பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என துணை முதலமைசச்ர் உதயநிதி தெரிவித்துள்ளாா்.


தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில், “வெல்லும் தமிழ் பெண்கள்” என்ற பெயரில் டெல்டா மண்டல திமுக மகளிர் மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 1.25 லட்சம் பெண்கள் பங்கேற்கும் வகையில் மாநாட்டு திடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, வழிநெடுக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமைச்சர் கே.என்.நேரு முன்னிலை வகிக்க, திமுக துணை பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. தலைமை வகித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டு மேடையில் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து திமுக தலைவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாநாட்டில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,“மாதம் ஒரு மாநாடு நடத்தி கொள்கைகளை பேசும் கட்சி திமுக. பெண்கள் நலனுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் எப்போது வந்தாலும் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவார். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமையை நாடே பார்த்தது. ஆனால் பிரதமர் மோடி மைக்கை நோக்கி பேசாமல் கண்ணாடியை பார்த்து பேசுகிறார் என விமர்சித்தார்.
மேலும், பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்தது பாஜக என குற்றம் சாட்டினார்.
பெண்களின் சொத்துரிமைக்காக பாடுபட்டவர் கலைஞர் என குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், பாஜகவின் நம்பர் 1 முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். புதுப்புது அடிமைகள் வந்தாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது என தெரிவித்தார்.
மேலும், ஒன்றிய அரசின் அடையாளம் பாசிசம். முந்தைய அதிமுக அரசின் அடையாளம் அடிமைத்தனம் என்று துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்தார்.


