Homeசெய்திகள்அரசியல்விடுதலை புலிகள் பெயரில் கொலை மிரட்டல் - முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி ...

விடுதலை புலிகள் பெயரில் கொலை மிரட்டல் – முன்னாள் காவல்துறை பெண் அதிகாரி Death Threats in the name of LTTE – Former Police Women

-

விடுதலை புலிகள் என்ற பெயரில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக, ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த பெண் அதிகாரி காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றதாக கூறிவரும் சீமான், ஆட்களை வைத்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக சந்தேகம் என முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசுயா பேட்டியளித்துள்ளார்.

1991-ஆம் ஆண்டு நடந்த ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவர் அனுசுயா டெய்சி. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சேர்ந்து, தற்போது மாநில செயலாளர் பொறுப்பில் உள்ளார். எழுவர் விடுவிப்பு குறித்து அவ்வப்போது விமர்சித்து வரும், அனுசுயா டெய்சிக்கு செல்போனில் கொலை மிரட்டல் வருவதாக, டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இனி நளினியை பற்றி பேசினாலோ விடுதலை புலிகள் தலைவரைப் பற்றி பேசினாலோ கொலை செய்து விடுவதாகவும், தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும், வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆபாசமான வாய்ஸ் மெசேஜ் மூலமாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனுசுயா கூறினார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் மனு அளித்ததாக அனுசியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

தனக்கு கொலை மிரட்டல் விடுவிப்பவர் வெளிநாட்டு எண்ணிலிருந்து அழைத்து தன்னை கழுத்து அறுத்து போடுவதாகவும் நளினி விடுதலை குறித்து பேட்டி அளித்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள் என்றார் அனுசுயா.

நாம் தமிழர் கட்சியின் சீமான் ராஜீவ் காந்தியை தாங்கள் தான் கொன்றோம் என்று ஏற்கனவே கூறியுள்ளார். ஆகையால் அவரது ஆட்களும் எனக்கு தொடர்பு கொண்டு இந்த கொலை மிரட்டல் விடுக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தார்.

வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ் மற்றும் அதற்குரிய எண்களை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பித்து உள்ளேன். புகாரை பெற்றுக் கொண்ட ஆணையர் அதன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் விசாரணைக்குப் பிறகு எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாக கூறியுள்ளார் என அனுசுயா தெரிவித்தார்.

MUST READ