இந்தியாவில் பிறந்த இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்குமா? என்று தமிழச்சி தங்கபாண்டியன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், “இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்த பல்லாயிரக் கணக்கானோர் அகதிகளாக பல்வேறு அகதிகள் முகாமில் உள்ளனர் என்றார்.

கடந்த 1980-களில் கருப்பு ஜூலையின் போது, இலங்கையில் இருந்து வந்து திருச்சி அகதிகள் முகாமில் உள்ள கே.நளினி என்பவருக்கு உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு இதற்கு முன்னர் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதா? இனிமேல் வழங்கும் திட்டம் ஏதேனும் உள்ளதா?” என மத்திய வெளியுறவுத்துறைக்கு தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வீ.முரளீதரன், இந்த விவகாரம் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப் பாண்டியனை பின்னர் சந்தித்து விரிவாக ஆலோசனை செய்வதால் அதனை ஏற்று வழங்கப்படும் என்று மக்களவையில் அவர் உறுதியளித்துள்ளார்.