பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்று பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 21ஆம் தேதியன்று தொடங்கி நடைபெற்று வந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வங்கதேச அணி 167.3 ஓவர்களில் 565 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. வங்கதேச அணியின் முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்து, இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நலுவ விட்டார். 117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி இன்றைய 5-வது நாள் ஆட்டத்தில் 146 ரன்களில் சுருண்டது.
இதனால் வங்கதேச அணிக்கு 30 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டெஸ்ட் தொ டரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற வங்கதேசம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது