பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகியுள்ள அண்ணாமலை, தனக்கு வழங்கப்பட்டு வரும் மத்திய அரசின் ‘Z+’ பிரிவு பாதுகாப்பை ரத்து செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசியலில் புதிய அரசியல் பயணத்தை தொடங்கும் நோக்கில் தனி மக்கள் இயக்கத்தை உருவாக்கியுள்ள அண்ணாமலை, புதிய கட்சி அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவரது புதிய இயக்கத்தில் ஏராளமானோர் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்ட காலத்திலிருந்து, பாதுகாப்பு மதிப்பீட்டின் அடிப்படையில் மத்திய அரசு சார்பில் அண்ணாமலைக்கு ‘Z+’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன் கீழ், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் தற்போது பாஜகவிலிருந்து முழுமையாக விலகியுள்ள நிலையில், இந்த உயர்மட்ட பாதுகாப்பு தனக்கு தேவையில்லை என்று அண்ணாமலை கருதியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, ‘Z+’ பாதுகாப்பை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அவர் உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், ஒப்புதல் கிடைத்தால் தற்போது பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் திரும்ப அழைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தமிழக காவல்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் பைலட் வாகன பாதுகாப்பு மற்றும் உள்ளூர் போலீஸ் பாதுகாப்பு தொடரும் என கூறப்படுகிறது. பாஜகவிலிருந்து விலகி தனி அரசியல் பாதையைத் தேர்வு செய்துள்ள அண்ணாமலை, மத்திய அரசின் ‘Z+’ பாதுகாப்பை வேண்டாம் என முடிவு செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பா.ஜ.க-வில் இருந்து அண்ணாமலை விலகல்: ராஜினாமா கடிதத்தை ஏற்றது தேசியத் தலைமை!
