தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த முறையீட்டு வழக்கில், ஒலிம்பிக் போட்டி முடிவதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என்று சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் 50 கிலே எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிச் சுற்றுவரை முன்னேறியிருந்த நிலையில், திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடையை விட அவர் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாகக் கூறி வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையே வினேஷ் போகத் உடல் நலக்குறைவால் பாரிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அளிக்கப்பட்டது. அவர் மல்யுத்த போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இதனால் நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர்.
இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறைடு செய்தார். அதில் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று வினேஷ் போகத் வலியுறுத்தி இருந்தார். இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக இன்று பிற்பகல் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.
விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, வினேஷ் போகத் மேல் முறையீட்டு மனு மீது பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என்று சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.