”இந்த விதியை உறுதியாகக் கடைபிடியுங்கள்: இன்னல்களைக் கண்டு கலங்காதீர்கள், அபரிமிதத்தை நம்பாதீர்கள். தன் இஷ்டத்திற்கு ஆட்டம் போடுகின்ற பழக்கம் அதிர்ஷ்ட தேவதைக்கு உண்டு என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள்” – செனகா
கண்ணோட்டங்கள் கையாளப்படக்கூடியவை. செயல்நடவடிக்கைகள் வழிநடத்தப்படக்கூடியவை. நம்மால் எப்போதும் தெளிவாகச் சிந்தித்துச் சிறப்பாகச் செயல்விடை அளிக்க முடியும், வாய்ப்புகள் வருகின்றபோது அவற்றை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், என்னதான் முயன்றாலும், நம்மைச் சுற்றியிருக்கின்ற இந்த உலகத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. விஷயங்களை ஒரு நல்ல கண்ணோட்டத்துடன் பார்த்து, சரியான செயல்நடவடிக்கையில் இறங்கினால்கூட நாம் தோற்கக்கூடும்.

ஆனால், நாம் ஒன்றை முயற்சி செய்வதிலிருந்து எதுவொன்றும் நம்மைத் தடுத்து நிறுத்த நாம் அனுமதிக்கக்கூடாது.
நாம் சிறப்பாக முயன்றும்கூட நம்மால் கடக்க முடியாதமுட்டுக்கட்டைகளை நாம் எதிர்கொள்ள நேரிடலாம். நம்மால் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் போகலாம்; பாதை கடக்கப்பட முடியாத ஒன்றாக மாறலாம். சில நேரங்களில் சில விஷயங்கள் நம்மைவிடப் பெரிதாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் நம்மால் இந்த முட்டுக்கட்டையையும் தலைகீழாகப் புரட்டிப் போட முடியும்.
டியூக் எல்லிங்டன் கூறியதுபோல, பிரச்சனைகள், நம்மால் முடிந்த அளவு சிறப்பாக இயங்க நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகின்றன.
நம்மால் செய்ய முடியாத ஒன்றை நாம் செய்ய வேண்டியதில்லை. நம்மால் முடிந்த அளவு சிறப்பாக அதைச் செய்து முடிக்க வேண்டும், அவ்வளவுதான்.
பகடையை உருட்டி விட்டுவிட்டு, தோற்பதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அதாவது, எதுவுமே வேலை செய்யாதிருக்கும் நிலைக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
ஓர் இலக்கைத் துரத்திச் சென்று கொண்டிருப்பவர்கள், கண்டிப்பாக இதை மீண்டும் மீண்டும் சந்தித்திருப்பர். நாம் எவ்வளவுதான் சிறப்பாகத் திட்டம் தீட்டியிருந்தாலும், எவ்வளவுதான் தீவிரமாகச் சிந்தித்திருந்தாலும், கடினமாக முயற்சித்திருந்தாலும், எவ்வளவுதான் பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் நம்முடைய இலக்கைத் தொடர்ந்திருந்தாலும், சில நேரங்களில் எதுவுமே வேலை செய்வதில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த உலகிற்குச் சில தியாகிகள் கிடைத்தால், அது அதற்கு வசதியாகத்தான் இருக்கும்.
சில விஷயங்களைத் தங்களால் முடிந்தவரை முயற்சித்தப் பிறகு, அதன் விளைவு எதுவாக இருந்தாலும் அதை உடனடியாக ஏற்றுக் கொண்டு, அடுத்து என்ன இருக்கிறதோ அதை நோக்கி நகர்கின்ற மனநிலையுடன் சிலர் இருக்கின்றனர்.
நீங்கள் அவர்களில் ஒருவரா?
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதிரியை முற்றுகையிடுங்கள் – ரயன் ஹாலிடே


