அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள்- டிடிவி தினகரன்
அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியே ஒப்புக்கொண்டுள்ளார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், “பதவி வெறியால் ஒரு சிலரின் சுய நலத்தால் அ.தி.மு.க தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதை மீண்டும் ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 50,000 மாணவர்கள் எழுதாததற்கு உரிய காரணத்தை அத்துறையின் அமைச்சர் புள்ளி விவரத்துடன் வெளியிட வேண்டும்.
அ.தி.மு.க வில் ஒரு லட்சம் பழனிசாமிக்கள் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி பேசி உள்ளார். அதன் மூலம் அ.தி.மு.க வில் அவரே ஒரு லட்சம் துரோகிகள் இருப்பதாக ஒப்புக்கொண்டு விட்டார். அது சரி தான். பதவி பிழைப்பு, சொந்த பிரச்சினை ஆகியவற்றின் காரணமாக ஒரு சிலர் அ.ம.மு.க விலிருந்து அங்கொன்றும் இங்கொன்றும் கட்சி மாறுகிறார்கள். 2013 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதி ஒருவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்வதை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை எதிர்த்தவர் ராகுல் காந்தி. இன்று அந்த சட்டத்தாலேயே அவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் அவரை பதவி நீக்கம் செய்திருப்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை” என்றார்.