தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது என சிபிஐ(எம்) அகில இந்திய செயலாளர் எம்.ஏ.பேபி விமர்சித்துள்ளாா்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அந்தக் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது என எம்.ஏ.பேபி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசிய அவர், ”தமிழக வெற்றிக்கழகத்திற்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், அதற்கு உரிய அவகாசம் வழங்கப்படாதது தவறான நடவடிக்கை” என்று கூறினார். மேலும், தமிழக வெற்றிக்கழகம் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் கேட்டிருந்ததாகவும், அதை ஆளுநர் ஏற்காதது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், முதலில் அந்தக் கட்சியையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தமிழ்நாடு பிரிவுகள் தங்களது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து வருவதாகவும் எம்.ஏ.பேபி தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவு அளிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இன்று மாலை சென்னைில் நடைபெறும் ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.
திமுக தலைவர் எடுத்த நிலைப்பாட்டை வரவேற்கின்றேன் – ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ
