கடந்த அக்டோபர் மாதத்தில் 90.83 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90,83,996 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84.63 லட்சம் பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகளும், மார்ச் மாதத்தில் 86.82 லட்சம் பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பயணிகளும், மே மாதத்தில் 84.21 லட்சம் பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் மேற்கொண்டனர்.

இதேபோல், ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகளும், ஜூலை மாதத்தில் 95.35 லட்சம் பயணிகளும், ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகளும் மற்றும் செப்டம்பர் மாதத்தில் 92.77 லட்சம் பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் தேதி அன்று 4 லட்சத்து 42 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 28.88 லட்சம் பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 4,287 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,400 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40.75 லட்சம் பயணிகள், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி 20.50 லட்சம் பயணிகள் மற்றும் Airshow Event Manual Passenger Entry @ அரசினர் தோட்டம் மெட்ரோ 59,776 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.