எங்களை பார்த்தால் பாவமாக இல்லையா என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம். சட்டமன்ற தேர்தல் தொடர்பான கூட்டணி குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதாக தெரிவித்தார். கூட்டணி குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதிமுக குறித்த சட்டப் போராட்டத்தை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தி வருவதாக கூறிய ஓ.பி.எஸ், தங்களின் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதை அறியவே ராமநாதபுரத்தில் போட்டியிட்டதாக விளக்கமளித்தார்.
தன்னை தோல்வியடையச் செய்ய, ராமநாதபுரத்தில் தனது பெயரிலேயே பல வேட்பாளர்களை களமிறக்கி சூழ்ச்சி செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தாா். அதிமுகவை மீட்டெடுப்பதற்காகவே தாங்கள் போராடி வருவதாகவும், பிரிந்து கிடக்கும் அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்பதே எனது கோரிக்ககை என்று அவர் வலியுறுத்தினாா்.
அதிமுக ஒன்றாக இருக்கிறதா, பிரிந்திருக்கிறதா என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும் என்ற கூறிய ஓ.பி.எஸ், எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடியும் டி.டி.வி.யும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைந்திருப்பதை சுட்டிக்காட்டினார். அதிமுகவில் இணைப்பதற்காக, எடப்பாடி பழனிசாமியிடம் டி.டி.வி தினகரன் பரிந்துரைக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, என்னை பார்த்தால் பாவமாக இல்லையா என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
