நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் வரவிருக்கும் முக்கிய மசோதாக்கள் மற்றும் டெல்லி தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில், காங்கிரஸ் கூட்டணியைச் சார்ந்து நிற்காமல், தங்களுடைய சொந்தக் கொள்கை வழியிலேயே பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) எதிர்க்க திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) முழுத் துணிவு உள்ளது என்று திராவிட வெற்றி கழகத்தின் முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் திமுகவின் 22 எம்.பி.க்களின் நிலைப்பாடு மற்றும் ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் மாற்றங்கள் குறித்து அதிரடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அண்ணா என்ற வலிய படைகலன்
”பாஜகவின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் ஆபத்து நேர்ந்தால் திமுக தனது எதிர்ப்பை டெல்லியில் தொடர்ந்து பதிவு செய்யும். டெல்லியோடு யுத்தம் செய்யவும், அங்குள்ள அதிகார மையத்தை நெறிப்படுத்தவும் திமுக அனுப்பியுள்ள வலிய படைகலனின் பெயர்தான் ‘அண்ணா’. நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா, ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன் போன்ற வலிமையான தலைவர்கள் மூலமாகத் திமுகவின் கொள்கை முழக்கம் எதிரொலிக்கும்” என்று வல்லம் பஷீர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் இன்றி பாஜகவை எதிர்ப்போம்
காங்கிரஸ் அல்லது ‘இந்தியா’ கூட்டணியோடு இணைந்து நின்றுதான் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் திமுகவுக்கு இல்லை என்று குறிப்பிட்ட அவர், கடந்த கால நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டினார். ”சிஏஏ (CAA) சட்டத்திற்கு எதிராகக் காங்கிரஸ் காட்டிய எதிர்ப்பை விட, திமுக காட்டிய எதிர்ப்பு மிகவும் மூர்க்கமானது. அதேபோல, ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட போது, இரு அவைகளையும் முடக்கி, அவர் மீண்டும் அவைக்குள் நுழைவதற்கான களத்தை உருவாக்கியது திமுகதான்.
சமீபத்தில், வெளிநாட்டில் இருந்தபடி தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணையவழியில் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நாம் காங்கிரஸோடு சேர்ந்து நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை; அதே நேரத்தில், பாஜகவின் எந்த ஒரு விவகாரத்தையும் நம்முடைய கொள்கை வழியிலேயே அணுகுவோம்’ என்று எம்பிக்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன் மூலம் திமுக தனது நிலைப்பாட்டில் எவ்வளவு உறுதியாக உள்ளது என்பது தெளிவாகிறது” என்றார்.
தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல்
டெல்லி தொகுதி மறுவரையறை (Delimitation) மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election) ஆகிய விவகாரங்களில் திமுகவின் நிலைப்பாடு குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “தொகுதி மறுவரையறைச் சட்டம் கொண்டுவரப்பட்டு வட மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், அது தென் மாநிலங்களைப் புறக்கணித்துவிட்டு டெல்லியில் நிரந்தரமாக பாஜக கோலோச்சுவதற்கே வழிவகுக்கும். ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்ற அண்ணாவின் முழக்கத்தின்படி, தெற்கைப் புறக்கணிக்கும் எந்த ஒரு சட்டத்தையும் திமுக ஆதரிக்காது.
அதேபோல, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிராகத் திமுக தனது பொதுக்குழுவிலேயே தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுகவின் சித்தாந்தமும் கொள்கை நிலைப்பாடும் ஒன்றாகவே இருக்கும். இடதுசாரி பத்திரிகையாளர்களும், சில தலைவர்களும் திமுக மீது வீண் சந்தேகங்களை எழுப்புகிறார்கள். திமுக இதுவரை எந்தவொரு கொள்கைத் தவறையும் செய்யவில்லை, இனிமேலும் செய்யாது. அதிகாரத்திற்காகவோ, ஆசைக்காகவோ, காங்கிரஸ் அல்லது இடதுசாரிக் கூட்டணிக்காகவோ திமுக தங்களின் தத்துவங்களை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. தங்களின் தனித்துவமான சித்தாந்தத்தை இந்த மண்ணில் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உறுதியாக நிற்கிறது” என்று வல்லம் பஷீர் அந்த நேர்காணலில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
