உதயநிதி செய்யும் தவறுகள் முதலமைச்சர் கண்ணுக்கு தெரியவில்லை- வானதி சீனிவாசன்
உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து தவறாக எதுவும் பேசவில்லை என்றும் திரு என்று மரியாதை கொடுத்து தான் பேரவையில் பேசப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய பா.ஜ.க சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று முன் தினம் ஐ.பி.எல் டிக்கெட் குறித்து அமைச்சர் உதயநிதி பேசும் போது ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பெயர் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வேண்டும் என கோரினார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதை ஏன் நீக்க வேணும்? அதில் என்ன தவறு உள்ளது? திரு அமித்ஷா என தான் பேசியுள்ளார். அது என்ன தகாத வார்த்தையா என்றும் தவறு இருந்தால் நானே நீக்க சொல்வேன் எனவும் கூறினார்.
அமித்ஷா பெயர் அவைக்குறிப்பில் இருந்து நீக்காததை கண்டித்து பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்தப்பின் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், அமித்ஷா மற்றும் அவர் மகன் குறித்து கிண்டல் கேலியுடன் உதயநிதி பேசியுள்ளார் என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், அமைச்சர் உதயநிதி செய்யும் தவறுகள் முதலமைச்சர் கண்ணில் தெரியவில்லை. அதை நியாயப்படுத்துகிறார் என்றார்.