2026 தேர்தலில் தமிழ்நாட்டில் திரிபுரா மாடலை செயல்படுத்தும் திட்டத்தோடு இறங்கி இருக்கிறது பாஜக.


வன்முறைகளாலும், வெறுப்பு பிரச்சாரத்தாலும், சூழ்ச்சிகளாலும் இந்தியாவில் நிலைபெற்ற கட்சி பாஜக. அதன் வளர்ச்சி என்பது அடுத்தட்டு மக்களின் உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு குறித்து பேசி வந்ததில்லை இது எல்லாருக்குமே தெரிந்த ஒன்றுதான். பிறகு எப்படி அமித்ஷா, அடுத்து தமிழ்நாடு தான் என்று சூளுரைக்கிறார்?
தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து வித்தியாசமானது என்று சொல்லிக் கொண்டாலும், இங்கும் சாதி என்பது அரசியலில் பிரதானமான ஒன்றாகவே இருக்கிறது. அதை நம்பி தான் பாஜக களம் காணத் தயாராகிறது. கூடுதலாக அது இங்கே திரிபுரா மாடலை செயல்படுத்தும் திட்டத்தோடு இறங்கி இருக்கிறது. இதற்காக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அது கடுமையாக உழைத்து வருகிறது.
அது என்ன திரிபுரா மாடல்?
திரிபுராவில் அசைக்க முடியாத சக்தியாக கம்யூனிஸ்ட் கட்சி தான் ஆட்சியில் இருந்து வந்தது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருந்தது. இவை தவிர பத்துக்கும் மேற்பட்ட சிறிய மாநிலக் கட்சிகளும் இருந்தன. அந்த பத்து சிறிய கட்சிகளோடு சிறிய கட்சியாகத் தான் பாஜக வண்டி ஓட்டிக் கொண்டிருந்தது. (நம்ம ஊரிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாஜகவுக்கு நோட்டா கட்சி என்று பெயர் இருந்ததை பொறுத்தி பார்த்துக் கொள்ளவும்). அப்படி இருந்த பாஜக, மெல்ல மெல்ல அந்த பத்து சிறிய கட்சிகளை ஒருங்கிணைக்கிற முயற்சியில் இறங்கியது. அந்த வேலையை செய்து கொண்டே, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களை உருவி, பாஜவுக்குள் சேர்த்து கட்சிக்கு அங்கே ஒரு முகத்தை வரைந்து கொண்டிருந்தார்கள்.
மானங்கெட்ட தனத்தின் உச்சகட்டமாக, அங்கே தனி மாநிலம் கேட்டு போராடிக் கொண்டிருந்த பூர்வ குடி கட்சியை கூட்டணியில் சேர்த்தது தேசப்பற்று பற்றி ஊருக்கு பாடம் எடுக்கும் பாஜக.. அவர்களைப் பொறுத்தவரை சோறா? மானமா? என்றால் சோறு தானே சொல்வார்கள்?? இப்படி வெட்கத்தை விற்று காங்கிரஸில் இருந்து ஆள் இழுத்து.. மானத்தை விற்று தேச பிரிவினை பேசிய கட்சியோடு கூட்டணி சேர்ந்து.. பத்துக்கும் மேற்பட்ட கட்சிகளை கூட சேர்த்துக் கொண்டு.. கம்யூனிஸ்ட்டுகள் பேசிய தொழிலாளர் நலன் அரசியலை, வளர்ச்சி அரசியலுக்கு எதிரானது என்று சொல்லி ஆயிரக்கணக்கான வாட்ஸ் ஆப் அக்கௌண்டுகளின் வழியாக மக்களுக்குள் ஊடுருவி தான் கம்யூனிஸ்ட்டு கட்சியை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தார்கள்.
இப்போது அதையே தான் தமிழ்நாட்டில் செய்து வருகிறது. அங்கு எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக பத்து கட்சிகளை ஒருங்கிணைத்ததோ, அது போல தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சாதிகளுக்குள்ளும் ஊடுருவி திமுக எதிர்ப்பு பேச வைத்திருக்கிறது. கூடவே, திரிபுராவில் இரண்டாம் இடத்தில் இருந்த காங்கிரஸுக்குள் இருந்து ஆட்களை உருவியதோ அது போல இங்கு இரண்டாம் இடத்தில் இருக்கிற அதிமுக-வை சில்லு சில்லாக சிதைத்து, உடைந்த அத்தனை சில்லுகளையும் இப்போது வரை தங்களது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டுவித்து வருகிறார்கள்.
திரிபுராவில் கட்சி சார்பற்ற வாக்காளர்களாக 15% இருந்ததாக கூறப்படுகிறது. பாஜக அவர்களை நோக்கி வேலை செய்யத் தான் அந்த பத்து கட்சிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் அனைவரையுமே கம்யூனிஸ்ட் எதிர்ப்பு அரசியல் பேச வைத்திருக்கிறார்கள். அதே போலத் தான் இங்கு இருக்கிற பல்வேறு சாதிக் கட்சிகள், தமிழ்த்தேசிய அமைப்புகள் வழியாக திமுக – திராவிட எதிர்ப்பை கூர்தீட்டி வருகிறார்கள்.
அதிமுக – பாமக வாக்குகள் பல முனைகளில் இருந்தாலும் தங்களைத் தாண்டி போகாதவாறு இப்போது வரை பார்த்துக் கொண்டே.. தமிழ்நாட்டில் நடுநிலையாக இருக்கிற வாக்காளர்களை குறிவைத்து நடிகர் விஜய்யை இறக்கி விட்டிருக்கிறார்கள். இந்த நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் திமுக குறித்த வெறுப்பை பரப்புவதற்காக மட்டுமே விஜய் இப்போது வரை பேசி வருவதை நாம் பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
இவற்றோடு கூடுதலாக, மதம் சார்ந்த உணர்வுள்ளோரை ஈர்ப்பதற்காகவும் திருப்பறங்குன்றம், முருகன் போன்ற இந்த மண்ணின் தன்மைக்குள் ஊடுருவுகிற அரசியலையும் முடுக்கி விட்டுள்ளார்கள். திரிபுராவில் வாட்ஸ் ஆப் மூலமாக மக்களுக்குள் ஊடுருவியது போல, இங்கு நூற்றுக் கணக்கான யூடியூப் சேனல்களை உருவாக்கியும், ஃபாலோயர்ஸ் அதிகமாக இருந்த ஆயிரக் கணக்கான பாலியல் முகநூல் பக்கங்களை விலைக்கு வாங்கி, கட்சி ஐடிகளாக மாற்றியும் திமுக வெறுப்பையும், திராவிட இயக்க வெறுப்பையும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
இவை அனைத்தையும் செய்து கொண்டே CBI, ED மூலமாக திமுகவிற்குள் இருக்கிற இரண்டாம் கட்டத் தலைவர்களைக் குறி வைத்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நாடு முழுவதும் மாநிலக் கட்சிகளை அமலாக்கத்துறை வைத்து நோண்டி, நோண்டி கட்சியை உடைத்து, தங்களோடு சேர்த்துக் கொண்டது போல, “இங்கும் எவனாவது மாட்ட மாட்டானா?” என்று…நாக்கை தொங்க போட்டு அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
“அமலாக்கத்துறை வழக்கு போட்டு இதுவரை ஒருவருக்கு கூட தண்டனை பெற்றுக் கொடுத்ததே இல்லை” என்கிற மகா கேவலமான வரலாற்றை வைத்துக் கொண்டே, இன்னும் அமலாக்கத்துறை அட்டாக்கை பாஜக செய்து வருகிறதென்றால் அதன் மானங்கெட்ட தனத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இன மானமும், தன் மானமும் துளியும் இல்லாத அதிமுக, பாமகவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு.. சாதி, மத வெறுப்பரசியலை வளர்த்து.. நடுநிலை வாக்காளர்களை ஏமாற்றி.. அமலாக்கத்துறை என்னும் வெறிநாயை ஏவி எதிர்க்கட்சியை முடக்கி.. ஆட்சியை பிடிக்கத் திட்டம் போடுவதை இவ்வளவு பெருமையாக எல்லாம் சொல்லக் கூடாது அமித் ஷா அவர்களே..அதற்கு வெட்கப்பட வேண்டும்.
தவெக பொதுக்கூட்டம்: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை; திமுகவை நம்பாதீர்கள் – நடிகர் விஜய் உரை!


