தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடைய என்.ஓ.சி வலியுறுத்தாமல் வழங்கப்படும் என பெரம்பூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


சென்னை பெரம்பூர் டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் திமுக சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா – 2025 நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டி வாழ்த்துக்களை பரிமாறி விழா சிறப்புரை ஆற்றினார்.அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- எங்கும் அன்பு நிறைந்திடவும் சகோதரத்துவம் தலைத்திடவும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடும் வேளையில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2 நாட்களுக்கு முன் நான் பங்கேற்ற கிறிஸ்துமஸ் பெரு விழாவின் மகிழ்ச்சியை இரண்டு மடங்காக ஆக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியை திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நான்கரை ஆண்டுகளில் 3,927 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்து சாதித்திருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு. தமிழ்நாட்டின் சமத்துவத்தின் அடையாளமாக சகோதரத்துவத்தின் அடையாளமாக நடைபெறும் நிகழ்வை அனைத்து சிறுபான்மையினர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். கல்விக்காக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் நலன் கருதி சென்னை, கோவை மாவட்டங்களில் 130 மாணவர்கள் பயனடையும் வகையில் விடுதிகள் தொடங்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மாணவர்கள் பயன்படும் வகையில் விடுதிகளில் நூலகங்கள், விளையாட்டு கருவிகள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையின பெண்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் முன்னேற்ற 1000 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளது. சென்னையில் உள்ள அடக்கஸ்தலங்களின் அடக்கம் செய்ய உள்ள விதிமுறைகளை தளர்த்தி கல்லறை தோட்டக்கலை புனரமைத்துள்ளோம். பல நலத்திட்டங்கள் செய்துள்ளோம். இனியும் செய்வோம் செய்வோம். மாணவிகளின் இடைநிற்றலை தவிர்க்க 1 லட்சத்து 3 ஆயிரம் மாணவிகளுக்கு 6.57 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். சிறுபான்மையினர் நடத்தக்கூடிய 456 கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்து சான்றிதழ் வழங்கியுள்ளோம்.
2019 – 2024 வரை செயல்பட்டுக் கொண்டிருக்கக் கூடிய, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிமுறைகள்-2019ன்படி, மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு மாவட்ட ஆட்சியருடைய என்.ஓ.சி வலியுறுத்தாமல் வழங்கப்படும். இந்த காலத்தில் திட்டங்களுக்காக அனுமதிக்காக விண்ணப்பித்துள்ள மதச்சார்புள்ள கட்டிடங்களுக்கு இது பொருந்தும். சகோதரத்துவத்துடன் நன்மை மட்டும் நினைக்கும் மக்கள் ஒன்றாக இருக்கும்பொழுது, எந்த பாசிச சக்தியாலும் ஒன்றும் செய்ய முடியாது. உங்களுக்கு துணையாக மதச்சார்பற்ற திமுக உறுதுணையாக இருக்கும். என்றைக்கும் நீங்கள் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, 3000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


