அதிமுகவின் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மறைந்ததை அடுத்து உடனடியாக பன்னீர்செல்வம் முதல்வர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அதற்கு அடுத்து அதிமுகவில் சில அதிரடியான மாற்றங்கள் நடந்து வந்தன .

அதுவரைக்கும் பின்னணியில் இருந்து கட்சியை இயக்கி வந்த சசிகலா, தானே பொதுச்செயலாளராக வேண்டும் . முதலமைச்சராக வேண்டும் என்று முடிவு எடுத்து முதலில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் . அதன்பின்னர் பன்னீர் செல்வத்தை பதவியை விட்டு விலக வலியுறுத்தி இருக்கிறார். அவர் தயங்கி மறுத்த போது அதட்டி, உருட்டி மிரட்டி பதவி விலகச் சொன்னதாக பலரும் சொல்லுகின்றார்கள் .
அதனால் தானோ என்னவோ தெரியவில்லை. சசிகலா, டிடிவி தினகரனுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தினார் பன்னீர்செல்வம் . அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆனாலும் , சசிகலாவால் திட்டமிட்டபடி முதலமைச்சராக முடியவில்லை. அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டி வந்து விட்டதால் அவர் எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகி விட்டு சிறைக்குச் சென்றார்.
சசிகலா சிறைக்குச் சென்றதும் அதிமுகவை முழுவதுமாக கைப்பற்றி விட முடிவெடுத்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்டமாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆப்பு வைக்க துடித்துக் கொண்டிருந்த பன்னீர் செல்வத்தை சமாதானம் பேசி அதிமுகவிற்குள் கொண்டு வந்தார். கட்சி தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் சசிகலா மற்றும் பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலா ,பன்னீர்செல்வம்,, பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகிய நான்கு பேரும் இணைந்தால் தான் அதிமுக வெற்றி சாத்தியப்படும். இல்லையென்றால் திமுகவின் வெற்றிக்கு அது சாதகமாகி விடும் என்று தொண்டர்களும் பாஜகவினரும் நினைப்பதால் பிரிந்தவர்கள் ஒன்று கூட வேண்டும் என்று எத்தனையோ முயற்சிகள் நடந்தன. ஆனால் பழனிச்சாமியோ இவர்களுடன் இணைவதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறார். இதனால் வேறு வழி இன்றி டிடிவி தினகரனும், பன்னீர்செல்வமும் முதலில் இணைந்து இருக்கிறார்கள். இதன் பின்னர் இந்த அணியில் சசிகலா இணைய இருப்பதாக தகவல்.
இந்த நிலையில் உங்களுக்கு எதிராக தர்ம யுத்தம் நடத்திய ஓபிஎஸ் மீண்டும் உங்களுடன் இணைந்து செயல்பட்டால் தொண்டர்களும் மக்களும் எப்படி ஏற்றுக் கொள்வார்? என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் நேர்காணலில் எழுப்பிய கேள்விக்கு, ’’அதிமுகவில் பிரிந்து நின்றதால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அதனால் ஒன்றுபட வேண்டும் என்று தொண்டர்கள் நினைப்பதையே நானும் பன்னீர்செல்வமும் நினைத்தோம் . அதனால் ஒன்றிணைந்து இருக்கிறோம் . பன்னீர்செல்வத்தினை அதிமுகவிலிருந்து நீக்கியவுடன் அவரின் ஆதரவாளர் சையதுகான் எங்களுக்கு பொதுவான நண்பர் ஒருவர். நாங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். அதற்குத் தான் எனக்கு விருப்பம் என்றும் ஓபிஎஸ் உடன் கேட்டு சொல்லுங்கள் என்றும் சொன்னேன் .
தொலைபேசியில் பேசும்போது கூட தர்ம யுத்தம் ஏன் நடத்தினேன் என்று ஓபிஎஸ் என்னிடம் கூறினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் சசிகலா முதலமைச்சர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று நானும் விரும்பினேன். ஆனால் நீங்கள் தான் எனக்கு முதல்வர் பதவி கொடுத்து பின்னர் ஒன்றரை மாதத்தில் என்னை நீக்கம் செய்யுமாறு சொன்னதால்தான் தர்ம யுத்தம் நடத்தியதாக ஓபிஎஸ் தன்னிடம் கூறி இருக்கிறார்’’என்கிறார்.