கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாஜகவுக்கு பணிந்து போனால் விஜயின் அரசியல் காலியாகிவிடும். அதே நேரம் பணியாவிட்டால் அவர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.


கரூர் கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக உள்ள நிலையில், இது குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பேசியதாவது:- விஜய் மீதான விசாரணை வளையம் அவரை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. வழக்கமாக அரசியல் கட்சிகளில் உள்ளவர்கள் பல வழக்குகளை, கைது நடவடிக்கைகளை சந்தித்து இருப்பார்கள். சிபிஐ விசாரணை, நீதிமன்றம் போன்றவை அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. ஆனால் விஜய் மாதிரி கேரவனின் குளிர்சாதன அறைகளுக்குள் பத்திரப்படுத்தப்பட்டு, பவுன்சர்களால் பாதுகாக்கப்பட்ட ஒரு நபரை திடீரென சிபிஐ அதிகாரிகள் ஒரு நாள் முழுவதும் விசாரிக்கிறார்கள் என்கிறபோது மிகுந்த மன உளைச்சல் ஏற்படும். கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் விசாரணை நடத்துகிறார்கள்.
விஜயின் வாகன ஓட்டுநரும் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை சொல்லியுள்ளார். சிபிஐ அதிகாரிகள் கரூர் தான்தோன்றிமலை என்கிற இடத்தில் முகாமிட்டிருக்கிறார்கள். எனவே என்ன நடைபெற்றது என்று சொல்வதில் விஜய்க்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. காரணம் இது எதிர்க்கட்சிகள் செய்த சதி என்று, சிபிஐ அதிகாரிகளிடம் ஆதாரமற்ற புகார்களை ஒருபோதும் சொல்ல முடியாது. அவர் கேள்விகளை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். அது மிகவும் உளவியல் சிக்கல் வாய்ந்தது தான்.

விஜய், களத்தில் செயல்படாவிட்டாலும் மேடைகளில் பாஜக கொள்கை எதிரி என்று பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசு, விஜய்க்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை பயன்படுத்திக் கொள்ளத்தான் பார்ப்பார்கள். விஜய், தவறுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய இடத்தில் தான் இருக்கிறார். தவறே நடக்கவில்லை என்று அவர் சொல்ல முடியாது. ஆனால் தவறை ஒப்புக்கொள்கிற இடத்திலும் அவர் இல்லை. ஊடகங்களுக்கோ, கட்சியினருக்கோ அரசியல் சூழ்ச்சி என்று சொல்வது போல விஜய் எளிதாக கடந்து போய்விட முடியாது. நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சியினர் ஜனநாயகன் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பாஜக அவரை கையில் எடுக்கிறபோது, மாற்று முகாமாக விஜய் காங்கிரசுக்கு தான் வர முடியும்.
காங்கிரஸ் அவரை ஆதரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் அவரை அரசியல் ரீதியாக பயன்படுத்த முடியும் என நினைக்கிறார்கள். காங்கிரஸ் விஜயை ஆதரிப்பதற்கு காரணம் 2026 சட்டப்பேரவை தேர்தல் அல்ல. அவர்கள் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்கள். தேர்தலில் விஜயுடைய வாக்கு சதவீதம் தெரியவந்தால், அவர் வலிமையான வாக்கு வங்கியை வைத்திருந்தால் அந்த வாய்ப்பை ஏன் தவறவிட வேண்டும் என்பதற்காக தான். சிபிஐ விசாரணை நெருக்கடிகள் மூலம் விஜய் பாஜகவுக்கு எதிரான மனநிலைக்கு மாற போகிறாரா? அல்லது அடிபணிந்து போகிறாரா? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.

திமுக, தவெகவை எதிரியாக பார்க்கவில்லை. கரூர் சம்பவத்தின் போதும் கூட சொந்த கட்சியினர் இறப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்று ஆதரவு தெரிவிப்பது போல தான் முதலமைச்சர் பேசினார். இதை அரசியலாகவே தமிழக அரசு பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் தமிழக அரசை, திமுகவை வரம்பு மீறி விமர்சித்து விட்டோம். அதனால் பழிவாங்கி விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக என் கட்சியினரை கைது செய்யாதீர்கள். என்னை கைது செய்யுங்கள் என்று தேவையில்லாமல் பேசிவிட்டார். மாநில எல்லைக்குள் விசாரணை வளையத்திற்குள் அவர் சிக்கி இருந்தால் சமரசம் செய்ய வாய்ப்பு கிடைத்திருக்கும்.
ஆனால், தேவையில்லாமல் சிபிஐ விசாரணை மூலம் ஒரு தேசிய கட்சியிடம் போய் சிக்கிக் கொள்ள, ஆதவ் அர்ஜுனா தான் மாட்டி விட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று தவெக தரப்பில் சொல்கிறார்கள். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அதற்கு ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லையா? கிடைத்திருந்தால் அந்த வீடியோவை சமூக வலை தளங்களிலேயே விட்டிருப்பார்கள். அப்படி எதுவும் இல்லாதபோது அதை மக்கள் நம்ப மாட்டார்கள்.

புழல் சிறை வரை போக வேண்டிய விசாரணையை, திகார் சிறை வரைக்கும் எதற்காக கொண்டு போனார்கள். அவருக்கு திகார் சிறை தான் பிடித்துள்ளதா? சிறையில் இருக்க விஜய் தயாராக உள்ளாரா? வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்கும் முன்பாக கரூர் சம்பவத்திற்கு காரணம் என்று இவர் தான், விஜயை உள்ளே வைத்துவிட்டால், எவ்வளவு நாட்களுக்கு அனுதாபம் தேடுவார். கொஞ்ச நாட்கள் தான், கட்சியினருக்கு கிளர்ச்சி போன்று தோன்றும். பின்னர் சில நாட்களில் அது நீர்த்து போய்விடும். அதை நோக்கி நகர்ந்தால்தான் பாஜகவுக்கு அரசியல் ஆதாயம். வேறு வழியே இல்லை என்கிற நிலை ஏற்பட்டால் தான், விஜய் அடிபணிவார்.
அமித்ஷாவிடம் போய் அவர் பன்ச் டயலாக்குகளை பேச முடியாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்னால் மண்டியிடுவதா? அவர்களை மறுப்பதா? என இரண்டு வாய்ப்புகள் உள்ளன. மண்டியிட்டால் கட்சி காணாமல் போய்விடும். மறுத்தால் பல நெருக்கடிகள் வரும். அதை எதிர்கொள்ள விஜயிடம் தில் இருக்கா என்பது தான் கேள்வி. அவரின் நெருக்கடியை பயன்படுத்திக்கொள்ள காங்கிரஸ் பார்க்கிறதே தவிர, அவர் முதலமைச்சர் ஆகிவிடுவார் என்று நினைக்கவில்லை. அவர்களுக்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும். விஜயின் வாக்கு வங்கி எதிரிகளுக்கு போய்விடக்கூடாது என்பதற்காக அவர்கள் அப்படி பேசுகிறார்கள்.


