Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக மாநாடு: மீண்டும் மீண்டும் வலியுறுத்திய விஜய்.. சிறிதும் மதிக்காத தொண்டர்கள்..

தவெக மாநாடு: மீண்டும் மீண்டும் வலியுறுத்திய விஜய்.. சிறிதும் மதிக்காத தொண்டர்கள்..

-

.

தவெக மாநாடு குறித்த எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்தாலும், தலைமையின் உத்தரவுகளை மதிக்காத  அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களின் செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   

தவெக மாநாடு

கடந்த ஒரு வாரமாகவே நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகளில் ஒன்றாக இருப்பது தவெக மாநாடு என்பதுதான். இந்த மாநாட்டிற்காக மிக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விஜய் நேரடியாகவே பல அறிவுறுத்தல்களை கடிதம் வாயிலாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக கர்ப்பிணிகள், வயதானவர்கள், சிறுவர் சிறுமிகள், பள்ளி மாணவர்கள் மாநாட்டுக்கு வரவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும், இருசக்கர வாகனத்தில் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார். மாநாட்டுக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது என்றும், அனைவரும் சாப்பிட்டுவிட்டு மாநாட்டுக்கு வருமாறும் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தவெக மாநாடு

ஆனால் இத்தனை உத்தரவுகளையும், ஏற்பாடுகளையும் அக்கட்சித் தொண்டர்கள் நாசம் செய்து வருகின்றனர். கட்சித் தலைவரின் உத்தரவுகளையும், கோரிக்கைகளையும் மதிக்காமல் ஒவ்வொரு செயலையும் செய்து வருகின்றனர். குழந்தைகளை அழைத்துவர வேண்டாம் என அறிவுறுத்திய இடத்தில், இடுப்பில் குழந்தை, கையில் குழந்தை, தோளில் குழந்தைகளை சுமந்திகொண்டு குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர். பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ளன் வேண்டும் என படித்துப் படித்துச் சொல்லியும் இரவு முதல் காலைக்குள்ளாக 14 விபத்துகள் நேர்ந்துள்ளன. அனைவரும் மாநாட்டுக்கு வரும்போது விபத்தில் சிக்கியவர்கள்.

TVK Maanadu

 

இதில் இன்று காலை சென்னை பெரியமேடு பகுதியில் இருந்து பைக்கில் சென்ற இளைஞர்கள் மணல் லாரி மீது மோதி விபத்தில் சிக்கினர். இதில் ஒரு இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சென்னை தாம்பரத்தில் இருந்து ரயிலில் மாநாட்டுக்கு வந்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார். மாநாட்டு திடலை பார்ப்பதற்காக ரயிலில் இருந்த இளைஞர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் அந்த இளைஞர் கீழே தவறி விழுந்திருக்கிறார்.

tvk maanadu

மாநாட்டுக்கு வருபவர்கள் மது அருந்திவிட்டு வரக்கூடாது என அறிவுறுத்தியும், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி மதுபாட்டில்களை வாங்கி வாகனத்தை ஏற்றிவைக்கும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இன்னும் ஒரு படி மேலாக மாநாடு திடல் அமைந்துள்ள இடத்திலேயே ஒருவர் வகை வகையான சிகரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விற்பனையில் இறங்கிவிட்டார். தொண்டர்களும், ரசிகர்களும் தலைவரின் வேண்டுகோளை மதிக்காமல் சிகரெட்டுகளை வாங்கி புகைத்து வருகின்றனர்.

தவெக மாநாட்டில் சிகரெட் விற்பனை

2 மணிக்கு மேல்தான் மாநாட்டு அனுமதி என்றும், அனைவரும் உணவு அருந்திவிட்டு வர வேண்டும் என்றும் பல முறை அறிவுறுத்தியும், இரவு முதலே குவியத்தொடங்கிய தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் இன்று அதிகாலை தடுப்புகளை உடைத்துக்கொண்டு மாநாட்டுத் திடலுக்குள் நுழைந்துவிட்டனர். போட்டிபோட்டு முண்டியடித்துக்கொண்டு பெண்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த முன் அரங்குகளிலில் இருக்கைகளை பிடித்து அமர்துகொண்டனர்.. தடுப்புகளை தாண்டி, விஜய்க்காக அமைக்கப்பட்டிருந்த ரேம்ப் வாக் மேடை மீது ஏறுவது என அடாவடிச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உணவு விநியோகம் இல்லை என தெளிவாக அறிவுறுத்தியும், மாலை 4 மணிக்கு மேல் நடக்கப்போகும் மாநாட்டுக்கு காலை முதலே வெளியில் காத்துக்கிடக்கும் பலரும் உணவு இன்றி மயக்கமடையும் சூழல் ஏற்படலாம்.

இப்படியாக கட்சியின் முதல் மாநாட்டில் தலைவரின் வேண்டுகோளையும் , கோரிக்கைகளையும் துளியும் மதிக்காமல் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சிறப்பான சம்பவங்களை செய்து வருகின்றனர். இன்று இரவு மாநாடு முடிவதற்குள் என்னென்ன நடக்கப்போகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

 

 

 

 

MUST READ