும் முக்கியமானது. “கோட்சேவுக்குக் கோயிலைக் கட்ட ஒரு கட்சியே இருக்கு அதோ பார்!” என்று எழுதப்பட்டதை, இப்போது நாம் நிஜத்தில் பார்க்கிறோம். அந்தக் கட்சி எது என்பது இந்தியர்கள் அனைவருக்கும் தெரியும். பாபர் மசூதி இடிப்பு சம்பவமும் இக்கதையில் இடம்பெற்றிருக்கிறது.

தி.மு.க. எழுத்தாளர்கள் வரிசையில் நாம் கவனம் கொள்ள வேண்டியவர் சி.பி.சிற்றரசு ‘இரத்தத் தடாகம்’, ‘சேரன் நாட்டு அதிபதி’, ‘தங்க விலங்கு’, ‘போர்வாள்’ போன்ற பல நாடகங்களையும் புறப்படு மகனே’, ‘கபாடபுரம்’ போன்ற தொடர்களையும் எழுதியவர். ‘சோகச்சூழல்’ இவருடைய சிறுகதைத் தொகுப்பு. ‘சோகச்சூழல்’, கதை சமூகத்தில் வறுமையும் பிணியும் சமூக ஒதுக்குதலும் ஏற்படுவதற்கு, நம்முடைய சமூகக் கட்டமைப்புதான் காரணம் என்று சொல்கிறது. சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பதுதான் சி.பி.சிற்றரசுவின் எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. சிறுகதைகள் எழுதுவதைவிட இவருக்கு அதிக விருப்பமான கலை வடிவமாக இருந்தது, நாடகமும் நாவலும்தான்.

வரலாற்றில், ‘படி, எழுது, சிந்தி’ என்று சொன்னவர்கள், படிக்கவும் எழுதவும் சிந்திக்கவும் வைத்தவர்கள், தி.மு.க. எழுத்தாளர்கள் தான் எது உண்மை, எது பொய் என்று அறிந்துகொள், அதற்காகப் படி என்று சொன்னவர்களில் சி.பி. சிற்றரசுவும் ஒருவர்.

‘மனப்போர்’ என்ற நாவலை எழுதியவர். தில்லை வில்லாளன் ‘மனப்போர்’ நாவலுக்கு அண்ணா முன்னுரை எழுதியிருக்கிறார். ‘கதம்பம்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் ‘தழுவும் துருவங்கள்’, ‘சீதையை மணந்த இராவணன்’, ‘செல்லாயி’, ‘வெள்ளிப் பணம்’, ‘கருங்குழி பார்சல்’ போன்ற கதைகள் என்றென்றும் படிக்கத்தக்கவை. ‘செல்லாயி’ மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள உறவைப் பற்றிப் பேசுகிறது. மனிதர்களுக்கு இயற்கையுடனும் விலங்குகளுடனும் இணைந்த வாழ்வுதானே. ‘வெள்ளிப் பணம்’ கதையில் ‘பணம்’ என்பது மனிதர்களை எப்படி இரக்கமற்றவர்களாக மாற்றுகிறது என்பதைப் பார்க்கலாம். பணம் வரும்போது அதிகாரம் வருகிறது. அதிகாரம் வரும்போது பணம் வருகிறது. பணம் மனிதனைக் கொடூரமானவனாகவும் கருணையற்றவனாகவும் மாற்றிவிடுகிறது. பணத்தின் மதிப்பும் அழகும் அதுதான் என்பதை தில்லை வில்லாளனின் கதையின் மூலம் நாம் உணர்கிறோம். நம்முடைய சமூகத்தில் ஊழல் என்பது குற்றச் செயலாக இல்லாமல் பொதுப்பண்பாக மாறிவிட்டது என்பதைச் சொல்கிறது. ‘கருங்குழி பார்சல்’ கதை. ‘சீதையை மணந்த இராவணன்’ கதை இராமாயணத்தைப் புதுவிதமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

தி.மு.க.விலிருந்த பல தரமான எழுத்தாளர்களைப் பொதுச்சமூகம் அரசியல்வாதிகளாக மட்டுமே பார்த்திருக்கிறது என்பதற்கு இரா.செழியன் நல்ல ஓர் உதாரணம். ‘ராஜாதி ராஜா’ என்ற நாவலை இரா.செழியன் எழுதியிருக்கிறார். ‘சமுதாயரீதியில் அரசியல் அடிப்படை’ என்ற கட்டுரை நூலை எழுதியிருக்கிறார். ‘திராவிட நாடு’ இதழில் பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். நாடாளுமன்றவாதியாக இருந்து, தி.மு.க.வின் குரலை, தமிழ் நாட்டின் குரலைப் பதிவு செய்தவர். ‘தினமணியில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதியவர். இரா.செழியனுடைய புனைவிலக்கியங்கள் குறித்த ஆய்வு தேவைப்படுகிறது.

சமகால தி.மு.. எழுத்தாளர்கள்

பழைய காலத்தில்தான் தி.மு.க. எழுத்தாளர்கள் இருந்தார்கள். இப்போது யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. தற்காலத்தில், ‘நான் தி.மு.க. எழுத்தாளன்தான்’ என்ற அடையாளத்தோடும், கர்வத்தோடும் எழுதுகிறவர்கள் என்று இமையம், தமிழ் மகன், சல்மா, போன்றவர்களைச் சொல்லலாம். ‘பால்யம்’, ‘சாபம்’ என்று இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் சல்மா. ‘விளிம்பு’, ‘குழப்பத்தின் சுற்றுப்பாதை’, ‘பால்யம், ‘சாபம்’, ‘கருகமணி டி.வி.’ போன்ற கதைகள் வாசகர்கள் மனத்தில் வலியை ஏற்படுத்தக்கூடியவை. முஸ்லிம் சமூகத்திற்குள் பெண்களின் நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப, சமூக வன்முறையைப் பற்றி எழுதியிருக்கிறார். ‘பால்யம்’, ‘சாபம்’ போன்ற கதைகள் வாசகர்களால் என்றும் நினைவுகூரப்படும். முந்தைய தலைமுறையினரின் அரசியல் புரிதலோடு, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு, ‘கட்சிக்காரன்’, ‘நம்பாளு’, ‘பிராது மனு’, ‘ஆகாசத்தின் உத்தரவு’ போன்ற கதைகளை இமையம் எழுதியிருக்கிறார். இவர் இதுவரை ‘மண்பாரம்’, ‘கொலைச்சேவல், ‘திருநீறு சாமி’, ‘நறுமணம்’, ‘நன்மாறன் கோட்டைக் கதை’, ‘வீடியோ மாரியம்மன்’, ‘சாவு சோறு’, ‘தாலி மேல சத்தியம்’ ஆகிய எட்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறார்.

தமிழ்மகன், ‘மீன்மலர்’, ‘எட்டாயிரம் தலைமுறை’, ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள், ‘சாலை ஓரத்திலே வேலை அற்றதுகள்’, ‘அமில தேவைகள்’ என்று ஐந்து சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.திராவிட இயக்க அரசியலையும், தி.மு.க. எழுத்தாளர்கள் முன்வைத்து எழுதிய லட்சிய நோக்கங்களையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு கதைகளை எழுதியிருக்கிறார். ‘மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்’ என்ற கதை மிகவும் கவனிக்கத்தக்க கதையாகும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சீர்திருத்தம் பேசிய சிறுகதைகள்!

முன்பு எழுதிய, இப்போது எழுதிக்கொண்டிருக்கிற தி.மு.க. எழுத்தாளர்களுடைய எந்த ஒரு கதையிலும் ‘எல்லாம் விதிப்பயன்’, ‘நான் வந்த வழி’, ‘என் தலை எழுத்து’, ‘ஆண்டவன் விதித்ததுபடிதான் எல்லாம் நடக்கும்’, ‘நம் கையில் என்ன இருக்கிறது’, ‘கடவுள் விட்ட வழி’, ‘எல்லாம் சுழிநாதம்’, ‘பாவம்’, ‘புண்ணியம்’, ‘கர்மவினை’, ‘முன்ஜென்ம பாவம்’, ‘எல்லாம் தலையில் எழுதினது’, ‘ஆண்டவன் எழுதினது’ என்பன போன்ற ஒரு சொல்லைக்கூட காண முடியாது. மூடநம்பிக்கை சார்ந்து ஒரு சொல்லை, ஒரு வாக்கியத்தைப் பயன்படுத்தியவர்களில்லை. அதே மாதிரி, வடமொழிச் சொல்லைத் தவறியும் பயன்படுத்தியவர்களில்லை. பயன்படுத்தியிருந்தாலும் கேலி செய்வதற்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சாதிய இழிவுகள், பெண்கள் சந்திக்கும் சமூகக் கொடூரங்கள், விதவைகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், ஆண்டான் அடிமை முறை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கடவுள் மறுப்பு, புராண இதிகாச, பேய் கதைகள் பற்றிய மறுப்பு என்று கதைகள் எழுதாத ஒரு எழுத்தாளரைக்கூட தி.மு.க.வில் காட்ட முடியாது. கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி, பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி சாதி ஒழிப்பு, தீண்டாமைக் கொடுமை பற்றி ஒவ்வொருவருமே எழுதியிருக்கிறார்கள். இராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளை விமர்சிக்கும் கண்ணோட்டத்துடன் எழுதாத எழுத்தாளர் இல்லை. கௌதம புத்தரைப் பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். இராமனுடைய நடத்தை பற்றி விமர்சனம் செய்து, கேள்வி கேட்டு பல கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. கலைஞரின் ளர் இல்லை. சிறுகதைகளில் கண்ணகியும் மாதவியும் மணிமேகலையும் பாரதிதாசனும் இடம்பெறுகிறார்கள். இதே போக்கில், ‘தண்டகாரண்யத்தில் சீதை’ என்ற சிறுகதையையும், ‘திருநீறு சாமி’ என்ற கதையையும் இமையம் எழுதியிருக்கிறார்.

வேதங்களுக்கு, சாஸ்திரங்களுக்கு, இதிகாசங்களுக்கு, மூடநம்பிக்கைகளுக்கு சாதி இழிவுகளுக்கு, பெண்ணடிமைத் தனத்துக்கு எதிரான போராட்டமாகவே, யுத்தமாகவே எழுத்தை, இலக்கியத்தை உருவாக்கினார்கள் தி.மு.க. எழுத்தாளர்கள். சிறுகதைகள் படித்து ரசிப்பதற்காக மட்டும் அல்ல, அது சமூக அரசியலைப் பேசவும், கற்றுத்தரவும் வேண்டும் என்ற நோக்கத்திலேயே எழுதினார்கள். அரசு நிர்வாகத்தை, சமூக நிர்வாகத்தை விமர்சிப்பதற்காகவே எழுதினார்கள். இலக்கியத்தின் நோக்கம் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதல்ல, புரிந்துகொள்ள வைப்பதே என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

சிறுகதைக்கான உள்ளடக்கம், உத்தி, வடிவம், மொழி, தொடக்கம், முடிவு என்பதற்கு முன்னுரிமை என்பதைவிடவும் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்தவர்கள், ஒரு கதையிலும் பேய், பூதம், பிசாசு, தெய்வங்கள் செய்த நற்காரியங்கள் பற்றி எழுதாதவர்கள். வைதீக வல்லாண்மையை ஒழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்க விரும்பி எழுதிய எழுத்தாளர்களுடைய படைப்புகள் ‘அரசியல்’ காரணங்களுக்காகவே, ‘அனைவரும் சமம்’ என்று எழுதியதற்காகவே புறக்கணிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி, நூலகங்களில் இடம்பெறாமல் தடுக்கப்பட்டன. பிரச்சார இலக்கியம் என்று புறக்கணிக்கப்பட்டன. திராவிடர் கழக எழுத்தாளர்களுடைய எழுத்துகளை, தி.மு.க. எழுத்தாளர்களின் எழுத்துகளைப் புறக்கணித்தவர்கள் ஒரு விதத்தில் சமத்துவ சமுதாயத்தை, அறிவியல் பார்வையை விரும்பாதவர்கள்தான். பவித்திரமானது’, ‘மேன்மையானது, ‘உன்னதமானது, ‘சீரியஸானது’, ‘புனிதமானது’ இலக்கியம் என்ற கற்பிதத்தை உடைத்து, இலக்கியம் மக்களுக்கானது, அவர்களுடைய மொழிக்கானது, பண்பாட்டிற்கானது என்று நிரூபித்துக்காட்டியவர்கள். சமூக. பண்பாட்டுத் தளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் எளிய மனிதர்களின் வாழ்க்கைக் கதையை இலக்கியமாக்கி, ‘நீச பாஷை’ என்று ஒதுக்கிய மக்களுடைய மொழியை இலக்கிய மொழியாக மாற்றியவர்கள். அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை இலக்கியமாக்கியவர்கள், தி.மு.க. எழுத்தாளர்கள்தான். அன்றாட நடப்பு அரசியலை சிறுகதைகளாக எழுதியவர்கள்.

கட்டுரைகளை இலக்கியத் தரத்துடன் எழுதுவதற்கு திராவிட இயக்கத்தில் பலர் இருக்கின்றனர். ப.திருமாவேலன், சுகுணா திவாகர், அருள்மொழி, க.திருநாவுக்கரசு பெரிய பட்டியலையே போடலாம். என்று தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி கருணாநிதி, சல்மா, மனுஷ்ய புத்திரன் என்று கவிதை எழுதுவதற்குப் பலர் இருக்கிறார்கள். தன்வரலாற்றுக் கதையை, ‘உங்களில் ஒருவன்’ என்று மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கிறார். ஆனால் சிறுகதை, நாவல், நாடகம் என்று எழுதுவதற்குப் போதுமானவர்கள் இல்லை. நாடகம் எழுதுவதற்குத் தி.மு.க.வில் இன்று ஆளே இல்லை. 1930-களிலிருந்து திராவிடர் கழகத்தினர். தி.மு.க.வினர் சமூக அழுக்குகளை நீக்கியே தீரவேண்டும் என்ற லட்சிய நோக்கத்தோடு கிட்டத்தட்ட 1980வரை எழுதினார்கள். பல பத்திரிகைகளை வீரியமாக நடத்தினார்கள். அதன் பிறகு என்னவாயிற்று? தி.மு.க. எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் எழுதக்கூடிய எழுத்தாளர்களுடைய எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. எழுதினாலும் தி.மு.க. என்ற அடையாளத்துடன் எழுதுகிறவர்கள் இன்று அதிக எண்ணிக்கையில் இல்லை.

‘குயில்’ இதழை நடத்தியவர் பாரதிதாசன். ‘பொன்னி’ முருகு சுப்ரமணியன், ‘தென்றல்’ கண்ணதாசன், ‘தென்னரசு’ எஸ்.எஸ். தென்னரசு. ‘காஞ்சி’ அண்ணா, ‘மன்றம்’ நாவலர் இரா.நெடுஞ்செழியன். ‘புது வாழ்வு’ – பேராசிரியர் க.அன்பழகன். ‘தென்னகம்’ – கே.ஏ.மதியழகன். ‘தாய்நாடு – டி.கே. சீனிவாசன், ‘திராவிட நாடு’ – அண்ணா. கலைஞர்  நடத்திய ‘முரசொலி’ – போன்ற பத்திரிகைகள்தான் தமிழ்நாட்டில் புதுவிதமான இலக்கியத்தையும் இலக்கிய மொழியையும் உருவாக்கின. இன்றைய பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ், ஊடகத் தமிழ், மேடைத்தமிழ் என்பது தி.முக. எழுத்தாளர்களாலும் தி.க., தி.மு.க.வினர் நடத்திய பத்திரிகைகளாலும் உருவாக்கப்பட்டது.

தி.மு.க. எழுத்தாளர்கள் எழுதிய கவிதை, சிறுகதை, நாவல்,நாடகம், திரைக்கதை, வசனம் போன்றவையும் அவர்கள் நடத்திய பத்திரிகைகள் உருவாக்கிய மொழியும்தான் இன்றைய தமிழ் என்பது, நவீன தமிழ் என்பது. பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவந்த வடமொழி கலந்த, சமஸ்கிருதம் கலந்த தமிழை மாற்றி, புதுத் தமிழை, மக்கள் தமிழை உருவாக்கிய சமூக மாற்றம், முன்னேற்றம் என்ற லட்சியத்திற்காக எழுதிய பண்பாட்டை, மீட்டுருவாக்கம் செய்வதற்காக எழுதிய தி.மு.க. எழுத்தாளர்களின் சிறுகதைகளுக்கு என்றும் அழிவில்லை.

MUST READ