சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி
வாணியம்பாடி அருகே பள்ளிக்கு சாலை அமைக்க தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் தேங்கி நின்ற மழை நீரில் மூழ்கி இரண்டு பள்ளி மாணவிகள் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிக்கனாங்குப்பம் கிராமம், ராசன் வட்டம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கோவிந்தராஜ். இவரது மகள் மோனிகா (வயது 10), அதே பகுதியில் உள்ள துவக்கப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வேலு என்பவரின் மகள் ராஜலட்சுமி (வயது13) அரசு உயர் நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் சிக்கனாங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சாலை அமைக்க பள்ளி அருகில் 10 அடி ஆழத்திற்கும்,25 அடி நீளத்திற்கு பள்ளம் தோண்டி மண் எடுக்கப்பட்டு இருந்தது. கடந்த சில தினங்களாக பெய்த கன மழை காரணமாக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்று மாணவிகள் பின்னர் பள்ளி வளாகம் அருகில் சாலைக்காக மன் எடுக்க தோண்டப்பட்டு குழியில் இருந்த மழை நீரில் விளையாடியுள்ளார். எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் முழுகியதால் உடன் சென்ற ராஜலட்சுமி தம்பி மணிவேல் கூச்சிலிட்டுள்ளார். அவருடைய கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று இரு மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்தவர்கள் இரு மாணவிகளும் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அம்பலூர் காவல்துறையினர் இரண்டு பள்ளி மாணவிகளின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அம்பலூர் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.