தமிழர்களின் இதயங்களை இசையால் வென்ற இசைஞானி இளையராஜா, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டால் தன் பெருமைக்கு தானே குந்தகம் செய்து கொண்டுள்ளார்.
இசையுலகிற்கு அளித்த பங்களிப்பிற்கு ஓரளவேனும் ஈடாகத்தான் இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அரசியல் நடவடிக்கைகளால் அல்ல என்பதை இளையராஜா மறந்து விட்டார் போலும். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் அவர் அவைக்கு வராமலே புறக்கணிப்பு செய்திருக்கலாம். யாரும் எதுவும் கூறியிருக்க மாட்டார்கள். ஆனால் அவைக்கு சென்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டு தனது வாக்கினை அவர் பதிவு செய்திருக்கிறார்.
இந்த சட்டத்திருத்தத்தால் மத்திய அரசு சொல்வது போல் ஒருசாராருக்கு நன்மைகள் ஏற்படலாம், அல்லது எதிர்கட்சிகள் அஞ்சுவது போல் தீமைகள் விளையலாம். காலம் அதனை முடிவு செய்யட்டும். களத்தில் உள்ள நேரடி அரசியல்வாதிகள் ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்கட்டும்.
ஆனால் நியமன உறுப்பினராக சென்ற இவர், ஒட்டுமொத்த நாடும் சர்ச்சையாக பேசிவரும் ஒரு விஷயத்தில் நடுநிலைமை எடுத்திருக்க வேண்டாமா? சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையமைத்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும், ஒரு தமிழனாக நமக்கும் பெருமை தேடித்தந்தார். இன்றோ, வக்பு சட்ட மசோதாவுக்கு வாக்களித்து விட்டு திரும்புகிறார்.
திரைப்படங்களில் பல சமயங்களில் மௌனத்தை இசையாக பயன்படுத்தும் இளையராஜா, அரசியல் விவகாரங்களில் அதேபாணியை பின்பற்றினால் நன்றாக இருக்கும்..!