இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். “கஸ்தூரி ரங்கனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவியலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.மேலும் தனது வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது; “இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக பணியாற்றிய முனைவர் கே. கஸ்தூரி ரங்கன் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
மாநிலங்களவை உறுப்பினர், தேசியக் கல்விக் கொள்கைக் குழுத் தலைவர், பல்கலைக்கழக வேந்தர் என பல பதவிகளை வகித்த பெருமைக்குரியவர். மத்திய அரசின் விருதுகளான பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளுக்குச் சொந்தக்காரர். இந்தியாவின் புகழை விண்வெளிக்கு எடுத்துச் சென்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவருடைய இழப்பு அறிவியல் துறைக்கு மிகப் பெரிய இழப்பாகும்.
முனைவர் கஸ்தூரி ரங்கன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவியலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என கூறியுள்ளார்.
யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்