அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் ரூ.62 லட்சம் ஏமாற்றியதாக தம்பதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(45). ஓட்டுநராக வேலை செய்து வரும் இடரிடம் கபாலி – செல்வி தம்பதி நட்பாக அறிமுகமாகியுள்ளனர். பின்னர் அவரிடம் தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமி (எ) கவிராஜ் என்பவர் காவல்துறையில் SI ஆக பணிபுரிவதாகவும், அவர் மூலம் காவல்துறையில் டிரைவர் வேலை வாங்கிதருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் அதற்கு ரூ.5 இலட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதன்படியே லோகநாதனும் பணம் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி லோகநாதனுக்கு தெரிந்த மேலும் 19 நபர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் ஆயுதப்படை (AR) வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.57 இலட்சமும் என மொத்தம் ரூ.62 இலட்சத்தை பெற்றுக்கொண்ட அவர்கல், போலியான பணி நியமன ஆணைகளை கொடுத்து அனைவரையும் ஏமாற்றியுள்ளனர்.
பின்னர் இதனையறிந்த லோகநாதன் கடந்த 16.07.2025 அன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு உதவி ஆணையர் வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் சென்னையை சேர்ந்த கபாலி ,செல்வி தம்பதி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமி (எ) கவிராஜ் ஆகிய மூவரும் 19 பேரிடம் ரூ. 62 லட்சத்தை பெற்றது உறுதியானதோடு, மேலும் பல நபர்களிடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் வேலை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறையில் டிரைவர் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதனையடுத்து குற்றவாளிகளான கபாலி(53) அவரது மனைவி செல்வி(45) ஆகியோரை சென்னையிலும் கருப்பசாமி @ கவிராஜ்(45) என்பவரை தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து போலியான பணி நியமன ஆணைகள், காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் எடுக்கப்பட்ட போலியான புகைப்படங்கள் மற்றும் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.