ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்படுபவரும், ஆயுள் தண்டனை சிறைவாசியுமான நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி அவரது வீட்டின் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ராகேந்திரன், பொன்னை பாலு உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வரும் நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிகன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் ஆயுள் தண்டணை கைதியும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் இன்று உயிரிழந்தார். கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நிலை மோசமானதை அடுத்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் இன்று காலை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.