மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்களின் சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. எம்.பி.க்களின் சம்பளம் தவிர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் மற்றும் ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த அதிகரிப்பு ஏப்ரல் 1, 2023 முதல் கணக்கிட்டு வழங்க்கப்படும். நாடாளுமன்ற விவகார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.24 லட்சமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், தினசரி சலுகைகள் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக அதிகரித்துள்ளது.
இது தவிர, முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியமும் மாதத்திற்கு ரூ.25,000 லிருந்து ரூ.31,000 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியதற்கான கூடுதல் ஓய்வூதியம் ரூ.2,000 லிருந்து ரூ.2,500 ஆக அதிகரித்துள்ளது. இந்த முடிவு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் நடுவில் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, எம்.பி.க்களின் சம்பளம், படிகளில் மாற்றங்கள் ஏப்ரல் 2018 இல் செய்யப்பட்டன.
2018 ஆம் ஆண்டில், எம்.பி.க்களின் அடிப்படை சம்பளம் மாதத்திற்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. பணவீக்கம், உயரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப அவர்களின் சம்பளம் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். 2018 ஆம் ஆண்டு திருத்தங்களின்படி, எம்.பி.க்கள் தங்கள் தொகுதியில் அலுவலகத்தை நடத்துவதற்கும் மக்களைச் சந்திப்பதற்கும் ரூ.70,000 உதவித்தொகை பெறுகிறார்கள். இது தவிர, அலுவலகச் செலவுகளுக்காக மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் மற்றும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெறுகிறார். இப்போது இந்த சலுகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, எம்.பி.க்கள் ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசி, இணையத்தைப் பயன்படுத்துவதற்கான சலுகைகளும் பெறுகிறார்கள். அவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு வருடத்தில் 34 இலவச உள்நாட்டு விமானங்களில் பயணிக்க முடியும். அவர்கள் வேலை, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எந்த நேரத்திலும் முதல் வகுப்பில் ரயிலில் பயணிக்கலாம். அவர்கள் சாலை வழியாகப் பயணம் செய்தால் எரிபொருள் செலவும் அவர்களுக்குக் கிடைக்கும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் 50 ஆயிரம் யூனிட் மின்சாரமும் 4 ஆயிரம் கிலோ லிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் அசரசு செய்கிறது. டெல்லியில் எம்.பி.க்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வாடகை இல்லாத வீடு. அவர்கள் தங்கள் பணி மூப்புக்கு ஏற்ப விடுதி அறைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பங்களாக்களைப் பெறலாம். அரசு வீடுகளை வாங்காத எம்.பி.க்களுக்கு ஒவ்வொரு மாதமும் வீட்டு உதவித்தொகை வழங்கப்படுகிறது.