தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது உறுதி என்றும், இரண்டாம் கட்ட அமைச்சரவை பதவியேற்பின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அதில் இணைவார்கள் என்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளை சந்தித்த தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முக்கிய தகவல்களை பகிர்ந்தனர். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதி என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இந்த சந்திப்பில், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், தொடர்ந்து கடினமாக உழைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர்கள், அவரிடமிருந்தும் வாழ்த்து பெற்றனர். அப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்தில் இருந்து மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் குமார், மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றதாகவும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் அளிக்கும் பணிகளில் அனைவரும் தீவிரமாக செயல்பட வேண்டும் என தலைவர்கள் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். அதேபோல், தமிழக வெற்றிக் கழக தரப்பிலிருந்து அமைச்சரவையில் இடம்பெற காங்கிரஸுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், எத்தனை அமைச்சர்கள் இடம்பெறுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார்.
மேலும், அமைச்சரவை தொடர்பான இறுதி முடிவை தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் எடுப்பார் என்றும், ஆனால் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதி என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார். உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ் தனது முழு பலத்தை வெளிப்படுத்தும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கிரிஷ் ஜோடங்கர் தெரிவித்தார்.
அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை தூக்கும் கட்சி – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
