கட்சியை விட்டு வெளியேறு… பழனிசாமியை கண்டித்து போஸ்டர்
நிலக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நீடிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவினை அடுத்து அதிமுக தற்போது முழுவதுமாக எடப்பாடி பழனிச்சாமி கைவசம் வந்துள்ளது. பெரும்பான்மையான அதிமுக எம்எல்ஏக்களும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதில், “அதிமுகவை 8 முறை தோல்வி பெற செய்த எடப்பாடியை கண்டிக்கிறோம்.. வெளியேறு.! வெளியேறு ! சமத்துவ பேரியக்கத்தை சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடியே வெளியேறு !” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. திண்டுக்ல் தெற்கு மாவட்டம், நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம் சார்பாக இந்த போஸ்டர்கள் நிலக்கோட்டை தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கோட்டைக்கு அதிகமாக மக்கள் வந்து செல்லும் பகுதியான பேருந்து நிலையம், பூ மார்க்கெட், யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் வத்தலகுண்டுவில் காந்திநகர் மெயின் ரோடு பேருந்து நிலையம் போன்ற பகுதி முழுவதுமாய் இந்த எடப்பாடிக்கு எதிரான கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது நிலக்கோட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் தேன்மொழி சேகர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த கண்டன போஸ்டரால் திண்டுக்கல் மாவட்டத்திலும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.