பா.ஜ.க எடுக்கும் முடிவிற்காக காத்திருக்கிறோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்துள்ளார்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜே.சி.டி.பிரபாகர், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் 118 பேர் கொண்ட தேர்தல் பணி குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா எப்போது வேட்பாளரை அறிவித்தாலும் அவர்களுக்காக பணியாற்ற தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வேட்பாளரை உடனடியாக அறிவிப்பார் என கூறினார்.
அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அதிமுகவை பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே தற்போது உள்ளது எனவே இரட்டை இலை சின்னத்திற்கு அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடும் உரிமை ஓ பன்னீர்செல்வத்திடம் மட்டுமே உள்ளதாக கூறினார்.மேலும் எடப்பாடி பழனிச்சாமி சார்பில் உச்சநீதிமன்றத்தில் சின்னம் தொடர்பாக கொண்டு சென்றுள்ள முறையீடு எந்த வகையிலும் பொதுக்குழு வழக்குக்கு தடையாக இருக்காது என்றார்.
