சென்னையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா – வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்கள் குவித்தது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி 149 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
227 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 64 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 119 ரன்களும், ரிஷப் பண்ட் 109 ரன்களும் எடுத்தனர்.
515 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி நேற்றைய 3ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் அடித்திருந்தது. அந்த அணியின கேப்டன் ஷாண்டோ 51 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேச அணி இந்தியா வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.முடிவில் வங்கதேச அணி 62.1 ஓவர்களில் 234 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 280 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்திய அஸ்வின் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது.