கரூரில் ஜனநாயகன் படத்தின் ஷுட்டிங் நடத்தியதற்கான ஆதாரம் சிக்கினால், அதை வைத்து பாஜக அரசியல் ரீதியாக விஜயை மிரட்டும் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் தவெக தலைவர் விஜயிடம் நடத்திய விசாரணை குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது முழுக்க முழுக்க அரசியலாகும். மத்திய தணிக்கை வாரியம் ஒரு அரசியலுக்கான தளமாக மாறியுள்ளது. இப்படியான அரசியல் விஷயத்திற்கு வாய் திறக்காத விஜய், சிபிஐ விசாரணைக்கு மீண்டும் ஒருமுறை பணிந்து போய் டெல்லிக்கு சென்றுள்ளார். அவர் சாதாரண விமானத்தில் செல்கிறபோது, ரசிகர்களை வரவழைத்து டெல்லியை ஸ்தம்பிக்க செய்திருக்கலாம். ஆனால் விஜய் தனி விமானத்தில் சென்றுள்ளதால், விமான நிலையத்திற்கே சென்று சிபிஐ வாகனத்தில் அழைத்துச் செல்வார்கள்.
அவர் எங்கே செல்கிறார். யாருடைய வாகனத்தில் செல்கிறார் என்பது தெரியாது. மோடி அரசின் அதிகார துஷ்பிரயோகமாக தான் இதை பார்க்கிறோம். கருர் சம்பவத்திற்கு விஜய் மீது எனக்கு கோபம் இருந்தாலும், ஒரு அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பாகவே முடக்கும் நடவடிக்கையாக இதை பார்க்கிறேன். நிச்சயமாக இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இது கண்டிக்கத்தக்கதாகும்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 2 நபர்கள், தங்களுக்கு தெரியாமலேயே சிபிஐ விசாரணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். அந்த வழக்கில் தான் சிபிஐக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிபிஐ அலுவலகத்திற்கு வந்தால் பிரச்சினை என்றால்? விஜயின் வீட்டிற்கு சென்று விசாரிக்க வேண்டியது தானே? இதன் மூலம் ஒன்று மிக தெளிவாக தெரிகிறது. போன் போட்டால் எடுக்க வேண்டும். போனை எடுக்காவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு சான்றாக தான் தற்போது நடக்கும் விஷயங்கள் உள்ளன. அப்போது நீங்கள் பாசிசத்தின் மீதான விமர்சனங்களை கைவிட்டு, பாயாசத்தின் மீது கோபத்தை காட்டுங்கள்.
அப்படி பாசிசம் மீது விமர்சனம் வைத்தால் என்ன நடவடிக்கும் என்பதற்கு இது உதாரணமாகும். சிபிஐ விசாரணைக்கு உடனடியாக செல்கிற விஜய், ஒரு 7 மணி நேரம் தாமதமாக சென்றால் என்ன? ஒரு அரசியல் தலைவருககு, இந்த பயம் இருக்கக்கூடாது. என்னை வீழ்த்த வேண்டும் என்றால் அதற்கு பாஜக பெரிய விலை கொடுக்க வேண்டும் என்று உணர்த்த வேண்டாமா? அதிகாரத்திற்கு வர வேண்டும் என்கிற ஒரே எண்ணம் தானே.

விஜய் வாகனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை, சிபிஐ கைப்பற்றினார்களா? என்று தெரியவில்லை. ஆனால் விஜய் ஜனநாயகன் படத்திற்காக ஷுட்டிங் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை யார் வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு சான்றுகள் தேவைப்படும். அந்த ஆதாரம் நிச்சயமாக திமுக, பாஜகவிடம் இருக்கும். அதை தாண்டி யாரிடமும் இருக்க வாய்ப்பு இல்லை. ஜனநாயகன் படத்திற்கு விஜய் ஷுட்டிங் நடத்தினார் என குற்றச்சாட்டு உள்ள நிலையில், அந்த காட்சிகளை வைத்து பாஜக விஜயை மிரட்ட வாய்ப்புகள் உள்ளன. இல்லாவிட்டால் எதற்காக வழக்கு? எதற்காக ஜனநாயகன் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது? பராசக்தியில் இதைவிட மோசமான வசனங்கள் உள்ளன.
எனவே ஜனநாயகன் படத்திற்கு தடை விதித்ததும் அரசியல் தான். விஜயை டெல்லிக்கு அழைத்ததும் அரசியல் தான். தாராளமாக இதற்குள் விசாரணையை முடித்து இருக்கலாம். காரணம் நிகழ்ச்சி பொறுப்பாளர்களான ஆதவ், புஸ்ஸீ, நிர்மல்குமார் போன்றவர்களிடம் விசாரித்து முடித்து விட்டனர். அவர்களிடம் கிடைக்காத தகவல் ஒன்றும் விஜயிடம் கிடைக்கப்போவது இல்லை. நான் ஏற்கனவே விஜயை விசாரணைக்கு அழைக்கப் போகிறார்கள், அவருடைய போனை கைப்பற்றி விட்டார்கள் என்று நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

சிபிஐ அதிகாரிகள் நோக்கம் என்பது, விஜய் யாரிடம் பேசினார் என்பது தான். 25 வருடங்களாக ஹீரோவாக இருந்த நபர். இது போன்ற அழுத்தங்களை சந்தித்திராத அவரை, சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் சுலபமாக உடைத்து விடுவார்கள். விஜயின் கார் ஓட்டுநர் வாகனத்தை தாமதமாக ஓட்டச் சென்றது நீங்கள் தான் சொல்லிவிட்டார் என அதிகாரிகள் கேட்டு, அதற்கு விஜய் ஒப்புக்கொண்டார் என்றால், பாஜக அரசியல் ரீதியான ஆட்டத்தை தொடங்குவார்கள். போன் போட்டு கூட்டணிக்கு வாங்க என்று சொல்வார்கள்.
மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் பாஜகவை எதிர்த்து அரசியல் செய்கின்றனர். அந்த தைரியம் விஜய்க்கு வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பாஜக கூட்டணியில் போய் சேர்ந்துவிடுங்கள். நன்றாக காசு பண்ணலாம். இன்னும் 100 படங்கள் பண்ணலாம். அவற்றை எல்லாம் பாஜக ஓட்டிவிடும். ஆனால் துரந்தர் போன்ற படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டிய சூழல் ஏற்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


