வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த சந்திப்பில் ஒன்றிய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளருமான பியூஸ் கோயலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் கூட்டாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் உடன் இருந்தனர். சந்திப்பிற்கு பின்னர், கூட்டணி தலைவர்கள் அனைவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்திற்கேற்ற பலமான கூட்டணியாக உருவாகி வருவதாக தெரிவித்தார்.
திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் செயல்படும் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்றும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய சக்தியாக தேர்தலில் செயல்படும் என்றும், மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழ்நாடு மேலும் வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள், கொலைகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இந்த நிலையை மாற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அவசியம் என கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், பிரதமர் நரேந்திர மோடி ஆதரவுடனும் தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்லும் என்றும், கூட்டணி வெற்றிக்காக புதிய நீதிக் கட்சி முழுமையாக பாடுபடும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல், ஜி.கே.வாசனை கடந்த 20 ஆண்டுகளாக அறிந்திருப்பதாகவும், ராஜ்யசபாவில் தமிழ்நாட்டு மக்களுக்காக அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியவை என்றும் பாராட்டினார்.
மேலும், ஏ.சி.சண்முகம் நம்பிக்கைக்குரிய கூட்டணி தலைவராக இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி நாளுக்கு நாள் வலிமை பெற்று வருவதாக கூறினார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சியை அமைக்கும் என பியூஸ் கோயல் உறுதியளித்தார்.
தமிழ்நாட்டில் நிலவும் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் ஆட்சி அகற்றப்படும் என்றும், “ஆன்ட்டி நேஷனல் பாலிடிக்ஸ்” செய்து வரும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை வரும் தேர்தலில் மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் மக்கள் பெருந்திரளாக வரவேற்கின்றனர் என்றும், திமுகவின் திறனற்ற ஆட்சியால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். உதயநிதி ஸ்டாலின் மேற்கொள்ளும் வெறுப்பு பேச்சுகளுக்காக அவர் பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
கூட்டணி ஆட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த பியூஸ் கோயல், நாங்கள் ஒரு குடும்பமாக உள்ளோம்; குடும்பமாகவே முடிவெடுப்போம் என கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை அதிமுக தான் – தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன்


