”மனிதனின் மேன்மைக்கான என்னுடைய சூத்திரம் இதுதான்: எல்லாம் நன்மைக்கே” – நீட்சே
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு அறுபத்தேழு வயதாக இருந்தபோது, ஒரு நாள் மாலையில், தன்னுடைய பரிசோதனைக்கூடத்திலிருந்து வழக்கமாக வருகின்ற நேரத்தைவிட முன்னதாகவே அவர் தன் வீட்டுக்கு வந்தார். அவர் இரவு உணவை உண்டு முடித்திருந்த சிறிது நேரத்திற்கெல்லாம், ஒருவன் ஓர் அவசரச் செய்தியோடு அவருடைய வீட்டுக்கு வந்தான். சில மைல் தூரத்திலிருந்த அவருடைய பரிசோதனைக்கூடம் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது என்ற செய்திதான் அது.
அந்த இடத்தைச் சுற்றியிருந்த எட்டு நகரங்களிலிருந்து தீயணைப்புப் படையினர் வந்திருந்தபோதிலும், அவர்களால் நெருப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருடைய பரிசோதனைக்கூடத்தில் பல விதமான வேதிப்பொருட்கள் இருந்ததால் தீ படுவேகமாகப் பரவியது. அங்கு பரவிக் கொண்டிருந்த தீ, எடிசன் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து உருவாக்கியிருந்த அந்தச் சோதனை சாம்ராஜ்ஜியத்தை மொத்தமாக விழுங்கிக் கொண்டிருந்தது.

அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த எடிசன், தன் மகனிடம், “நீ வேகமாகச் சென்று உன் அம்மாவையும் அவருடைய தோழிகளையும் வரச் சொல். இதுபோன்ற ஒரு பெரிய தீயை இனியொரு முறை பார்க்க அவர்களுக்கு வாய்ப்புக் இடைக்குமா என்பது சந்தேகமே; என்று அமைதியாகக் கூறினார்.
அவருடைய மகன் அதிர்ந்து போய் அவரையே பார்த்துக் கொண்டு நின்றான்.
அவனை அமைதிப்படுத்திய அவர். ”இதைப் பற்றிக் கவலைப்படாதே. ஏகப்பட்டக் குப்பைகளை நாம் இப்போது ஒழித்துள்ளோம்,” என்று கூறினார்.
அது ஓர் அற்புதமான செயல்விடை ஆனால் அதைப் பற்றி நீங்கள் ஆழமாகச் சிந்தித்தால், அவர் அதற்கு வேறு எந்தவிதத்திலும் செயல்விடை அளித்திருக்க முடியாது என்பது உங்களுக்குத் தெளிவாகும்.
எடிசன் என்ன செய்திருக்க வேண்டும்? அழுதிருக்க வேண்டுமா? கோபப்பட்டிருக்க வேண்டுமா? விரக்தியாக வீட்டை நோக்கிச் சென்றிருக்க வேண்டுமா?
அப்படிப்பட்டச் செயல்விடைகள் எதைச் சாதித்திருக்கும்?
அதற்கான விடை உங்களுக்குத் தெரியும்: அவை எதையும் சாதித்திருக்காது. அவர் கழிவிரக்கத்தில் மூழ்கவில்லை. தலைசிறந்த விஷயங்களைச் செய்ய வேண்டுமென்றால், நீங்கள் துக்கங்களையும் முட்டுக்கட்டைகளையும் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். நமக்கு வருகின்ற நல்லது கெட்டது அனைத்தையும் சேர்த்துத்தான் நாம் நேசிக்க வேண்டும். நமக்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயத்திலும் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பற்றி எரிந்து கொண்டிருந்த எடிசனின் கட்டடத்தில் அவர் கூறியதுபோல வெறும் குப்பைகள் மாத்திரம் இருக்கவில்லை. விலை மதிப்பிடப்பட முடியாத பல ஆண்டுகால ஆவணங்கள் அங்கு இருந்தன. முன்மாதிரி இயந்திரத் தயாரிப்புகள் இருந்தன. தீப்பற்றிக் ‘கொள்ள முடியாதது என்று வர்ணிக்கப்பட்டக் கான்கிரீட்டால் அக்கட்டடம் உருவாக்கப்பட்டிருந்ததால், தன்னுடைய கட்டடத்திற்கு ஒன்றும் நேராது என்ற நினைப்பில் எடிசன் அதன் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கே அதற்குக் காப்பீடு எடுத்திருந்தார்.
ஆனாலும் எடிசன் அதனால் மனமுடைந்து போகவில்லை. மாறாக, அது அவருக்குப் புத்துணர்ச்சியூட்டியது. மறுநாள் காலையில் அவர் பத்திரிகையாளர்களை அழைத்து, “என்னுடைய வேலைகளை மீண்டும் புதிதாகத் தொடங்கத் தயங்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. இது போன்ற பல விஷயங்களை நான் என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சலிப்புக் கொள்வதை இது போன்ற நிகழ்வுகள் தடுக்கின்றன,” என்று கூறினார்.
மூன்று வாரங்களுக்குள் அவருடைய பரிசோதனைக்கூடத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. ஒரு மாதத்திற்குள், அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்கள் தினமும் இரண்டு சுழற்சி முறையில் வேலை பார்க்கத் தொடங்கினர். உலகம் அதுவரை ஒருபோதும் பார்த்திராத பல பொருட்களை அவர்கள் உற்பத்தி செய்து குவித்தனர். தனக்கு ஏற்பட்டிருந்த நஷ்டத்தைப்போலப் பத்து மடங்கு வருமானத்தை எடிசன் அந்த ஆண்டு உருவாக்கியிருந்தார். ஒரு மாபெரும் இன்னலை அவர் ஒரு மாபெரும் வாய்ப்பாக மாற்றியிருந்தார்.
நம்முடைய எதிர்பார்ப்புகளைத் தூக்கியெறிந்த பிறகு நாம் செய்ய வேண்டிய அடுத்தக் காரியம், நமக்கு நேர்வதை ஏற்றுக் கொள்வதுதான். சில விஷயங்கள், குறிப்பாக மோசமான விஷயங்கள், நம்முடைய கட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கின்றன என்பதைப் புரிந்து கொண்ட பிறகு நாம் செய்ய வேண்டிய அடுத்தக் காரியம், நமக்கு நேர்கின்ற அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகும்.
நாம் நம்முடைய ஆற்றலையும் உணர்ச்சிகளையும் அவை எந்த இடத்தில் சரியான தாக்கம் ஏற்படுத்துமோ அந்த இடத்தில் செலுத்த வேண்டும். “எப்படியும் இதை நான் சகித்துக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால், அதை நான் மகிழ்ச்சியுடன் செய்துவிட்டுப் போகிறேனே!” என்ற ரீதியில் நீங்கள் சிந்திக்க வேண்டும்.
இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, புகழ்பெற்றக் குத்துச்சண்டை வீரரான ஜாக் ஜான்சன். கறுப்பரான அவரை வெள்ளையருக்குப் பிடிக்காது. ஒரு முக்கியமான போட்டியில், வெள்ளையரின் மாபெரும் நம்பிக்கை என்று வர்ணிக்கப்பட்ட ஜிம் ஜெப்ரிஸுடன் அவர் மோதினார். கூட்டத்தினரும் எதிராளியும் தன்னை வெறுத்தனா் என்பதை ஜான்சன் அறிவார். ஆனாலும் அவர் மொத்த நேரமும் சிரித்துக் கொண்டும் நகைச்சுவைகளை உதிர்த்துக் கொண்டும் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டும் இருந்தார்.
வேறு எந்த வழியில் அதற்குச் செயல்விடை அளித்தாலும் சரிப்பட்டு வராது என்பதை ஜான்சன் அறிந்திருந்தார். தன்னை வெறுத்தவர்களை அவர் வெறுக்க வேண்டுமா? மனக்கசப்பு என்பது எதிரிகளின் சுமையாக இருந்துவிட்டுப் போகட்டும், அதைத் தான் ஒருபோதும் சுமக்கப் போவதில்லை என்று ஜான்சன் முடிவு கட்டினார்.
அதற்காக அவர் ஏளனங்களை அப்படியே பொறுத்துக் கொண்டார் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. மாறாக அவர் தன்னுடைய போராட்டத் திட்டத்தை அதையொட்டி வடிவமைத்திருந்தார். ஜிம்மின் ஒவ்வோர் அடிக்கும் ஜான்சன் பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜான்சன் ஒருபோதும் தன்னுடைய நிதானத்தை இழக்கவில்லை. ஜிம்மின் ஒரு குத்து அவருடைய உதட்டைக் கிழித்தபோதும் அவர் புன்னகைப்பதை நிறுத்தவில்லை. அடுத்தடுத்து வந்த சுற்றுகளில் அவர் மேலும் மேலும் மகிழ்ச்சியடைந்தார். நட்பாக இருந்தார். ஆனால் அவருடைய எதிரி மேலும் மேலும் கோபமடைந்தார், களைப்படைந்தார். இறுதியில் ஜான்சனிடம் அவர் தோற்றுப் போனார்.
உங்களுடைய மோசமான கணங்களில், அமைதியாகவும் நிதானம் தவறாமலும் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஜாக் ஜான்சனை நினைத்துக் கொள்ளுங்கள். அவர் வாயிலிருந்து வந்த ஒவ்வொரு வார்த்தையும் ஜான்சன் எந்த நோக்கத்தில் அதை உதிர்த்தாரோ, துல்லியமாக அந்த நோக்கத்தை நிறைவேற்றியது. எதிராளி தனக்குத் தானே குழி வெட்டிக் கொண்டிருந்ததுதான் அது.
அப்போட்டியை தேரில் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற நாவலாசிரியரான ஜாக் லண்டன் அது குறித்து இவ்வாறு எழுதியுள்ளார்:
புன்னகைத்துக் கொண்டிருந்த இந்த மனிதனை எவருமே புரிந்து கொள்ளவில்லை. இப்போட்டியின் கதை ஒரு புன்னகையின் கதை. – வியர்வையைவிடப் புன்னகையைப் பயன்படுத்தி ஒருவனால் ஒரு குத்துச்சண்டையில் வெல்ல முடியுமா என்று கேட்டால், அதை இன்று ஜாக் ஜான்சன் செய்து காட்டியுள்ளார்.
நம்மால் ஜாக்சனைப்போல நடந்து கொள்ள முடியுமென்றால், நம்மாலும் அவரைப்போல வெல்ல முடியும். ஏனெனில், நமக்கும் நம்முடைய போராட்டங்கள் இருக்கின்றன, நாம் தாண்ட வேண்டிய தடைகள் இருக்கின்றன. நம்முடைய இடைவிடாத புன்னகையின் உதவியுடன் நம்முடைய முட்டுக்கட்டைகளை நம்மால் களைப்படையச் செய்ய முடியும். நம்மாலும் எடிசனைப்போல நடந்து கொள்ள முடியும் என்றால், பெரும் நெருப்பில் மாட்டிக் கொண்டுள்ள நம்முடைய சோதனைச் சாலையின் நிலையைக் கண்டு குமுறிக் கொண்டிருக்காமல், அந்த நெருப்பின் கோரத் தாண்டவத்தை இரசிக்க முடியும். அடுத்த நாளே துள்ளியெழுந்து, வெகு விரைவிலேயே நம் சொந்தக் காலில் நம்மால் மீண்டும் நிற்க முடியும்.
உங்களுடைய தடைகள் அந்த அளவு பூதாகரமானவையாக அல்லது வன்முறையானவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், உங்களைப் பொறுத்தவரை அவை முக்கியமானவை, உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவை. அவற்றுக்கு ஒரே ஒரு பதில்தான் தேவை. உங்களுடைய புன்னகைதான் அது.
எல்லாச் சூழ்நிலைகளிலும் உற்சாகத்துடன் இருப்பதை ஸ்டோயிசிசத் தத்துவவியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்துக் கூப்பாடு போடாமல் இருப்பது என்பது வேறு. அவை குறித்து விட்டேத்தியாக இருப்பதும் அவற்றை ஏற்றுக் கொள்வதும், அவை குறித்து ஏமாற்றமடைவதையும் சீற்றம் கொள்வதையும்விடக் கண்டிப்பாக மேலானவையாகும். வெகு சிலரே அதை நடைமுறையில் பின்பற்றுகின்றனர். ஆனால் நாம் கண்டிப்பாக எடுத்து வைக்க வேண்டிய ஓரடி அது என்பதில் சந்தேகமில்லை. எல்லாவற்றையும்விட மேலானது, எல்லாச் சூழ்நிலைகளிலும் நமக்கு நடப்பவற்றை நேசிப்பதுதான்.
ஒரு மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது, நம்முடைய இலக்கு, “சரி, நடந்தது நடந்துவிட்டது”, என்று மனத்தைத் தேற்றிக் கொள்வது அல்ல, மாறாக, அது குறித்துச் சிறப்பாக உணர்வதுதான். ஏனெனில், நம்முடைய வாழ்க்கையில் ஒரு காரியம் நடந்துள்ளது என்றால், அது நடந்தாக வேண்டிய ஒரு காரியம்தான். அது எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடந்துள்ளது குறித்து நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில், அதிலிருந்து சிறப்பானவற்றைப் பெற நீங்கள் விதிக்கப்பட்டிருப்பீர்கள்.
நமக்கு நடக்கின்ற விஷயங்கள் குறித்து நம்மால் எதுவும் செய்ய முடியாது என்றாலும் அது குறித்து எவ்வாறு உணர்வது என்பதை நம்மால் தேர்ந்தெடுக்க முடியும். நீங்கள் அவை குறித்து நன்றாக உணர வேண்டும். ஒரு காரியம் எப்படியும் நடக்கத்தான் போகிறது என்றால், எல்லாம் நன்மைக்கே என்ற மனப்போக்கை சுவீகரிப்பதுதான் அதற்கு நாம் அளிக்கின்ற சரியான செயல்விடையாக இருக்க முடியும்.
உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போனது குறித்து ஒரு கணத்தைக்கூட வீணாக்காதீர்கள். முன்னே பாருங்கள். முகத்தில் ஒரு புன்னகையையும் தவழவிடுங்கள்.
ஜான்சனையும் எடிசனையும் முன்னுதாரணங்களாக எடுத்துக் கொள்வது முக்கியமானது, ஏனெனில், அவர்கள் தங்களுக்கு நேர்ந்தவற்றை ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அவற்றை விரும்பவும் செய்தனர்.
நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ள விரும்பாத விஷயங்கள் நிகழும்போது, அது குறித்து நன்றியுணர்வுடன் இருப்பது இயல்பானதல்லதான். ஆனால் அந்த இன்னல்களுக்குள் வாய்ப்புகளும் நன்மைகளும் பொதிந்திருக்கும் என்பதை நாம் அக்கட்டத்தில் அறிந்திருப்போம். நாம் அந்த இன்னல்களிலிருந்து மீண்டு வரும்போது, முன்னைவிட அதிக வலுவானர்களாக வெளியே வருவோம் என்பதும் நமக்குத் தெரியும். அப்படியிருக்கும்போது, அந்த உணர்வுகளை எதற்காக நாம் தள்ளிப்போட வேண்டும்? பின்னானில் அது குறித்து நினைத்துப் பார்த்து அரைகுறை மனத்துடன் அதை ஏற்றுக் கொள்வதைவிட, அக்கணத்திலேயே அது குறித்துச் சிறப்பாக உணர்வதுதானே சரியாக இருக்கும்?
அது ஓர் உந்துசக்தியாக இருப்பதால்தான் நீங்கள் அது குறித்து நன்றியுணர்வுடன் இருக்கிறீர்கள், அப்படிப்பட்ட உந்துசக்தி உங்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது.
அதற்காக மோசமானதைவிட நல்லதுதான் அதிகமாக இருக்கும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. அதோடு, அது இலவசமாகக் கிடைக்கும் என்றும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்கு நீங்கள் கண்டிப்பாக ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால் எல்லா மோசமான நிகழ்வுகளுக்குள்ளும் சிறிதளவாவது நன்மைகள் மறைந்திருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
அதை நம்மால் கண்டுபிடிக்க முடியும், அதன் காரணமாக நம்மால் மகிழ்ச்சியாக இருக்கவும் முடியும்.
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை – ரயன் ஹாலிடே


