சாம்பியன்ஸ் டிராபி 2025 நடத்தும் பொறுப்பை பாகிஸ்தான் பெற்றிருந்தாலும், அதன் அட்டவணை மற்றும் விளயாடும் இடம் குறித்து சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்திய அரசின் அனுமதி கிடைத்த பிறகே இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்று பிசிசிஐ ஏற்கனவே கூறியிருந்தது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்து வருகிறது. இந்திய அணி இங்கு வரவேண்டும் என பாகிஸ்தான் பிடிவாதமாக உள்ளது.

பாதுகாப்புக் காரணங்களால் இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்ல மறுத்த போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ‘ஹைப்ரிட்’ மாதிரியை நிராகரித்துள்ளது. இதனால் இரு நாட்டு அணிகளுக்கு இடையில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. ஐசிசி வாரியத்தில் உள்ள நிர்வாகிகள் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக இருந்தனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி, தற்போதைய சர்ச்சைக்கு ஒரே தீர்வாக ஹைப்ரிட் மாடலை ஏற்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஹைபிரிட் மாடல் ஏற்றுக்கொள்ளப்பட்டால், இந்தியா தனது சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடும்.
போட்டி ஒத்திவைக்கப்பட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பல கோடி இழப்பு ஏற்படுவது உறுதி. முதலில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் போட்டியை நடத்த கட்டணமான 60 லட்சம் டாலர்களை (ரூ. 50.73 கோடி) இழக்க வேண்டும். இது பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியத்தின் ஆண்டு வருமானத்தில் சுமார் $350 லட்சம் (தோராயமாக ரூ. 296 கோடி) குறையவும் வழிவகுக்கும்.
ஐசிசி வட்டாரம் இதுகுறித்து கூறுகையில், ‘இந்தியா பங்கேற்காத எந்தவொரு ஐசிசி போட்டிக்கும் எந்த ஒளிபரப்பாளரும் பணம் செலுத்த மாட்டார்கள். இது பாகிஸ்தானுக்கு நன்றாகவே தெரியும். ஹைபிரிட் மாடலுக்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்ட பிறகுதான் ஐசிசி கூட்டம் நடைபெறும். ஹைப்ரிட் மாடலை பாகிஸ்தான் ஏற்கவில்லை என்றால், சாம்பியன்ஸ் டிராபியை வேறு நாட்டில் நடத்தலாம், அதில் பாகிஸ்தான் இடம்பெறாது’’ என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.