பராசக்தி திரைப்படத்தில் இந்தி திணிப்பு சாமானியர்களின் பிரச்சினை என்பது காட்டப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்று பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.


பராசக்தி திரைப்படம் பேசும் அரசியல் குறித்து பத்திரிகையாளர் ஆழி செந்தில்நாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- நான் கடந்த 15 ஆண்டு காலமாக மொழி உரிமை, இந்தி திணிப்புக்கு எதிரான களத்தில் செயல்பட்டு வருகிறேன். 1965 மொழிப் போராட்டம் குறித்து படம் வருகிறபோது, அந்த படம் எப்படி இருக்கும் என்று எனக்கு அச்சம் இருந்தது. படத்தை பார்த்து முடித்தபோது, 1965 மொழிப் போராட்டத்தின் மெசேஜ் பார்வையாளர்களுக்கு நன்றாகவே சென்றடைந்துள்ளது. மொழி பிரச்சினை என்பது சாதாரண மக்களின் வாழ்வியல் பிரச்சினை என்பதை, படத்தின் தொடக்கம் முதலே காட்டுகிறார்கள். மாணவர்களிடம் இந்த போராட்டம் பரவ காரணம் திராவிட இயக்கத்தினரும், தமிழறிஞர்களும் ஊட்டிய உணர்வு மற்றொன்று அவர்கள் உண்மையாகவே மொழி திணிப்பு பிரச்சினை என்று பார்க்க காரணம் மணி ஆர்டர் இந்தியில் மாற்றியதாகும். அதை இந்த படத்திலும் காட்டியுள்ளனர். மொழி பிரச்சினையை வாழ்வாதார பிரச்சினையாகும். இதில் இந்தியை அவமதிக்கும் விதமாக எந்த வசனமும் இல்லை. அதேவேளையில் தமிழ் மொழியை உயர்த்தும் விதமான வசனங்களும் இடம்பெறவில்லை. இந்தியை கட்டாயம் ஆக்க வேண்டாம் என்று முதலமைச்சர் பக்தவத்சலத்திடம் இளைஞர் அழுவார். ஆனாலும் இந்தி கட்டாயமாக்கப்பட்டது.

தமிழ் மாணவர்களின் போராட்டத்தில் மற்ற மாநிலத்தவர்களும் கலந்துகொண்டது போல பராசக்தி படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. 1965ல் தமிழர்களின் போராட்டம் தான் மிகப்பெரியது. முக்கியமானது. அதை தெளிவாக காட்டியுள்ளனர். நான் மொழியுரிமை தொடர்பான கூட்டங்களுக்காக வெளி மாநிலங்களுக்கு செல்கிறபோது அவர்கள் தமிழ்நாடு மாணவர்கள் போராட்டத்தை அறிந்து, தங்கள் ஊர்களிலும் அதுபோன்று போராட்டம் நடைபெற்றதாக சொன்னார்கள். கர்நாடகாவில் கொங்கணி மொழி போராட்டத்தின் போது, 5 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று சொன்னார்கள். எனவே தமிழ்நாடு போன்று மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தான் இந்தியை எதிர்த்தார்கள். மற்றவர்கள் இந்தி படித்து மேலே வந்துவிட்டனர் என்று குற்றம்சாட்டுவார்கள். ஆனால் மொழிப் போராட்டத்தை தாங்கி பிடிக்க திமுக என்கிற ஒரு கட்சி இருந்தது. மற்ற இடங்களில் அப்படி அமைப்புகள் இல்லை. இங்கே அண்ணா போன்ற தலைவர்கள் இருந்தனர். மற்ற இடங்களில் அப்படியான தலைவர்கள் கிடையாது. இந்த தகவல்களை புத்தகத்தில் எழுதுவதால் பொதுமக்களிடம் குறைந்த அளவு சென்று சேரும். அதே நேரம் திரைப்படமாக எடுத்தால் பெரும்பான்மை மக்களிடம் சென்றடையும்.

பராசக்தி திரைப்படத்தில் இந்தி எதிர்ப்பை ஒரு சாமானிய மக்களின் பிரச்சினையாக காட்டியது முக்கிய விஷயமாகும். நாடு தழுவிய அளவில் இந்திக்கு எதிர்ப்பு இருந்தது என காட்டுவது இன்றைக்கு மொழி அரசியலுக்கு தேவையான ஒன்றாகும். காரணம் நம்மால் தனித்து நின்று போராடி வெற்றி பெற முடியாது. பராசக்தி படத்தை இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும். இந்தி எதிர்ப்பு அரசியல் என்பது தமிழ்நாட்டு அரசியல் தான். ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டுமானது அல்ல. அது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான அரசியலாகும். அதை அனைத்து மொழிகளிலும் எடுத்துச்செல்ல முயற்சித்தால் வரவேற்பேன். அன்றைக்கு யுபிஎஸ்சி, ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்களில் தான் வேலை கிடைக்கும். நாம் இந்தி படிக்காவிட்டால் அந்த இடத்திற்கு இந்திக்காரர்கள் வருவார்கள் என்கிற நிலை இருந்தது. ஆனால், இன்றைக்கு சூழல் மாறியுள்ளது. இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல், ரயில்வே, வங்கித் துறைகளில் வடமாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகளவு உயர்ந்துள்ளது.

பராசக்தி படத்தில் இன்னும் கூடுதலாக திமுக குறித்தும், அண்ணா குறித்தும் வந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். இன்றைக்கு சென்சார் போர்டு இவ்வளவு கட் கொடுத்திருக்கிறார்கள். அண்ணாவை பார்த்து இன்று வரை கதி கலங்குகிறார்கள். அண்ணா குறித்து பேசுகிறபோதே திரையரங்கில் கைதட்டல்கள் வந்தது. 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் திடீரென தோன்றியது கிடையாது. 1937ல் பெரியார் தொடங்கிய முதல் மொழிப்போர் தொடங்கி, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அதற்கு பிறகு பல போராட்டங்கள் நடந்தன. 1959 நாடாளுமன்றத்தில் இ.வி.கே. சம்பத் இந்த பிரச்சினையை எழுப்பியபோது, பிரதமர் நேருவின் வாக்குறுதி அளிக்கப்பட்டது. திமுக, திக உருவாக்கிய களத்தில் தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் போராட்டத்திற்கு வருவதற்கான சம்பவங்கள் நேருவால், கட்சியால் தூண்டப்படவில்லை. குறிப்பாக மதுரையில் நடைபெற்ற போராட்டங்கள், இலக்குவணார் போன்ற தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்டதாகும். இந்தி எதிர்ப்பு என்பது 1964 முதல் திமுக பிரச்சாரத்தால் வலுப்பெற்றது. பலர் தீக்குளித்தும், நஞ்சுண்டும் உயிர் நீத்தனர். 1965ல் மிகப்பெரிய போராட்டமாக உருவெடுத்தது. கட்சிக்கு அப்பாற்பட்டதாக அது மாறிவிட்டது.

ஒரு கட்டத்தில் போராட்டத்தை நிறுத்தச் சொல்லி அண்ண அறைகூவல் விடுத்தபோதும் மாணவர்கள் மறுத்துவிட்டார்கள். போராடிய மாணவர்களின் பிரதான கோரிக்கை என்பது 1965க்கு பிறகும் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியுடன் ஆங்கிலமும் தொடர வேண்டும் என்பதாகும். காரணம் 1965 முதல் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. டெல்லியின் முகமாக காங்கிரஸ் முதலமைச்சர் பக்தவத்சலம் இருந்தார். அதனால் இந்தி மொழி கட்டாயமாகும் என்று சொன்னார். இறுதியில் போராடிய மாணவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். பிரதமர் இந்தியை திணிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தார். ஆங்கிலம் தொடரும் என்று அறிவித்தார். அது திமுக, மாணவர்களின் வெற்றி தான். அந்த அறிவிப்பு காரணமாகவே இன்று வரை இந்தியாவில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக கொண்டுவர முடியவில்லை. இனி அவர்களால் ஆங்கிலத்தை நீக்க முடியாது. அந்த மாற்றத்தை உருவாக்கியது தான் இளைஞர்களின் வெற்றி. அதை தமிழ்நாட்டில் சட்டமாக்கியது அண்ணாவின் திட்டம். இருமொழி கொள்கையை அரசியலமைப்பு ரீதியாக காப்பாற்றப்பட்டது.


