டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், விஜயுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு கட்சி தலைமை கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக,திராவிட வெற்றிக் கழக நிர்வாகி வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டம் குறித்து திராவிட வெற்றிக் கழக முதன்மை செயலாளர் வல்லம் பஷீர் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் மூலம் தேசிய அரசியலில் பாஜகவை வீழ்த்துகிற வியூகத்தை காங்கிரசை முன்னிலைப்படுத்தி தான் வகுக்க முடியும் என்பதை நோக்கி மு.க.ஸ்டாலின் நகர்கிறார் என்பதை ராகுல்காந்தியும், காங்கிரஸ் நலன் விரும்பிகளும் அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த சூழலில் தமிழ்நாட்டில் ஏதோ புரட்சி வந்துவிட்டது போலவும், ஆட்சியில் பங்கு தராவிட்டால், ஆட்சியில் பங்கு தருகிற விஜயுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்கிற கருத்து பேசப்படுகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது என்று நான் தொடர்ச்சியாக பல்வேறு விவாதங்களில் குற்றம்சாட்டி வருகிறேன். கட்சி எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு 2029 மக்களவை தேர்தல் முக்கியம் என்று ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாவுக்கு வேலை பார்க்கிறார்கள். தற்போது அவர்களை டெல்லிக்கு அழைத்து ராகுல்காந்தி பேசியுள்ளார். இதை முன்கூட்டியே அவர் செய்திருக்க வேண்டும்.

ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் என்று ஒரு நபர் வந்தார். விஜயை, மறைமுகமாக சென்று சந்தித்தார். தமிழ்நாட்டு அரசியலை ஆய்ந்து அறிந்தவர் போல ஊடகங்கள் முன்னால் நின்று பேசினார். அப்போதே இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிரவீன் சக்கரவர்த்தி, மாணிக்கம் தாகூர், மயூரா ஜெயக்குமார் போன்றவர்கள் பின்வரிசையில் உட்கார வைக்கப்பட்டது, அவர்களை ராகுல்காந்தி லெப்ட் ஹேண்டில் டீல் செய்துள்ளார் என்பதை காட்டுகிறது. 2004 முதல் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் திமுக – காங்கிரஸ் கூட்டணி உள்ளது. அப்போது இந்த கூட்டணி எவ்வளவு பலம் வாய்ந்த கூட்டணி என்று ராகுல்காந்திக்கும், மல்லிகார்ஜுனா கார்கேவுக்கும் நன்றாகவே தெரியும். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது தான் திமுகவின் உயிர் கொள்கை. அந்த மாநில சுயாட்சியை சிதைத்து போடுகிற வேளையை காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் செய்தால், தமிழ்நாடு எப்படி கொந்தளிக்கும் என்றும் எல்லோருக்கும் தெரியும். அப்போது காங்கிரஸ் விஷப்பரீட்சைக்கு வருமா? தமிழ்நாட்டின் தன்மைக்கு எதிராக கூட்டணி ஆட்சி என்கிற குரல் காங்கிரசில் இருந்து எழுகிறபோது, அதற்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்

ராகுல்காந்தி, கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் பேசுகிறபோது, கடுமையான எதிர்ப்பை கட்சியின் தேசிய தலைமை பதிவு செய்திருக்கிறது. கட்சியை வழிநடத்துவது குறித்து தேசிய தலைமைக்கு அறிவுறை கூறுகிறீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளது. அதை தான் செல்வப்பெருந்தகை நயமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆட்சியில் பங்கு கேட்கிற ஜோதிமணி போன்றவர்களால் காங்கிரசில் இருந்து தனியாக பிரிந்து வந்து மக்களை திரட்டுகிற வலிமை உள்ளதா? மாணிக்கம் தாகூர் எம்.பி., விருதுநகரில் என்ன சாதித்து விட்டார்? அவருடைய சொந்த மாமனார் மேலூரில் போட்டியிட்ட போது, அவரை வெற்றி பெற வைக்க முடிந்ததா? காங்கிரசில் இருந்தால்தான் குறைந்தபட்சம் எதையாவது பெற முடியும். உங்களை மூன்று முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியது திமுக தான். 2009ல் வைகோவை வீழ்த்துகிற அளவுக்கு உங்களுக்கு வாக்கு வங்கி இருந்ததற்கு திமுக தான் காரணம். திமுக – காங்கிரஸ் கூட்டணி தான் காரணம். அன்றைக்கு இதுபோன்று எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்?

காங்கிரசில் 70 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருகிறேன் என விஜய் சொல்வது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை போன்றதாகும். தேர்தலுக்கு முன்னதாக தான் இதெல்லாம் கிடைக்கும். தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பூஜ்யம் என்கிற எண் தான் கிடைக்கும். திமுக கிட்டத்தட்ட 40 சதவிதம் வாக்குகளை வைத்துள்ளது. அவர்களுடன் உங்களுடைய 5 சதவீதம் வாக்குகளை சேர்த்தால் 45 சதவீதத்துக்கும் மேற்பட்டதாகும். அப்போது வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் எப்படி இருக்கும். ஆனால், விஜயின் வாக்கு சதவீதம் என்ன என்று யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டு அரசியல் களத்தில் விஜய் யார் என்றே தெரியாது. நீங்கள் வெறும் கூட்டம். அதில் பங்கேற்கிற இளைஞர்களின் ஆர்ப்பரிப்பு. தற்போது அவர் ஊடகத்தில் லைம்லைட்டில் தோன்றுகிற அடிப்படையில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட். இதை அடிப்படையாக கொண்டு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துவிடுவீர்களா?
தேர்தலுக்கு அடிப்படையானது பூத் ஏஜெண்டுகளை நியமிப்பதாகும். அது தவெகவுக்கு தெரியாது. அவர்களுக்கு சொல்லித் தருவதற்கான நாலஜ் காங்கிரஸ் கட்சியினருக்கு உள்ளதா? அவர்கள் தேர்தல் பணிகளை மறந்த 40 வருடங்கள் ஆகிறது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் அப்படி ஒன்று நடைபெற வில்லை. அவர்கள் திமுக, அதிமுக தயவில் ஒவ்வொரு தேர்தல்களிலும் வெறறி பெற்றுள்ளனர். எத்தனை இடங்களில் போட்டியிடுவது அல்ல தேர்தல். வெற்றி பெறுவது தான் தேர்தலாகும். திமுக கூட்டணியில் இடம்பெற்றால் மட்டும்தான் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பை பெற முடியும். இல்லாவிட்டால் காங்கிரஸ் பிரதிநிதித்துவம் சட்டப்பேரவையில் இல்லாமல் போய்விடும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


