spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைமோடி மேடையில் விஜய்? முரண்டு பிடிக்கும் சிபிஐ! அமித்ஷா போட்ட லாக்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

மோடி மேடையில் விஜய்? முரண்டு பிடிக்கும் சிபிஐ! அமித்ஷா போட்ட லாக்! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!

-

- Advertisement -

சிபிஐ விசாரணை முடிவில் விஜய் என்டிஏ கூட்டணியில் சேர்வார் என்பதும், பிரதமர் மோடி கூட்டத்தில் அவர் மேடை ஏறுவார் என்பதும் சாத்தியமில்லாதது என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக விஜயிடம் 2வது முறையாக சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்டநெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு இரண்டாவது முறையாக விஜய் ஆஜராகியுள்ளார். அவர் பொங்கல் விடுமுறைக்கு பின்னர் ஆஜராகியது வழக்கமான நடைமுறை தான். ஆனால் ஜனநாயகன் திரைப்படத்திற்கு, விஜய் ஏன் வாய் திறக்கவில்லை? என்பது தான் கேள்வி. ரூ.500 கோடியில், பலருடைய உழைப்பில் உருவான படத்திற்கே குரல்கொடுக்கவில்லை என்றால், நாளை அவர் தமிழக முதல்வரானால் ஏதேனும் தமிழ்நாட்டின் உரிமையை பறித்தால் அப்போதும் மௌனமாகவே இருப்பாரா? பாஜக என்றால் வாய் திறக்காததும், திமுக என்றால் பாய்வதும் என்று விஜய் ஏற்கனவே தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விட்டார். ஆனால் விமர்சிக்க வேண்டிய நேரத்தில் கூட பாஜகவை விமர்சிக்க மறுக்கிறார். ஜனநாயகன் விவகாரத்தில் அவர் பாஜகவை கூட எதிர்க்க வேண்டாம். இது உங்கள் உரிமை. சென்சார் போர்டில் உள்ள நபர் புகார் அளிக்க  சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்றே தெரியவில்லை. அவர் நினைத்தால் கூட அந்த காட்சியை கட் செய்ய அதிகாரம் உள்ளது.

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டது தவெகவினர் தான். சிபிஐ விசாரணையில் கிரில் பண்ணுகிறார்கள் என்றெல்லாம் தகவல் வருகிறது. ஆனால் சிபிஐ விசாரணையை ஒரு கருவியாக வைத்து, விஜயை தங்கள் அணிக்கு இழுப்பதற்கான எல்லா வேலைகளையும் அமித்ஷா செய்வார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றாலும் கூட எந்த நிபந்தனையின் அடிப்படையில் ஒப்புக்கொள்வார் என்பது தெரியவில்லை. அதனால் தான் வாய்ப்பு குறைவு என்று சொல்கிறோம். விஜய்க்கு ஆதரவு தளம் உள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். எடப்பாடி , விஜய் இருவரும் தாங்கள் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பிரச்சாரம் செய்துவிட்ட நிலையில், தற்போது கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் இல்லை என்பது இருவருவது தொண்டர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் சோர்ந்து போவார்கள். அதனால் முழுமையான பலன் இருக்காது. சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு போனால் கிடைக்குமா? என்கிற தயக்கம் விஜய்க்கு இருக்கும். சிபிஐ விசாரணை முடிந்து வரும்போது  விஜய் கையெழுத்து போட்டு விட்டுதான் வருவார், ஜன.23 கூட்டத்தில் விஜய் மேடை ஏறுவார் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஆனால் அதற்கு வாய்ப்புகள் குறைவுதான்.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், கூட்டணி தொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம் என கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளது. இது இந்த பிரச்சினைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ராகுலின் மௌனத்தை கள்ள மௌனம் என்று நான் குற்றம்சாட்டியிருந்தேன். மாணிக் தாக்கூரின் கருத்து கட்சி விரோத கருத்து அல்ல. ஆனால் அதை சொல்ல வேண்டிய இடம் கட்சி தலைமையிடம் தானே தவிர, சமூக வலைதளங்கள் அல்ல. கட்சியின் உத்தரவை அவர் எந்த அளவுக்கு மதிக்கிறார் என்று பார்க்க வேண்டும். பிரவீன் சக்கரவர்த்தியும் அந்த கூட்டத்தில் கடுமையாக கண்டிக்கப்பட்டார். ராகுல்காந்தியின் பெயரை தவறாக பயன்படுத்தியதாகவும், பேச்சுவார்த்தை நடத்துகிற அதிகாரத்தை உங்களுக்கு யார் வழங்கியது? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கார்கே, அவரிடம் நேருக்கு நேராக கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரசுக்கு அதிக இடங்களை கேட்பது பிரவீன் சக்கரவர்த்தியின் உரிமை. ஆனால் அதை பொது வெளியில் கேட்கக்கூடாது. அது புத்திசாலித்தனம் அல்ல.

பிரதமர் மோடி வருகையின்போது, கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. பாஜகவினர் தும்பை விட்டு வாளை பிடிக்கிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ், தினரகன் ஆகியோர் தாங்கள் என்டிஏவில் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் அதை ஆமோதிக்கவில்லை. தற்போது ஓபிஎஸ், தினகரனை வரவழைத்து வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். அதேபோல், அதிமுகவில் இருந்த கே.ஏ.செங்கோட்டையனை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவரை கட்சியை விட்டு நீக்கியபோது அவருடைய போனையே எடுக்காமல் இருந்தனர். இதனால் செங்கோட்டையன் வேறு வழியில்லாமல் விஜய் கட்சிக்கு போக காரணம் பாஜக தான். அன்புமணியும் பிரியப்பட்டு என்டிஏ கூட்டணிக்கு போகவில்லை. காரணம் அவர் மீது இந்தூர் மருத்துவக்கல்லூரி வழக்கு நிலுவையில் உள்ளது.

விஜய்க்கு கூடுகிற கூட்டத்தை பார்க்கிறபோது எல்லா அரசியல்வாதிகளுக்கும் அவரிடம் போக வேண்டும் என்ற ஆசை வருகிறது. ஆனால் அரசியல் கட்சிகள் ஏன் அவரிடம் போகவில்லை என்றால்? விஜய் இன்னும் அரசியல்வாதியாகவே மாறவில்லை. அவர் இன்னும் மக்களிடம் போகவில்லை. தனி விமானத்தில் தான் பயணம் செய்கிறார். ஜனநாயகன் விவகாரத்தில் வாய் மூடி மௌனமாக இருக்கிறார். அவர் அரசியலே செய்ய மறுக்கிறார் என்கிற குழப்பம் தான் அவரை நோக்கி அரசியல் கட்சிகள் செல்லாமல் இருக்க காரணமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ