ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டிருக்கிறார்.


ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக தென்னரசுவை அறிவித்தார் அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி.
அதிமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, ஈரோடு மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக உள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் வேட்பாளரை அறிவித்தது அதிமுக.

இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுவார் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ. வாக இருந்தார் தென்னரசு.
2001-2006 மற்றும் 2016 முதல் 2021 வரை இரு முறை ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார் தென்னரசு. 2016 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானவர் தென்னரசு என்பது குறிப்பிடதக்கது.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 27.02.2023 அன்று நடைபெற உள்ள (98) ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, தேமுதிக சார்பில் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

இடைத்தேர்தலில் பாஜக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் முன்னரே வேட்பாளரை அறிவித்து பழனிச்சாமி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்காமல் பாஜக காலம் தாழ்த்தி வரும் நிலையில் அதிமுக இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி வேட்பாளரை அறிவித்தார். அதிமுக அணிகள் எங்களது முடிவுக்கு காத்திருப்பதில் தவறில்லை என பாஜக கூறியிருந்தது.
இந்நிலையில் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்று தெரிவதற்கு முன்பே வேட்பாளரை அறிவித்தார் பழனிசாமி.
திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் ஈரோடு கிழக்கு தொகுதியில் செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

ஒருவேளை பாஜக சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தங்கள் தரப்பு வேட்பாளர் வாபஸ் பெற்றுக் கொள்வார் என ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


