தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், புதுச்சேரி உப்பளம் துறைமுக திடலில் இன்று (டிசம்பர் 9, 2025) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு, அவர் திறந்தவெளி அரங்கில் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இதுவாகும். தனது பேச்சில் தமிழகத்தில் ஆளும் திமுக அரசைக் கடுமையாக விமர்சித்தும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உட்பட மத்திய அரசின் அலட்சியத்தைப் பற்றியும் அவர் விரிவாகப் பேசினார்.
உறவு பாலமும் தமிழகம்-புதுச்சேரி பிணைப்பும்:

மத்திய அரசுக்குத் தமிழகம் ஒரு தனி மாநிலமாகவும், புதுச்சேரி ஒரு தனி யூனியன் பிரதேசமாகவும் இருக்கலாம். ஆனால், நமக்கு இடையில் எந்த வேறுபாடும் இல்லை. நாம் எல்லோரும் ஒன்றே, சொந்தங்கள்தான்.
நாம் வேறு வேறு வீடு, மாநிலம், நாட்டில் இருந்தாலும், ஒருவரையொருவர் பார்க்கும்போது ஏற்படும் பாச உணர்வு இருந்தால் போதும்; அதுதான் நமது உறவை உறுதிப்படுத்துகிறது. உலகத்தில் எங்கிருந்தாலும், நம் வகையறா எல்லாரும் ஒன்றுதான், நமது உயிர்தான்.
புதுச்சேரி என்றால், மணக்குள விநாயகர், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா ஆகியவை நினைவுக்கு வரும். அதுமட்டுமல்லாமல், இது மகாகவி பாரதி இருந்த மண், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண்.
1974-லேயே புதுச்சேரியில்தான் எம்ஜிஆர் தலைமையில் (அதிமுகவை குறிப்பிடுகிறார்) ஆட்சி அமைந்தது. அதன் பிறகே, 1977-ல் தமிழகத்தில் அவர் ஆட்சி அமைத்தார். தமிழக மக்கள் எம்ஜிஆரை மிஸ் பண்ணிவிடக் கூடாது என்று நமக்காக அலர்ட் கொடுத்ததே புதுச்சேரிதான்.
தமிழகம் போலவே கிட்டத்தட்ட 30 வருடங்களாக என்னை இங்குள்ள மக்கள் தாங்கிப் பிடித்துள்ளனர். அதனால், இந்த விஜய் தமிழகத்துக்கு மட்டும் தான் குரல் கொடுப்பான் என்று நினைக்காதீர்கள். அது தவறு. புதுச்சேரி மக்களுக்கும் சேர்த்துத்தான் நான் குரல் கொடுப்பேன்; அது என் கடமையும் கூட.
புதுச்சேரி அரசுக்கு நன்றி; திமுகவுக்கு விமர்சனம்:
“இந்த புதுச்சேரி அரசாங்கம் பற்றி சொல்லியாக வேண்டும். இது கட்டாயம் தமிழகத்தில் உள்ள திமுக அரசு மாதிரி கிடையவே கிடையாது.”
வேறொரு அரசியல் கட்சி நடத்துகிற நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு வரும் மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, பாரபட்சமே காட்டாமல் இந்த அரசாங்கம் நடந்து கொள்கிறது. அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சர் ரங்கசாமிக்கும் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதை பார்த்தாவது தமிழகத்தில் இருக்கும் திமுக அரசாங்கம் கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும். ஆனால், அவர்கள் கற்றுக் கொள்ள மாட்டார்கள், பரவாயில்லை. வரப்போகும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக் கொள்வார்கள்; அதை நம்ம மக்கள் பார்த்துக் கொள்வார்கள் (திமுகவை மறைமுகமாகக் குறிப்பார்).
மத்திய அரசின் அலட்சியம் மற்றும் கோரிக்கைகள்:
(கைகளில் இருந்த தாள்களை வாசிக்க ஆரம்பித்தார் விஜய்)
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தாலும், புதுச்சேரியை மத்திய அரசு எதிலும் கண்டு கொள்ளவில்லை என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்றாகவே தெரியும். மாநில அந்தஸ்து கோரிக்கையை மட்டுமா மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை? வளர்ச்சிக்குத் துணை நிற்கவே இல்லை.
மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்டுப் பலமுறை சட்டசபையில் தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இந்த வருஷம் கூட மார்ச் 27-ம் தேதி போடப்பட்ட தீர்மானம், மாநில அந்தஸ்து கேட்டு அனுப்பும் 16-வது தீர்மானம் ஆகும்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள், பல்வேறு தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க மத்திய அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கு எதுவுமே செய்யவில்லை. இங்கே ஒரு ஐ.டி. கம்பெனி உருவாக வேண்டும் என்ற எண்ணமே இல்லை.
ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்ட அமைச்சரின் இடத்துக்கு நியமிக்கப்பட்டவருக்கு 200 நாட்களாகியும் இலாகா தரவில்லை. இந்தச் செயல் சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துவதாக இருப்பதாக அவர்களே சொல்கின்றனர்.
புதுச்சேரியின் முக்கிய அங்கமாக இருக்கும் காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் முன்னேற்றமே இல்லை என்று மக்கள் சொல்கின்றனர். குறிப்பாக, காவிரியின் கடைமடைப் பகுதியான காரைக்காலைக் மொத்தமாக கைவிட்ட மாதிரி இருக்கிறது.
சுற்றுலாத் தலமான புதுச்சேரியில் போதுமான பார்க்கிங் வசதி, போதுமான கழிப்பறை வசதி இல்லை. இதை மேம்படுத்த வேண்டும்.
புதுச்சேரி – கடலூர் மார்க்கமாக ரயில் திட்டம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.
திமுகவுக்கு எச்சரிக்கை:
“புதுச்சேரி மக்களுக்கு ஒண்ணே ஒண்ணு நான் சொல்ல வேண்டும். இந்த திமுகவை நம்பாதீங்க… அவர்களுக்கு உங்களை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் வேலையே.“
நிதி நெருக்கடி மற்றும் தற்சார்புப் பொருளாதாரம்:
கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் வாழும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. இதனால், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப் பகிர்வு அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படுவது இல்லை.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு தோராயமாகவே நிதி விடுவிக்கிறது. அந்த நிதியும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் போன்ற செலவுகளுக்கே சென்று விடுவதால், புதுச்சேரி வெளிச்சந்தையிலும், கடன் பத்திரங்களிலும் கடன் வாங்குகிறது.
இந்த நிலை மாற ஒரே வழி, மாநில அந்தஸ்து மட்டுமே. புதுச்சேரி கடனைக் குறைத்து, தற்சார்பு பொருளாதாரத்தை வளர்த்து எடுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
ரேஷன் கடை மற்றும் மீனவர் பிரச்சனை:
இந்திய அளவில் ரேஷன் கடைகள் இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேஷன் கடைகள்தான். மற்ற மாநிலங்களில் இருப்பது போல அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் என அனைத்துப் பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும்.
மீன் பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்வதுடன் படகுகளையும் பறிமுதல் செய்கிறது. படகுகள் கிடைக்காததால் மீனவர்கள் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும்.
தேர்தல் சபதம்:
“இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்கான எப்பவும் துணை நிற்பான். வரப்போற புதுச்சேரி தேர்தல் களத்தில் நம்ம தவெக கொடி பட்டொளி வீசிப் பறக்கும். நம்பிக்கையாக இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.”
இவ்வாறு தவெக தலைவர் நடிகர் விஜய் தனது உரையை நிறைவு செய்தார்.


