தமிழகம் முழுதும், தி.மு.க-வினர் செய்த ஊழல்கள் பற்றி முழு தகவல் திரட்டி ஆதாரங்களுடன் தனக்கு அனுப்பும்படி, தவெக நிர்வாகிகளுக்கு, அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், புகார்களை துறை வாரியாக தொகுத்து, ஆளுநரிடம் கொடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல் மாநாட்டில் பேசிய விஜய், ‘திராவிட மாடல் அரசு என்று கூறிக்கொண்டு, ஒரு குடும்பமே அதிகார துஷ்பிரயோகம் செய்து கொள்ளை அடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியிருந்தார். தமிழகம் முழுதும் தி.மு.க.,வினர் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சம்பாதிப்பதாகவும், த.வெ.க.,வை துவக்குவதற்கு முன், விஜய்க்கு அவரது ரசிகர்களிடம் இருந்து புகார்கள் வந்து கொண்டிருந்தன. சாம்பிளுக்கு சில புகார்களை தேர்வு செய்து, தனியார் புலனாய்வு நிறுவனம் வாயிலாக விசாரிக்க அவர் ஏற்பாடு செய்தார். புகார்கள் உண்மையானவை என்று தெரியவந்ததும், அவற்றை துறை வாரியாக பிரித்து, தேதி வாரியாக தொகுக்க தனி டீம் உருவாக்கினார்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., மேடைக்கு மேடை ஊழல் புகார்களை பேசினாலும், சமூகத்தில் அது தாக்கம் எதையும் ஏற்படுத்தாதது ஏன் என்று, தன் கட்சி நிர்வாகிகளை அழைத்து கேட்டிருக்கிறார். ஸ்டாலின் மீதும், ஓரிரு அமைச்சர்கள் மீதும், அ.தி.மு.க.,வினர் குற்றம் சொல்கின்றனரே தவிர, ஒவ்வொரு ஊரிலும் பொதுமக்களின் கண் முன் நடக்கும் ஊழல்கள், அட்ராசிட்டிகளை ஆதாரப்பூர்வமாக வெளிச்சத்துக்கு கொண்டு வர ஆர்வம் காட்டவில்லை என நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அதை விஜய் ஒப்புக் கொண்டார். தொடர்ந்து நிர்வாகிகளுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தி வந்தார். அதன் விளைவாக, தி.மு.க.,வின் ஊழல்களையும், அத்துமீறல்களையும் தோண்டி எடுத்து அம்பலப்படுத்துவது என்று விஜய் தீர்மானித்தார்.
ஆட்சியிலும், கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தெந்த வழிகளில் முறைகேடு செய்கின்றனர்? பினாமிகள் யார் என்ற விபரங்களை தவறாமல் சேகரிக்க அறிவுறுத்தினார். ஆதாரங்கள் இல்லாமல் புகார்களை அடுக்கினால், வழக்குகள் வரிசைகட்டி வரும் என்றும் நிர்வாகிகளை அவர் எச்சரித்தார்.
அப்படி திரட்டப்படும் ஆதாரங்கள் அடிப்படையில், ஊழல் பட்டியல் தயாரித்து, ஆளுநரை சந்தித்து அளிக்கலாம் என்று விஜய் திட்டமிட்டுள்ளார். https://x.com/Saattaidurai/status/1856234771736867327
மாநாட்டுக்கு பிறகான தன் முதல் அரசியல் நிகழ்வாக இது அமையும் என்றும், பகிரங்கமாக தெரியாமல் தனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்து வரும் ஆளுங்கட்சிக்கு செக் வைக்க உதவும் என்றும் விஜய் கூறியிருக்கிறார். ‘வெறும் அறிக்கை அரசியலை தளபதி விரும்பவில்லை. வாதங்களை விட ஆதாரங்களே பேசும் என்று நம்புகிறார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியலை கவர்னரிடம் எம்.ஜி.ஆர்., வழங்கிய நிகழ்வு, தமிழக அரசியலின் பாதையை மாற்றியது. அதே திருப்பம், 2026க்கு முன் நிகழும்’ என்று, த.வெ.க.,வின் முக்கிய நிர்வாகி குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன், ‘‘ஆமா இவரு பெரிய விஜிலென்ஸ் ஆபிசர். புதுசா வந்து கண்டுபிடிக்க போறாரு ! அந்த ஊழல் பணத்தில் பீஸ்ட் படம் வரைக்கும் சம்பளம் வாங்கும்போது தெரியலையா? பூமர்தனமா இருக்கு ப்ரோ’’ எனத் தெரிவித்துள்ளார். பொதுவாக திமுக எதிர்ப்பை கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் மாநாட்டுக்கு முன்பு விஜய் ஆதரவாளர்களாக இருந்து வந்தனர். அதே நாம் தமிழர் கட்சியினர் இப்போது திமுகவுக்கு எதிராக கிளம்பும் விஜய் மீது விமர்சனம் செய்து வருவது விவாதங்களை கிளப்பி வருகிறது.