பா.ம.கவின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதையொட்டி, பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் மருத்துவர் எழுதியுள்ள கடித்தில், ”என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே! தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்கிற போதே, இந்த 36 ஆண்டுகளில் ஓர் அரசியல் கட்சியாக என்னென்ன நாம் சாதித்தோம்? என்ற வினாவை நீங்களும் எழுப்புவீர்கள், நானும் என்னை நோக்கி அதே வினாவைத்தான் எழுப்புவேன்.

பாட்டாளி மக்கள் கட்சியின் துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ – மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்றுத் தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது. மனநிறைவானது.
தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நம்மை விட அதிகமாக போராட்டக் களத்தில் நின்ற ஒரேயொரு கட்சியை யாராவது காட்டிவிட முடியுமா? நேற்று எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்த விஷயங்களை, இன்று ஆளுங்கட்சி ஆனதும், எதிர்த்த விஷயத்துக்கே அங்கீகாரம் கொடுத்து ஆதரிக்கும் ‘இரண்டு கழக’ ங்களையும், மத்தியில் ஆண்ட காங்கிரசையும், இப்போது ஆள்கிற பா.ஜ.க.வையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மக்கள் நலன்சார்ந்து எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இருந்து வருவதை நினைத்து பெருமையடைகிறேன். மக்கள் குரலாகவே நம்முடைய குரல் எப்போதும் இருக்கும் காரணத்தால், எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவென்று எல்லாத் தரப்பும் உற்று நோக்கும் நம்பிக்கை கட்சியாக இருக்கிற ஒன்று போதுமே நிம்மதிக்கு!
பாட்டாளி சொந்தங்களைப் பொறுத்தவரை, ‘நாம் ஆள்கிற காலம், இன்றே வந்து விடாதா அல்லது இரண்டொரு நாளில் வந்து விடாதா?’ என்ற ஆற்றாமை இருக்கத்தான் செய்யும், அதை நானும் அறிவேன். நம்முடைய கையில் ஆட்சியதிகாரம் இல்லாத போதே நாம் வென்றெடுத்திருக்கும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களும், தீர்வுகளும் ஏராளம். ஆள்வோரால் கூட சாத்தியமற்ற பல்வேறு மக்கள்நலப் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி செய்து முடித்திருக்கிறது என்ற உண்மையை நமக்கு ‘எதிர் அரசியல்’ செய்வோர்கூட மறுக்க முடியாதே.
நம்மால் பொது ஆதாயம் பெற்றோர், பொதுவெளியில் அதை ஒப்புக்கொள்ள ‘சுயம்’ தடுத்தாலும், நான்கு அறைகளுக்குள் நம் உழைப்பில் பெற்ற பலனை குடும்பத்தாரோடு பேசிக் களிப்பதை மறுக்கத்தான் முடியுமா !
தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தி, பா.ம.க. என்பதை காலம், தன்னுடைய பக்கங்களில் மறக்காமல் பதிவு செய்தே வைத்திருக்கிறது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20% இட ஒதுக்கீடு, 10.50% வன்னியர் இடஒதுக்கீடு, 3.50% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.50% இட ஒதுக்கீடு; என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது; பாட்டாளிகளின் சொந்தங்களான நாம் தான்.
சமூகநீதிக்கான வரலாற்று ஆவணங்களை மொத்தமாக அடுக்கி வைத்துப் பார்த்தால், அதில் தொண்ணூறு விழுக்காடு, பாட்டாளி மக்கள் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள் அல்லவா அணிவகுக்கும்! சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில், மத்திய அரசை எதிர்பார்த்து காத்திராமல்; மாநில அரசுகளே அதைச் செய்யலாம் என்று, கால் நூற்றாண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் கட்சி, பா.ம.க. மட்டும்தான்.
தமிழ்நாட்டின் தலைவர்கள் தவிர, தமிழ்நாட்டை ஆண்ட- ஆண்டு கொண்டிருப்பவர்கள் தவிர, பிற மாநிலத்தார் அதை இரு காதுகளையும் திறந்து வைத்துக் கேட்டார்கள்; இன்று பல மாநிலங்கள், தாமாகவே சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாராகி பல மாநிலங்களில் அது சாத்தியமாகி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி 37- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், “மக்களை சந்தியுங்கள், அவர்களுடன் இணைந்து வாழுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்காக போராடி , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்” என்பதைத் தான்.
என் வாழ்நாளில் 95 ஆயிரம் கிராமங்களுக்கு நான் நடந்தே பயணம் போயிருக்கிறேன், நடந்து போய்த்தான் எளிய மக்களை அவர்கள் வாழ்விடத்திலேயே சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை என் தோளில் தூக்கி சுமந்திருக்கிறேன். உங்களை 95 ஆயிரம் கிராமங்களுக்குப் போகச் சொல்லவில்லை, குறைந்தது 95 கிராமங்களுக்காவது போய் வாருங்கள். காரில் போகாதீர்கள், அவர்களை விட்டு அந்நியமாகி நிற்காதீர்கள், மோட்டார் சைக்கிளில் போங்கள், உங்களோடு மனம் விட்டுப் பேசுவார்கள்.
இன்னும் தீர்க்க முடியாத பிரச்சினைகளை மக்கள் தலையில் சுமந்து திரிகிறார்கள், அந்த சுமைகளை நீங்கள் இறக்கி வாங்கிக் கொள்ளுங்கள். எப்படித் தீர்க்க வேண்டுமோ, அப்படி தீர்க்கப் பாருங்கள், வழி தெரியவில்லையா, தைலாபுரத்துக்கு எனக்கு ஒரு போன் செய்யுங்கள், நான் தீர்க்கிறேன், நீங்கள் நம்புகிற இந்த ‘அய்யா’ வால் எதையும் செய்யமுடியும்.
அரசியல் ரீதியாக மட்டுமல்ல, சட்ட ரீதியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும், ஊடகங்கள் வாயிலாகவும், திரளான மக்கள் போராட்டத்தின் வாயிலாகவும் எனக்குப் போராடத் தெரியும், நியாயம் பெற்றுத்தரவும் முடியும். எதுவுமே எனக்குப் புதிதல்ல. பல போராட்டப் பாதைகளை உருவாக்கிய நான், புதுப்பாதையை உருவாக்கி உங்களுக்காக போராட மாட்டேனா?
எப்போதும் போல துடிதுடிப்புடன் உங்கள் ஒவ்வொருவரின் குரல்களையும் நான் உள்வாங்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பாட்டாளி சொந்தங்களின் மக்கள் நலப்பணிகளையும், என்னுடைய பணிகளையும் அவர்கள் (மக்கள்) கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான வெகுமதி நமக்கு கிடைப்பதில் சற்றே தாமதம் ஆகிறது, அவ்வளவுதான். உரிய நேரத்தில், உரிய வகையில் வெகுமதியை மக்கள் ஊரறியத் தருவார்கள்.
அந்த வெகுமதிதான் ஆட்சி அதிகாரம். மக்கள் நலன் சார்ந்தும், மண்ணின் வளம் சார்ந்தும், இனம் -மொழி சார்ந்தும் ஒருநாளும் சிந்திக்காது, “நான் -நாம்” என்று மட்டும் சிந்தித்துக் கிடப்போர்க்கே, அதிகாரத்தை கொடுத்திருக்கும் மக்கள், நமக்கு அதைக் கொடுக்க மாட்டார்களா, உறுதியாய் கொடுப்பார்கள். நமக்கான அதிகாரம் தேடிவரும் காலம் தொலைவில் இல்லை.
மக்களின் ஆதரவைப் பெறாமல் எப்போதுமே வெற்றி சாத்தியம் இல்லை. நம்மைப் பொறுத்தவரையில் தேர்தல் தூரத்தில் இருக்கிறது, மிக அருகில் வந்து விட்டது என்ற அரசியல் கணக்குப் போட்டு மக்கள் பணிக்கான திட்டமிடலை வைத்துக் கொள்வது இல்லை. இதை எல்லோருமே ஒப்புக் கொள்வர்.
எல்லா நாள்களும் மக்களுக்கான நாள்கள்தான். 365 நாட்களும் மக்களை நேரில் சென்று சந்தியுங்கள். அவர்களின் வாழ்விலும், தாழ்விலும் இணைந்து இருங்கள். பா.ம.கவின் 37-ஆம் ஆண்டு தொடக்க விழா வாக்குறுதியாக அனைவரும், இதை உறுதிபட ஏற்றுக் கொள்ளுங்கள். எதிர்வரும் எல்லா ஆண்டுகளிலும் இதை கைவிடாது கடை பிடியுங்கள். பாட்டாளிகளைப் பொறுத்தவரை ஜூலை மாதம் கொண்டாட்டங்களின் மாதம். ஜூலை 16-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள். ஜூலை 20- ஆம் கேகி வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள்.
தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ள கட்சியும், சமூகநீதிக்காக சமரசமின்றி போராடும் கட்சியுமான பாட்டாளி மக்கள் கட்சி, இந்த (ஜூலை) மாதம் 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக உழைக்கும் சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் நாள் சென்னை கடற்கரை சீரணி அரங்கில் தொடங்கபட்ட பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த 36 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை நடத்தி, மக்களின் ஆதரவைப்பெற்று, இதோ 37 ஆம் ஆண்டில் தன்னுடைய பங்களிப்பை இன்னும் சிறப்பாக அளிக்கும் திசை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் பா.ம.க. வின் 36 ஆண்டுகால பணியும், அதே 36 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மக்கள் நலன் சார்ந்த அரசியல் மாற்றங்களும் ஒரே நேர்க்கோட்டில் தான் இருக்கும். ஏனெனில் பா.ம.க.வின் பங்களிப்பு இன்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மத்தியிலும் இதே நிலைதான். மக்கள் நலன் சார்ந்த மசோதா வெற்றி பெற்றது என்றால், அதில் பா.ம.க.வின் பங்களிப்பு உறுதியாக இருக்கும், மக்கள் நலனுக்கு எதிரான ஒரு மசோதா தோற்றுப் போயிருக்கிறது என்றால் அது பா.ம.க.வின் நிலைப்பாட்டால்தான் என்ற நிலைஇருக்கும். இது எவராலும் மறுக்க முடியாத உண்மை.
தமிழ்நாட்டு அரசியலில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக எப்போதும் இருப்பது பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் கடந்து வந்திருக்கும் 36 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 51 ஆவணங்களை வெளியிட்ட ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவைகள் வெறும் ஆவணங்கள் அல்ல, மக்கள் நலனுக்கான பாதுகாப்பு அரண்கள், என்றே அறிஞர் பெருமக்கள் எப்போதுமே சொல்வார்கள்.
தமிழ்நாட்டின் முதன்மைத் தொழிலான வேளாண்மைக்கு என தனி நிழல்நிதிநிலை அறிக்கை, எல்லா ஆட்சி காலத்திலும் தாக்கல் செய்யப்படுகிறது என்றால், அதற்கு காரணம் பாட்டாளி மக்கள் கட்சி தான்.
2008-ஆம் ஆண்டில் தொடங்கி 17 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து வெளியிட்டு பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்து வரும் அழுத்தம் காரணமாகத்தான்; இன்று, வேளாண்மைக்கு தனி நிழல் நிதி அறிக்கையை ஆட்சியாளர்கள் வெளியிடுகிறார்கள். தமிழ்நாட்டில் மக்களைப் பாதிக்கும் எந்த சிக்கலாக இருந்தாலும் அதற்கான முதல் எதிர்க்குரல் பா.ம.சு.விடம் இருந்து தான் ஒலிக்கும்.
அப்படியான எதிர்க்குரலின் வேகத்தால், ஆட்சியாளர்களால் திரும்பப்பெறப்பட்ட மக்கள் விரோத செயல்பாடுகள், அரசாணைகள், திட்டங்கள் ஏராளம். அதனால் தான் மக்கள் தங்களின் குரல்களை வெளிப்படுத்துவதற்கான கட்சியாக பா.ம.க.வை கருதுகின்றனர். பா.ம.க.வை தேடி வருகின்றனர். இதுவே பா.ம.க.வுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியதோடு நிறுத்தாமல், சட்டப் போராட்டமும் நடத்தி 3321 மதுக்கடைகளை மூடியது – மூட வைத்தது பா.ம.க.தான்.
மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு விஷயத்துக்கும் யாரையும் – எப்போதும் எதிர்க்கும் இடத்தில் பா.ம.க. நிற்கும் என்பதை என்னுடைய இறுதிமூச்சுவரை உறுதியாக கடைபிடிப்பேன். பாட்டாளி சொந்தங்களும் அதை பின்பற்ற வேண்டும்.
இதுவரை நாம் கடந்து வந்த 36 ஆண்டுகளை விட, இந்த 37- ஆம் ஆண்டு பல புதிய அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. முன்பை விட புதிய உற்சாகத்துடன் புதிய எழுச்சியுடன் எந்த போராட்டத்தையும் மக்களுக்காக முன்னெடுக்க தயாராகவே இருக்கிறேன். இனி நமக்கெல்லாம் பொற்காலம்தான். நீங்கள் குக்கிராமங்களில் இருக்கிறீர்களோ, நகரங்கள்- தலை நகரங்களில் இருக்கிறீர்களோ; உங்கள் வீடுகள், அலுவலக முகப்புகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடிகளை ஏற்றுங்கள். ஏழை மக்களுக்கு சட்ட உதவியும், மருத்துவ உதவியும், கல்வி உதவியும் செய்வதில் முதன்மையான நபர்களாக இருங்கள். எனக்கு உங்களைப் பற்றிய கவலைதான் எப்போதும். ஆரோக்கியத்தை விட்டு விடாதீர்கள். மதுவுக்கும், புகையிலைக்கும் எதிராக நாம் முன்னெடுத்த போராட்டங்கள் லட்சத்தை தாண்டும்.
என்னைப் போன்று ஆரோக்கியமாக வாழுங்கள், உழைப்பை ஒருபோதும் கை விட்டு விடாதீர்கள், உங்களின் உற்சாகக்குரலே என்னை புதுப்பிக்கிறது; என்னை உற்சாகப் படுத்துகிறது; இன்னும் போராடச் சொல்கிறது; எதிரே எத்தனைபேர் என்று கணக்கு வைத்துக் கொள்ளாமல் மோதிப் பார்க்க சொல்கிறது; எதிர்க்க இளைஞர்களை மட்டுமே மனசு எதிர்பார்க்கிறது; இத்தனை தெம்பும், தினவும் பாட்டாளி சொந்தங்களின் அரவணைப்புதான் எனக்கு கொடுக்கிறது.
பாட்டாளி சொந்தங்களின் நெடுநாள் கனவை நிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாயத் தொடங்கி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ பாட்டாளி சொந்தங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது, அதன் சீற்றமும் குறையாது; மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது” என கூறியுள்ளாா்.
ஆட்சியில் பங்கு வேண்டும்! அதிமுகவை அதிரவைத்த அமித்ஷா! தராசு ஷ்யாம் நேர்காணல்!