தென்காசியில் பாஜக பிரமுகரை தாக்கிய திமுக எம்.எல்.ஏவை கைது செய்யக் கோரி மறியல் செய்த பாஜகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராஜா. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான ராஜ்குமார் தோல்வியை தழுவினார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் தென்காசி சிந்தாமணி பகுதியில் கோயில் திருவிழா நடைபெற்றது.

அப்போது உணவு பரிமாறும் பந்தியில் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும்போது வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இரு கட்சித் தொண்டர்களிடையே சலசலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட அப்போது வழக்கறிஞர் ராஜ்குமாரை திமுக எம்எல்ஏ ராஜா தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ராஜ்குமார் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற தொடங்கிவிட்டார்.

இதனை கண்டிக்கும் வகையில் ராஜாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்காக பாஜகவினர் போலீசாரிடம் அனுமதி கோரினர். ஆனால் இதெற்கெல்லாம் அனுமதி தரமுடியாது என போலீஸார் கையை விரித்துவிட கோபம் அடைந்த பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தென்காசி பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டோரை கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர்களை கைது செய்த போலீசார் அங்கிருந்து அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
