spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

இன்னல் நேரத்தில் நீங்கள் செயலிழந்து போனால், உங்களுடைய வலிமை குறைவாக இருக்கிறது என்று பொருள்” – பைபிள், நீதிமொழிகள் 24:10தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் - ரயன் ஹாலிடேதியோடார் ரூஸ்வெல்ட்டுக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவரை தினமும் ஆஸ்துமா நோய் வாட்டியெடுத்தது. அவர் ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், தன் நோயின் தீவிரத்தால் அவர் தினமும் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார். உயரமாகவும் ஒல்லியாகவும் மெலிந்து போயும் இருந்த அவரை, லேசான முயற்சிகூடப் பெரிதும் பாதித்துப் பல நாட்கள் படுக்கையில் கிடத்தியது.

ஒரு நாள், அவருடைய தந்தை, தியோடார் ரூஸ்வெல்ட்டின் அறைக்கு வந்து அவருக்குக் கொடுத்த ஓர் அறிவுரை அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றியமைத்தது. அவருடைய தந்தை, “தியோடார், உன்னிடம் மனம் இருக்கிறது. ஆனால் வலுவான உடல் இல்லை. உன் உடலை வலுவாக்குவதற்குத் தேவையான சாதனங்களை இப்போது நான் உனக்குத் தருகிறேன். வலிமைப்படுத்துவது உனக்கு சலிப்பு ஏற்படுத்துகின்ற அளவுக்கு மிகக் கடினமாக இருக்கும். ஆனால் அதைச் செய்வதற்குத் தேவையான மன உறுதி உன்னிடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்,” என்று அவரிடம் கூறினார்.

we-r-hiring

தியோடார் அதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? குறிப்பாக, ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்திருந்த, ஆனால் பலவீனமாக இருந்த அவர் அதற்குச் செவி சாய்த்திருந்திருப்பாரா? அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த தியோடாரின் தங்கையின் கண்ணோட்டத்தின்படி, அவர் அவற்றை அப்படியே முழுமையாக உள்வாங்கிக் கொண்டிருந்தார். தியோடார் தன் தந்தையை நேருக்கு நேராகப் பார்த்து, “நான் என்னுடைய உடலை உருவாக்கிக் கொள்கிறேன்,” என்று உற்சாகமாகவும் உறுதியுடனும் பதிலளித்தார்.

அவருடைய தந்தை அவருக்காகத் தங்கள் வீட்டிலேயே ஓர் உடற்பயிற்சிக்கூடத்தை அமைத்துக் கொடுத்தார். தியோடார் அதில் ஐந்து ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். மெதுவாக அவர் தன் தசைகளை வலுவாக்கிக் கொண்டார். அவருடைய பலவீனமான நுரையீரலைச் சுற்றியிருந்த நெஞ்சுப் பகுதியை அவர் பலப்படுத்திக் கொண்டார். அவர் தன்னுடைய இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தபோது, ஆஸ்துமாவுக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் முடிவடைந்திருந்தது. அவர் அந்த பலவீனத்தைத் தன் உடலிலிருந்து விரட்டியடித்திருந்தார்.

பலவீனமாக இருந்த அவர் வலிமையான ஒருவராக உருவாக அவருக்கு உதவிய உடற்பயிற்சி, விரைவிலேயே அவருடைய நாடும் உலகமும் பயணிக்கவிருந்த சவால்மிக்க ஒரு பயணத்திற்கு அவரைத் தயார் செய்திருந்தது. பின்னாளில் ‘அதீத முயற்சியும் ஆற்றலும் தேவைப்பட்ட ஒரு வாழ்க்கைக்கு அது அவரைத் தயார்படுத்திக் கொண்டிருந்தது.

தியோடார் ரூஸ்வெல்ட்டைப் பொறுத்தவரை, வாழ்க்கை அவரை நோக்கி எண்ணற்ற சவால்களை அள்ளி வீசியது. அவர் தன் அன்னையையும் தன் மனைவியையும் அடுத்தடுத்துப் பறி கொடுத்தார்; அவருடைய முற்போக்கான செயற்திட்டங்களை வெறுத்த, சக்தி வாய்ந்த அரசியல் எதிரிகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது;  தேர்தல்களில் அவர் பல முறை தோல்வியைத் தழுவ வேண்டியிருந்தது; அவரைப் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்டப் பல முயற்சிகளிலிருந்து அவர் தப்பித்தார். இவை அனைத்தையும் அவர் வெற்றிகரமாகச் சமாளிக்க, தன் இளமைக் காலத்தில் தினந்தோறும் அவர் மேற்கொண்ட பயிற்சி அவருக்கு வெகுவாக உதவியது.

உங்களுடைய வாழ்க்கையில் திடீரென்று சூழ்நிலை மோசமடைந்தால் அதை நீங்கள் எப்படிக் கையாள்வீர்கள்?

பலவீனத்தை நாம் இயல்பான ஒன்றாக எடுத்துக் கொள்கிறோம். நாம் எப்படிப் பிறந்திருக்கிறோமோ அப்படித்தான் எப்போதும் இருப்போம் என்று நாம் அனுமானித்துக் கொள்கிறோம். நம்முடைய குறைபாடுகள் நிரந்தரமானவை என்று நாம் நம்புகிறோம்.

வாழ்க்கையின் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான சரியான வழிமுறை அதுவல்ல.

வாழ்க்கையில் தங்களுடைய மோசமான தொடக்கத்தை யாரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் தங்களுடைய உடலை உடற்பயிற்சியின் மூலமும், வாழ்க்கையைச் செயல்நடவடிக்கைகள் மூலமும் புதிதாக ஆக்கிக் கொள்கின்றனர். கடினமான பாதைக்கு அவர்கள் தங்களைத் தயார் செய்து கொள்கின்றனர்.

நீங்கள் எப்படி?

எவருமே இரும்பாலான ஒரு முதுகெலும்புடன் பிறப்பதில்லை. நாம்தான் அதை வார்த்துக் கொள்ள வேண்டும்.

உடலுக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் நாம் ஆன்மிக பலத்தை வளர்த்துக் கொள்கிறோம். மனத்திற்கும் பயிற்சியளிப்பதன் மூலம் நாம் உடலை வலிமையாக்கிச் கொள்கிறோம். வலுவான உடலில் ஒரு வலுவான மனம் இருப்பதை இதன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த அணுகுமுறை புராதனத் தத்துவங்களில்கட இடம்பெற்றுள்ளது. வாழ்க்கையின் சந்திப்பதற்கு மக்களைத் தயார்படுத்துவதற்கு அத்தத்துவங்கள் எல்லா வழிகளிலும் முயன்றன. மூளையும் தசைகளால் ஆன ஓர் உறுப்பு என்பதால் சரியான பயிற்சிகளின் மூலம் அதையும் வலுப்படுத்த முடியும். அப்படி வலுப்படுத்தப்படுகின்ற மூளை, காலப்போக்கில் அனைத்துச் சூழ்நிலைகளையும் எதிர்கொள்கின்ற நிலையை அடைந்துவிடும். குறிப்பாக முட்டுக்கட்டைகளை எதிர்கொள்கின்ற பலம் அதற்குக் கிடைத்துவிடும்.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்களுடைய அகக் கோட்டையைக் கட்டியெழுப்புங்கள் - ரயன் ஹாலிடேயூதர்கள் தங்களுக்கென்று ஒரு தாய்நாடு இல்லாமல் வெகு காலம் பல நாடுகளில் சிதறிக் கிடந்த காரணத்தால், தங்களுடைய மதக் கோவிலைத் தங்களுடைய மனத்திற்குள் கட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். மத நம்பிக்கையுடன் இருந்த ஒவ்வொரு யூதரும் கடும் துன்பத்திற்கு ஆளானபோதெல்லாம், இந்த மானசீகமான கோவிலிலிருந்து தங்களுக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக் கொண்டனர்.

ஸ்டோயிசிசத் தத்துவவியலாளர்கள் அகக் கோட்டை என்று அழைத்த விஷயத்தோடு இது பெருமளவுக்கு ஒத்துப் போகிறது. நமக்குள் இருக்கும் அக்கோட்டையை எந்தவொரு புறக் காரணியாலும் தகர்க்க முடியாது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் பிறக்கும்போதே அந்தக் கோட்டையுடன் பிறப்பதில்லை. அதை நாம்தான் கட்டியெழுப்பி வலுப்படுத்த வேண்டும். நல்ல நேரங்களில் நாம் நம்மையும் நம்முடைய உடலையும் வலுப்படுத்திக் கொண்டால், கடினமான நேரங்களில் அது நமக்குக் கைகொடுக்கும். நாம் நம்முடைய அகக் கோட்டையைப் பேணி வந்தால், அது நம்மைப் பாதுகாக்கும்.

தியோடார் ரூஸ்வெல்ட்டைப் பொறுத்தவரை, அவருடைய வாழ்க்கை ஒரு சண்டைக் களமாகவும், அவர் ஒரு போராளியாகவும் இருந்தார். அதில் தப்பிப் பிழைப்பதற்காக அவர் வலுவானவராகவும், துணிச்சல்மிக்கவராகவும், எதையும் எதிர்கொள்ளத் தயாராகவும் இருக்க வேண்டியிருந்தது. அதற்காக அவர் ஏகப்பட்ட ஆற்றலைச் செலவழித்தார்.

தியோடாரைப்போல நாம் பிறக்கும்போதே பலவீனமாகப் பிறந்திருந்தாலும் சரி, தற்போது நல்லதொரு வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும் சரி கடினமான காலம் வந்தால் அதை எதிர்கொள்வதற்கு நம்மை நாம் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தில் சிறந்து விளங்குவதற்குக் கடுமையான பயிற்சி தேவை. முட்டுக்கட்டைகளையும் இன்னல்களையும் எதிர்கொள்வதற்கும் அது பொருந்தும்.

கற்களால் ஆன வளைவு ஒன்றை நிர்மாணிக்க வேண்டுமென்றால், அது கீழே விழுந்துவிடாமலிருக்க அதை வலுப்படுத்த வேண்டும். அக்கற்கள் ஒன்றோடொன்று பிணைந்திருக்கும்போது அது கீழே விழாமல் இருக்கும். இது ஒரு சிறந்த உருவகம்.

அதிக எதிர்ப்புகள் இல்லாத ஒரு பாதை ஒரு மோசமான ஆசிரியராகும். நம்மை பயமுறுத்துகின்ற விஷயங்களிலிருந்து பயந்து ஓடுவது சரியான செயலாக இருக்காது. நம்முடைய பலவீனங்களை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை.

தனியாக இருப்பதில் உங்களுக்குப் பிரச்சனை ஏதும் இருக்கிறதா? சவால்களை எதிர்கொள்வது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறதா? நிச்சயமின்மை உங்களுக்குக் கலக்கத்தைக் கொடுக்கிறதா? அழுத்தமான சூழல்களில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

ஏனெனில், இப்படிப்பட்ட நிகழ்வுகள் உங்களுக்கு ஏற்படும். அவை எப்போது நிகழும் என்று எவருக்கும் தெரியாது என்றாலும் அவை நிகழப் போவது மட்டும் உறுதி. வாழ்க்கை உங்களிடமிருந்து அதற்கொரு விடையை எதிர்பார்க்கும். அதனால் அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்வது நல்லது.

அதுதான் உங்களுடைய கவசம். அது உங்களைத் தோற்கடிக்கப்பட முடியாத ஒருவராக ஆக்காது என்றாலும், துரதிர்ஷ்டம் வந்து கதவைத் தட்டும்போது அதற்குத் தயாராக இருப்பது நல்லது. ஏனெனில், அது கண்டிப்பாக நிகழும்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – எதுவுமே வேலை செய்யாதிருக்கும் நிலைக்குத் தயாராக இருங்கள் – ரயன் ஹாலிடே

 

MUST READ