த.வெ.க கட்சி நடத்த வெளிநாடு மிஷனரிகளிடம் இருந்து பணம் பெறப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அது உண்மையாக இருப்பின் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- விஜய் இரண்டாவது முறையாக சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். கடந்த விசாரணையின்போது பொங்கல் பண்டிகைக்காக விஜய் அனுமதி கோரினார். இதனால் பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி போன்ற அரசியல் தலைவர்கள் கட்சி நிர்வாகிகளுடன் பொங்கல் கொண்டாடினர். ஆனால் விஜய் அப்படி எதுவும் பொங்கல் கொண்டாடவில்லை. எனவே சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள அவர் தயாராகி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தினகரன் நாளிதழிலில் வெளியாகி உள்ள செய்தியில், இந்த விவகாரத்தில் என்.ஐ.ஏ வர உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, தவெக பொதுக்கூட்டங்கள் நடத்த வெளிநாடுகளில் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகளிடம் கோடிக்கணக்கில் நிதி பெற்றுள்ளதாக தரவுகள் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் உண்மை தன்மை குறித்து செய்தி வெளியிட்டவர்களுக்கும், அதனை விசாரிக்கும் அதிகாரிகளுக்கும் தான் தெரியும். ஒருவேளை இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் விஜய் மிகவும் ஆபத்தில் உள்ளார்.

ஏற்கனவே கரூர் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் சூழலில், அதிக அதிகாரங்களை கொண்ட என்.ஐ.ஏ உள்ளே வருகிறபோது விஜய்க்கு சிக்கல் அதிகமாகும். கரூர் கூட்டத்திற்கு செலவு செய்தது யார் என்கிற கேள்வி எழுகிறபோது விஜய் கொடுத்தார் என்றால் அதற்கு கணக்கு காண்பிக்க வேண்டும். அல்லது கட்சி நடத்த ஜான் ஆரோக்கியசாமிக்கு பணம் கொடுத்தார்கள் என்றால் யார் கொடுத்தார்கள்? என்கிற கேள்வி வரும். கரூர் வழக்கை சமாளிக்க முடியாமல் மத்திய அரசின் சிபிஐக்கு மாற்றியதன் விளைவு இன்றைக்கு என்.ஐ.ஏ வருகிறது. இதன் தீவிரத் தன்மை விஜய்க்கு தெரிகிறதா? என்று தெரியவில்லை. விஜய்க்கு வாக்கு அரசியல் சிக்கல். பூத் அரசியல் செய்ய முடியாது. அதனால் பிரச்சாரம் செய்ய முடியாது என்று சொன்னார்கள். அதேபோல் விஜய் செய்யவில்லை. ஒருவேளை வெளிநாட்டில் இருந்து பணம் வந்து, அதற்கான கணக்குகளை முறையாக காட்டாவிட்டாலோ, அல்லது கொடுத்தவர்கள் சரியான நபர்களாக இல்லாவிட்டாலோ அது விஜய்க்கு பிரச்சினையாகும். அப்போது என்ஐஏ விசாரிக்கும். இது தொடர்பான செய்திகள் மற்ற ஊடகங்களில் இன்னும் வெளியாகவில்லை. அப்படி வெளியாகும்போது அதன் உண்மைத் தன்மை தெரியவரும்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற குறைவான நாட்களே உள்ளன. தற்போதைய சூழலில் விஜய் இங்குதான் இருக்க வேண்டும். ஆனால் டெல்லியில் போய் உட்கார்ந்து இருக்கிறார். ஜனநாயகன் பட விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக இருநதால், என்ன என்ன சிக்கல்கள் வரும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டால், ஜனநாயகன் படம் அரசியல் படம் என்று சொல்லி, அதற்கான கணக்குகளையும் தேர்தல் செலவில் சேர்ப்பார்கள். அரசியலுக்கு வருகிறபோது விஜய் இதற்கு தயாராக இருக்க வேண்டும். ஆனால் விஜய் எதற்கும் தயாராகமல், தன்னை சுற்றிலும் அரசியல் அனுபவமில்லாதவர்களை வைத்துக்கொண்டு, கட்சியினரை சந்திக்காமல் அவரால் எவ்வளவு நாட்களுக்கு அரசியல் செய்ய முடியும்? இதேபோல் மற்ற கட்சிகளாலும் விஜய்க்கு நெருக்கடி உள்ளது. திமுகவை தீய சக்தி என்று சொல்கிறபோது, அவர்கள் செய்யலாம்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விஜய் கண்டுகொள்ளவே இல்லை. விஜய்க்காக சட்டமன்றத்தில் பேசியபோது விஜய் நன்றி கூறவில்லை. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை விட தன்னை பெரிய ஆளாக நினைத்துக்கொள்ளும் விஜய், தற்போது பிரதமர் மோடியிடம் போய் மாட்டியுள்ளார். அப்போது அதிமுக, பாஜக எதற்காக உங்களை மன்னிக்க வேண்டும். ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்த போது விஜய் நன்றி கூட தெரிவிக்கவில்லை. அவருக்கு அரசியல் கலாச்சாரம் தெரியவில்லை. தன்னை எம்.ஜி.ஆர் போன்று நினைத்துக்கொள்கிற விஜய், அவருடைய பிறந்த நாளன்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்திருக்கலாம். விஜய்க்கு அரசியல் தலைவர்களை எப்படி அணுக வேண்டும் என்று கூட தெரியவில்லை.


