“அதிமுக தலைமையை” ஏற்றால் மட்டுமே கூட்டணி- ஜெயக்குமார்
பாஜகவுடன் கூட்டணி குறித்து முடிவு செய்வது நாங்கள்தான் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “கூட்டணியில் அதிமுக தான் என்ஜின்” எந்த பெட்டியை சேர்க்க வேண்டும், நீக்க வேண்டும் என்பது, எங்களுக்குத் தெரியும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல. அதிமுகவுடன் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால் தமிழ்நாட்டில் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்தே விலகுவேன் என அண்ணாமலை பொதுவெளியில் பேசினால் அதுகுறித்து கருத்து சொல்வேன். குட்ட குட்ட குனியும் ஆட்கள் நாங்கள் இல்லை. எந்தக் கட்சியிலிருந்தும் யாரையும் இழுக்க வேண்டிய ‘அவசியம்’ அதிமுகவுக்கு இல்லை.
அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது. அதிமுக யாருக்கும் அடிபணிந்து செல்லாது. அதிமுக தலைமையை ஏற்றுக்கொள்பவர்களுடன்தான் கூட்டணி. பாஜகவினரை உற்சாகப்படுத்த அண்ணாமலை இப்படி பேசியிருக்கலாம். பாஜக உட்கட்சி கூட்டத்தில் பேசியதை பெரிதுபடுத்த தேவையில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும்” என்றார்.