தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவராகத் தனது முதல் உரையை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், ஆளுங்கட்சியின் வெற்றி மற்றும் மக்கள் செல்வாக்கு குறித்து மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
“பெரும்பான்மை உங்கள் பக்கம் இல்லை“
சட்டமன்றத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி ஆளுங்கட்சியைச் சாடினார். அவர் பேசியதாவது:

“இந்த அவையில் நீங்கள் ஆளுங்கட்சியாக அமர்ந்திருக்கலாம். ஆனால், உண்மையைச் சொல்லப்போனால் தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. தேர்தலில் பதிவான மொத்தம் 4.93 கோடி வாக்குகளில், ஆளுங்கட்சி பெற்றுள்ளது வெறும் 1.72 கோடி வாக்குகள் மட்டுமே. மீதமுள்ள 3.21 கோடி மக்கள் உங்களுக்கு எதிராகவே வாக்களித்துள்ளனர்.”
65% மக்கள் நிராகரிப்பு
தொடர்ந்து புள்ளிவிவரங்களை விளக்கிய அவர், “புள்ளிவிவரப்படி பார்த்தால், இந்த அரசு 65% மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒன்று. வெறும் 35 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழகமும் உங்கள் பின்னால் இருப்பதாகக் காட்டிக்கொள்வது மக்களை ஏமாற்றும் செயல்,” என்று தெரிவித்தார்.
ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த உதயநிதி, “இந்த ஆட்சி மீது எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கு வாக்களித்த அந்த 1.72 கோடி மக்களுக்கே இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறிய இந்த அரசு, தனது தோல்விகளை மறைக்கப் புள்ளிவிவரங்களை மாற்ற முடியாது,” என ஆவேசமாகப் பேசினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் இந்த நேரடித் தாக்குதலால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுங்கட்சித் தரப்பில் இதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டி உதயநிதி ஸ்டாலினின் உரைக்கு ஆதரவு தெரிவித்தனர்.
புதிய பேரவைத் தலைவருக்கும் துணைத் தலைவருக்கும் ஸ்டாலின் வாழ்த்து
