உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற சிதம்பரத்தை சேர்ந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்கள் ஓரிரு நாளில் தமிழ்நாடு திரும்ப உள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகர்ண்ட் மாநிலம் ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற சிதம்பரத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தாவாகாட் பகுதியின் அருகில் சிக்கித் தவித்தனர். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்புகொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். அதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகம், உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் காயம் ஏதுமின்றி அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முகாம் அலுவலகத்திலிருந்து உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம் அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். யாத்திரை சென்ற தமிழர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சருக்கு, தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிலையில், உத்தரகாண்ட் அரசால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டு, முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அனைவரும் தர்சுலா என்ற நகரத்திற்கு அழைத்து வரப்படுவதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மேலும் மீட்கப்பட்ட பயணிகள் அங்கே ஓரிரு நாட்கள் தங்கி பின்னர் புதுடெல்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.