Homeசெய்திகள்அரசியல்விஜயுடன் இருக்கும் 'ஜம்ப்' லிங்கங்கங்கள்..! தவெகவின் டேஞ்சர் பார்ட்டிகள்- வெடவெடக்கும் வெக்கேஷன் அரசியல்

விஜயுடன் இருக்கும் ‘ஜம்ப்’ லிங்கங்கங்கள்..! தவெகவின் டேஞ்சர் பார்ட்டிகள்- வெடவெடக்கும் வெக்கேஷன் அரசியல்

-

- Advertisement -

தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், ஒரு ஆடியோ லான்ச்சைப் போல கமர்ஷியலாக நடந்து முடிந்துள்ளது. தடவி, தடவி தமிழ் பேசும் ஆதவ், குழறி குழறி குதற்றும் ஆனந்த், பேசத்தெரியாது என்று ஒப்புக்கொண்ட ராஜசேகர், மைக் டெஸ்ட் செய்து நம்மை சோதித்த வெங்கட்ராமன்… வெண்சாமரம் வீசிக்கொண்டே தொகுத்து வழங்கிய ராஜ்மோகன்… இறுதியில் மனப்பாடம் செய்து வந்ததை அதே ஏற்ற இறக்கத்தோடு பேசிய விஜய்..

பொதுக்குழு என்றால் எப்படி இருக்க வேண்டும். ஒன்று ஆளுங்கட்சிக்கு எதிராக தொண்டர்கள் களத்தில் பணியாற்ற அவர்களுக்கான பாதை வகுத்து தந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் எதிர்கொள்ளும் உட்கட்சி பிரச்னை பற்றியாவது பேசி பற்றியெரிந்திருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் செத்தவன் கையில் வெத்திலைப்பாக்கு கொடுத்தது போல, ஒரே சவசவ…

கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக… இதனை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தி பேசி இருக்கிறார் விஜய். சரி, இந்த பொதுக்குழு மேடையில் விஜய்யுடன் அமர்ந்திருந்தவர்கள் யார்?. அவர்களைப் பற்றி சற்று ஆராயலாமா?. தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் கொண்டுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் புதுச்சேரிக்காரர். புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் என்ற கட்சி சார்பா புஸ்ஸி என்ற சட்டமன்றதொகுதியில் 2006-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். அந்த கட்சி காங்கிரசோடு இணைந்தபோதும் அதில் இருந்தவர். பின்னர் அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத் தலைவர் என்றாகி இப்போது கட்சியின் பொதுச்செயலாளராகவும் மாறிவிட்டார்.

கடந்த 2020-ம் ஆண்டு விஜய் கட்சி தொடங்குவதற்கு முன்னதாக அதற்கான கனவில் இருந்த எஸ்ஏசி, தேர்தல் ஆணையம் சென்று விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை பதிவு செய்ய முயன்றபோது, எஸ்ஏசி-க்கு எதிராகவே கம்பு சுற்றியவர் தான் இந்த ஆனந்த். விஜய் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும், ஆனந்த்க்கு முன்னதாகவே விஜய் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் ஊக்கத்துடன் இருந்தவர் திருச்சி ஆர்.கே.ராஜா. அவர் வெளியேற்றப்பட்டதற்கும் இந்த ஆனந்த் தான் காரணம் என்று பேசப்படுகிறது.

அடுத்து அமர்ந்து இருந்தது.. ஆதவ் அர்ஜுனா. பொதுக்குழு மேடையில் தேர்தல் வியூக வகுப்பாளர்களை வறுத்து எடுத்தார் அல்லவா.? அது ஏன் தெரியுமா? பழைய முதலாளிகள் மீதான கோவத்தை வேறு எங்கு காட்டுவது..? 2016 சட்டமன்ற தேர்தலில் சுனில் கனுகோலு என்ற தேர்தல் வியூக வகுப்பாளரிடம் வேலையில் சேர்ந்து திமுகவுக்காக உழைத்தார். 2021-ல் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து திமுகவுக்காக வேலைசெய்தார். பின்னர் வாய்ஸ் ஆப் காமென்ஸ் என்ற தேர்தல் வியூக நிறுவனத்தை தொடங்கி விசிகவுக்கு வேலைசெய்தார். 2024 ஜனவரியில் திடீரென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்து துணைப் பொதுச்செயலாளர் ஆகிறார். முடிந்தவரை திமுக – விசிகவுக்கு உரசலை ஏற்படுத்தி விட்டு வந்தவேலை முடிந்தது என்று அதே ஆண்டு டிசம்பரில் தவெக பக்கம் தாவுகிறார்.

வேறு யார் அமர்ந்து இருந்தது… நிர்மல்குமார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கத்துல நடுமுதலைக்குளம். இதுதான் நிர்மல்குமார் சொந்த ஊர். இவர் 2017-ல் அதிமுகவில் சேர்கிறார். அந்த காலக்கட்டத்தில் ஏற்பட்ட உள்கட்சி விவகாரத்தில் இவர் 2018-ல் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக-வில் இணைகிறார். பின்னர் அங்கிருந்து 2021-ல் பாஜகவுக்கு வருகிறார். ஐடி விங்க் பொறுப்பு வகிக்கிறார். அண்ணாமலையை சமாளிக்க முடியாமல் 2023-ல் மீண்டும் தாய்க்கழகமான அதிமுகவுக்கு மாறுகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கு இருந்தும் விலகி தவெகவுக்கு வருகிறார். 8 ஆண்டுகளில் 5 முறை கட்சிதாவிய ஜம்ப்லிங்கம் தான் இந்த நிர்மல்குமார்.

இப்படி திமுகவுக்காக, பாஜகவுக்காக உழைத்தவர்களை வைத்துக் கொண்டு தான் இரண்டு கட்சிகளையும் விமர்சிக்கிறார் விஜய். சரி, விஜய்யாவது ஏதேனும் புதிதாக பேசுவார் என்று பார்த்தால், விக்கிரவாண்டி மாநாடு, கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்கவிழா இவற்றில் பேசியதையே சற்று ஏற்ற இறக்கத்துடன் இறக்கி விட்டுள்ளார். கடைசியாக அவர் சொன்ன கருத்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி என்றார். இதே வார்த்தைகளைத்தான் எல்லா கட்சித் தலைவர்களும் பேசி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி – எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி – அண்ணாமலை
தமிழ்நாட்டில் நாம் தமிழருக்கும், திமுகவுக்கும் தான் போட்டி – சீமான்
தமிழ்நாட்டில் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி – விஜய்…

பார்ப்போம், யாருடைய ஸ்டேட்மென்ட் பலிக்கிறது என்று.. பொதுக்குழு செயற்குழு ஒருபக்கம் இருக்கட்டும், படபிடிப்புக்கு இடையே கொள்கைத் தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது போல் கட்சியை நடத்துவது சரியா?. பெரியார் சர்ச்சை, மும்மொழிக் கொள்கை விவகாரம், நிதி ஒதுக்கீடு மறுப்பு, என அரசியல் களம் திமிலோகப்படுகிறது. நீங்கள் நெட்பிளிக்சில் ஜனநாயகன் ரிலீஸ் எப்போது என்று பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் இந்த பொதுக்குழு மட்டுமல்லாது விஜய் நடத்தும் கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதுமே சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. ஏன் அசைவம் என்றால் விஜய்க்கு அலர்ஜியா?… எதற்கு இந்த பாஜகத்தனம். இன்றைய விருந்தில் பரிமாறிய பெயரைப் பாருங்கள்… வெஜ் மட்டன் பிரியாணி, சைவ மீன் குழம்பு..!

வெக்கேஷனில் அரசியல் செய்வது, கொள்கைத் தலைவர்களை கொச்சைப்படுத்தினாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது, செல்பி எடுக்க மட்டுமே களத்திற்கு வருவது… இதெல்லாம் சரிதானா மிஸ்டர் விஜய்.. உங்களை நம்பி இளைஞர் பட்டாளம் ஒன்று பின்திரண்டுள்ளது. முன்னத்தி ஏர் நீங்கள் முதலில் ஓடுங்கள்…

எதற்கெடுத்தாலும் 1967 மற்றும் 1977-ஐ ஒப்பிட்டு பேசுகிறீர்கள். ஆனால் பேரறிஞர் அண்ணா 1935-ல் இருந்து களத்தில் செயல்பட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 1955 முதல் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். நீங்களும் தமிழகத்திற்காக பாடுபட ஆரம்பித்தால் வெற்றிக்கழகமாக உங்களை மக்கள் மாற்றுவார்கள். அதற்கு முன்னதாக இந்த டயலாக் ஒப்புவித்தல் போட்டிகளை சற்று மட்டுப்படுத்தினால் நல்லது.

MUST READ