தமிழ் படித்த தகுதியான ஆசிரியர்கள் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடம் நடத்த நியமிக்கப்படுவார்கள் என உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “பொறியியல் கல்லூரியில் இப்பொழுதுதான் முதல் முறையாக தமிழை பாடமாக அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டு முதல் தமிழ் பாடம் நடத்தப்படும். தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களும் பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பாடமாக நடத்தப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள தமிழ் ஆசிரியர்களை பாடம் நடத்த அறிவுறுத்தியுள்ளோம்.

இன்னும் புதிதாக தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. யூசிசி, ஸ்சிலட், நெட் தேர்வு எழுதிய தகுதியான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். வெளிநாட்டு, மற்றும் வெளி மாநில மாணவர்களுக்கு மாணவர்களுக்கு தமிழ் பாடங்களை அவர்கள் புரிந்து படிக்கக் கூடிய வகையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பாடம் நடத்தவும், வெளிநாட்டு மாணவர்களும் திராவிட மாடல் ஆட்சியை தெரிந்து கொள்ளும் வகையில் நடத்தப்படும். தமிழ் வழி படித்தவர்களுக்கு பேராசிரியர் நியமனத்தில் 20% இடம் ஒதுக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் தமிழர் மரபு, தமிழர் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு பாடங்களும் நடத்தப்படும்.
நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் தருவதற்கு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் திமுக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்ட மன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினுக்கு இப்போது அமைச்சர் பொறுப்பு கொடுப்பதை தாமதம் தான். முன்பே கொடுத்திருக்க வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை நடத்துகிற இளைஞராக உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக செயல்படுவார். இதைவிட இன்னும் அதிகமான பொறுப்புகளை ஏற்று வருங்காலத்தில் உதயநிதி செயல்படுவார். வாரிசு அரசியல் என்று பார்த்தால் கூட பத்து சதவீதம் பேர் மட்டுமே அவர்களின் வாரிசுகள் அரசியலில் இருப்பர் மீதம் உள்ளவர்கள் அனைவருமே கட்சியில் இடம் பெற்றுள்ளனர்.
அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்புணர்வு. அனைவரும் இணைந்து செயலாற்றுவோம், உதயநிதி சீக்கிரம் துணை முதல்வர் ஆவார் என உங்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன்” எனக் கூறினார்.